ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நடத்திய இலவச கண் மருத்துவ முகாமில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களில் 12 பேர், கண்களில் நோய்த் தொற்று ஏற்பட்டு, பார்வை பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் தீவிர சிகிச்சைக்காக சென்னை சங்கர நேத்ராலய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாலும், இவர்களில் 4 பேரின் கண்களில் நோய்த்தொற்று மிக அதிகமாக இருந்ததால், உயிரைக் காப்பாற்ற அவர்களது கண்களை அகற்றுவதைத் தவிர வேறுவழியில்லை என அகற்றப்பட்டது.
விழிப் படல மாற்றுச் சிகிச்சை முதலாக, கண்புரை அகற்றும் சிகிச்சை வரையிலும் கண் மருத்துவமனைகளில் எப்போதும் ஒரு கண்ணுக்கு மட்டும்தான் சிகிச்சை அளிக்கப்படும். திரைப்படங்களில் காட்டப்படுவதைப்போல இரண்டு கண்களிலும் கண் அறுவைச் சிகிச்சை செய்து, இரண்டு கண் கட்டுகளும் ஒரே நேரத்தில் பிரிக்கப்படும் அபத்தங்கள் உலகின் எந்தக் கண் மருத்துவமனையிலும் நடப்பதில்லை என்பதால், இந்த 4 பேரும் தங்களது ஒரு கண்ணை மட்டுமே இழந்துள்ளனர். மற்ற கண்களின் புரையை தரமான மருத்துவமனைகளில் நீக்கி, பார்வையை எளிதில் பெற முடியும் என்பது நம் மனதுக்கு ஆறுதல் தருகிறது.
மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேருக்கு மீண்டும் பார்வை கிடைத்துவிடும். இன்னும் 2 பேருக்கு ஓரளவு பார்வை கிடைக்கச் செய்ய இயலும் என்று சங்கர நேத்ராலய நிறுவனர் டாக்டர் பத்ரிநாத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோய்த் தொற்றுக்குக் காரணமான பாக்டீரியாவை அடையாளம் கண்டுள்ள சங்கர நேத்ராலய, தனது ஆய்வுக் கூடத்திலேயே இந்த பாக்டீரியாவின் மரபீனி (டிஎன்ஏ) அமைப்பைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், இந்த பாக்டீரியாவால் தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்கிற மருத்துவச் சிகிச்சைகளை முறைப்படுத்தி, அனைத்து மருத்துவர்களும் பயன்பெற முடியும்.
இதேபோன்ற சம்பவம் ஓர் ஆண்டுக்கு முன்பு திருச்சியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையிலும் நிகழ்ந்தது. சிலர் பார்வை இழந்தனர். மற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தக் கண் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். ஆனால் காலம் நம் ஞாபகத்தை மூடி மறைத்துவிட்டது. தற்போது நெல்லூரில் நடைபெற்றுள்ளதால் மீண்டும் இப்போது நம் கண்களை இவர்களின் கண்கள் திறந்துள்ளன.
இந்தச் சம்பவங்களிலும் பொதுவான ஒரு விஷயம், இவை இலவச மருத்துவ முகாம்களில் தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு நிகழ்ந்தவை என்பதுதான். அதற்காக, நோயாளிகளைத் தேடிப் போய், கண்களைச் சோதித்து அவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம், இலவச கண்புரை அகற்றம், அதன் பின்னர் கண்ணாடி அனைத்தும் வழங்கும் இத்தகைய கண் சிகிச்சை முகாம்களின் சேவையைக் குறைத்து மதிப்பிடுவதும் சரியாக இருக்காது. இத்தகைய முகாம்கள் நடக்காவிட்டால், பல குடும்பங்களில் பார்வை இருண்டவர்கள் நிறையப் பேராக இருப்பார்கள்.
அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய இந்த நோய்த்தொற்றுக்குக் காரணம் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் என்றும் சொல்வதற்கில்லை. மருத்துவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், இத்தகைய இலவச அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவர்கள் கையாளும் கருவிகள், மருந்துகள், சிகிச்சையின்போது கண்களைக் கழுவும் மருத்துவ நீர், புரையை அகற்றியவுடன் பொருத்தப்படும் இன்ட்ரா ஆக்குலர் லென்ஸ் (ஐ.ஓ.எல்.) எல்லாவற்றிலும் தரத்தைக் குறைத்துச் செலவை ஈடுகட்ட (அல்லது லாபத்தை பெருக்கிக்கொள்ள) முயற்சிக்கும்போதுதான் இத்தகைய விபரீதங்கள் நடந்துவிடுகின்றன. அதுதான் உண்மை.
இலவச மருத்துவச் சிகிச்சை என்று சொல்லப்படும் இந்தக் கண் மருத்துவச் சிகிச்சைகள் 99 சதவீதம் அரசு அல்லது ஏதாவொரு உள்நாடு அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புகளால் நிதி பெறுகின்றன. இவர்கள் கொடுக்கும் தொகையிலேயே மருத்துவமனைக்கு ஓரளவு வருவாய் கிடைக்கும் வகையில்தான் தருகிறார்கள். இருப்பினும் ஒரு சில கண் மருத்துவமனைகள், இந்தச் சேவையிலும் அதிக லாபம் பார்க்கக் கருதும்போது, மருந்துகள், செயற்கை லென்ஸ் எல்லாவற்றிலும் விலை மலிவான, தரம் குறைந்த பொருள்களுக்கு மாறுகின்றன.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும் என்றால், சில நடவடிக்கைகளை அரசு-எந்த மாநிலமானாலும்-மேற்கொள்வது அவசியம். ஒவ்வொரு தரமான கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு என்ன செலவாகிறது; அதற்காக தன்னார்வ அமைப்புகள் வழங்கும் தொகை எவ்வளவு? அந்தத் தொகை தரமான சிகிச்சைக்குப் போதுமானதா? தரமான மருந்துகள், என்னென்ன லென்ஸýகள் சந்தையில் உள்ளன, இவற்றை மட்டுமே மருத்துவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை அரசு கண்டறிய வேண்டும். அறுவைச் சிகிச்சை அரங்கம் தூய்மைக்குச் சான்றுகள் பெறச் செய்தல் வேண்டும்.
மேலும், மருந்துக் கம்பெனிகள் அனைத்தும் சுகாதாரமான உற்பத்தி முறையை (Good Manufacturing Practice) கையாளுகின்றனவா என்று மருந்து வாங்கும் மருத்துவமனைகளால் அறியமுடிவதில்லை. மருந்து நிறுவனத்தின் பெயரை வைத்து நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யத்தான் முடிகிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு நடத்தி, சுகாதாரமான உற்பத்தி முறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் குறித்த பட்டியலை அரசு வெளியிட்டால் மருத்துவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
இத்தகைய சம்பவங்களால் சிலர் பார்வை இழந்தவுடன் அரசாங்கம் இழப்பீடு வழங்குவதைக் காட்டிலும் மிக முக்கியமானது இத்தகைய நடைமுறைகளும் அவற்றை நடைமுறைப்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிப்பதும்தான், மருத்துவருக்கும் மருத்துவமனைக்கும் மட்டுமல்ல, மக்களுக்கும் அதுவே பயன் தரும்.
நன்றி : தினமணி
Sunday, November 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment