Friday, August 21, 2009

தேர்தலும் துப்பாக்கிகளும்!

தலிபான்களின் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். மனித உரிமைகள் பேருக்குக்கூடக் கிடையாது. அரசை எதிர்த்து யாரும் வாய்திறக்க முடியாது. அடக்குமுறையே சட்டமாக இருந்தது. 10 ஆண்டுகள்வரை நீடித்த இந்த நிலைக்கு எதிராக யாரும் வெகுண்டு எழவில்லை. 2001-ல் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதும், ஆப்கனில் தலிபான்களின் அடக்குமுறைக்கு முடிவுகட்ட வேண்டும் என்கிற "பொதுநல' ஆவேசம் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் வந்தது.

ஆப்கானிஸ்தானைத் தாக்குவதற்கு அமெரிக்காவுக்கு நேரடிக் காரணம் இருந்தது. ஆனால் பிரிட்டனுக்கு அப்படி ஏதும் இருக்கவில்லை. போர் என்றால் ஏதாவது காரணம் வேண்டுமே? அதனால், ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகளை நிலை நாட்டப் போகிறோம்; பெண்ணடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என்று கூறி அமெரிக்காவுக்கு டோனி பிளேர் ஆதரவு தெரிவித்தார். மேற்கத்தியச் சிந்தனை கொண்டவராகக் கருதப்படும் ஹமீத் கர்சாயிடம் நாட்டின் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

எட்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. தலிபான்களுக்கு மாற்றாக யார், கருதப்பட்டாரோ, அந்த அதிபர் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார். கணவனைக் கேட்காமல் பெண்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது; கணவனின் தாம்பத்ய விருப்பத்துக்கு இணங்காத பெண்களுக்கு சாப்பாடு போட வேண்டிய அவசியமில்லை என்றது அந்தச் சட்டம். பெண்கள் வேலைக்குப் போவதென்பது கணவனின் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டது. குழந்தைகள் மீது பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை. குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும், கணவனுக்குப் பிடிக்கும் விதத்தில் அவர்களை வளர்ப்பதுமே பெண்களின் பணி. இதில் உரிமை எடுத்துக் கொள்வதற்கு இடமேயில்லை என அந்தச் சட்டம் சொன்னது.

சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியதும் சட்டத்தைப் படித்துப் பார்க்காமலேயே கையெழுத்திட்டுவிட்டதாக மழுப்பினார் கர்சாய். இப்போது அதே சட்டம் சிறிய மாறுதல்களுடன் மீண்டும் அமலுக்கு வந்திருக்கிறது. மத அடிப்படைவாத வாக்கு வங்கியைக் கவருவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படுகிறது. நிலைமை இப்படியிருக்க, தலிபான்களின் ஆதிக்கத்திலிருந்து ஆப்கானிஸ்தான் விடுபட்டுவிட்டது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

இப்படி ஆனதற்குக் காரணம் அமெரிக்காவும் பிரிட்டனும்தான். தலிபான்களின் ஒத்துழைப்புடன் நாட்டை ஜனநாயகப் பாதைக்குத் திருப்பப் போகிறோம் என்று கூறி, பயங்கரவாதத் தலைவர்களையும், போர்க் குற்றவாளிகளையும் உயர் பதவியில் அமெரிக்கா அமர்த்தியது. அதனால்தான், ஆட்சி நிர்வாகத்திலும் சட்டங்களிலும் மத அடிப்படைவாதம் புகுத்தப்படுகிறது.

இப்படியான சூழலில் ஆப்கானிஸ்தானில் இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. 2001-ம் ஆண்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் நடக்கும் இரண்டாவது அதிபர் தேர்தல் இது. 2004-ம் ஆண்டு அமலுக்கு வந்த அரசியல் சட்டப்படி ஒருவர் இரண்டுமுறை மட்டுமே அதிபராகப் பதவி வகிக்க முடியும். அந்தச் சட்டம் வருவதற்கு முன்னரே கர்சாய் அதிபராக இருந்தார் என்பதால், இது அவருக்கு மூன்றாவது முறை.

இந்தத் தேர்தலில் 30-க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். சுயேச்சையாகப் போட்டியிடும் கர்சாய் தவிர, முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அப்துல்லாவும், அஷ்ரப் கனியும் முக்கியப் போட்டியாளர்கள்.

பெரும்பாலான நாடுகளைப் போலவே, இரண்டு சுற்று வாக்குப் பதிவைக் கொண்டது அதிபர் தேர்தல். முதல் சுற்றில் யாருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை எனில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடும் இரண்டாவது சுற்று வாக்குப் பதிவு நடைபெறும்.

தேர்தல் என்றாலே பண பலத்துடனும் அரசு ஊழியர்களின் துணையுடனும் நடத்தப்படும் மாபெரும் மோசடி என்னும் கருத்து இன்றைய மக்கள் மனங்களில் வேரூன்றியிருக்கிறது. இந்த விஷயத்தில் வளர்ந்த மற்றும் வளர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளுக்கு சற்றும் சளைத்ததல்ல ஆப்கானிஸ்தான். வாக்காளர் அடையாள அட்டைகள் 10 டாலர் விலையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுவதாக பிபிசி புலனாய்வில் தெரியவந்திருக்கிறது. கிராமப்புறங்களில் குட்டித் தலைவர்கள் மூலமாக வாக்கு வர்த்தகம் நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அரசு ஊழியர்களும், அரசு ஊடகங்களும் கர்சாய்க்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபடுவதாக பிற வேட்பாளர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

அதிபர் தேர்தலுக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என தலிபான்கள் அறிவித்திருக்கின்றனர். அதற்கு முன்னோட்டமாக காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆங்காங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மொத்த வாக்குச் சாவடிகளில் 30 சதவீதத்துக்கும் மேலானவை தலிபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் இருப்பதால், அங்கெல்லாம் தேர்தல் அமைதியாக நடக்கும் என எதிர்பார்க்க முடியாது.

ஒருவருக்கே ஒன்றுக்கு மேற்பட்ட அடையாள அட்டைகளை வழங்குவது, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபடுவது போன்ற வழக்கமான குழப்பங்களும் உண்டு.

இத்தனை சிக்கல்களுக்கும் மத்தியில், முன்பு இருந்ததைவிட கருத்துச் சுதந்திரம் மேம்பட்டிருப்பதும், ஊடகங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதும் முழுமையான ஜனநாயகம் மலர்வதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. பெண்ணடிமை முழுமையாக ஒழிக்கப்படாவிட்டாலும், முக்கிய பதவிகளுக்குப் பெண்கள் வந்திருப்பது பெரிய முன்னேற்றம்தான்.

என்னதான் முறைகேடுகள் நடந்தாலும், பயங்கரவாதம் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு சுயாட்சி மலர்வதில் இந்த அதிபர் தேர்தல்கூட முக்கிய பங்காற்றத்தான் போகிறது.
கட்டுரையாளர் : பூலியன்
நன்றி : தினமணி

No comments: