Thursday, August 6, 2009

அம்பானி சகோதரர்களிடையே என்ன சண்டை ?

உலகின் மிகப்பெரிய பணக்கார சகோதரர்கள் என்று முகேஷ் அம்பானியையும் அவர் சகோதரர் அனில் அம்பானியையும் தான் சொல்கிறார்கள். சொத்து குறித்து அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் அவர்கள் இருவரும் இப்போது மீண்டும் சண்டை போட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த தடவை அது, எரிவாயுவை எப்படி பிரித்துக்கொள்வது என்பதில் நடக்கிறது. ஆந்திராவில் இருக்கும் கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப்படுகையில் இயற்கை எரிவாயு இருக்கிறது என்பதை 2002ல் கண்டுபிடித்த ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், அதனை எடுத்து விற்பனை செய்ய உரிமையை பெற்று, 2009 ஏப்ரலில் இருந்து எரிவாயுவை எடுத்து வருகிறது.
ஆரம்பத்தில் நாள் ஒன்றுக்கு 10 எம்எம்எஸ்சிஎம் ( மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் ) எரிவாயு அங்கு கிடைக்கும் என்றும், பின்னர் அது 40 எம்எம்எஸ்சிஎம் எரிவாயுவாக உயரும் என்றும், பின்னர் அது அதிகபட்சமாக 120 எம்எம்எஸ்சிஎம் எரிவாயுவாக அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது இதில் பிரச்னை என்னவென்றால் 2005ல் அம்பானி சகோததர்கள் சொத்துக்களை பிரித்துக்கொண்டார்கள். அதில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட் முகேஷ் அம்பானிக்கு சொந்தமாகி விட்டது.
ஆனால் சொத்தை பிரிக்கும் போது, கிருஷ்ணா கோதாவரி ஆற்று படுகையில் ( கேஜி - டி6 பேசின் ) கிடைக்கும் இயற்கை எரிவாயுவை எப்படி பிரித்துக்கொள்வது என்றும் இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதன்படி, அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நேச்சரல் ரிசோர்சஸ் லிமிடெட்டுக்கு ( ஆர்என்ஆர்எல் ), ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுவை சப்ளை செய்ய வேண்டும் என்றும், அதை ஒரு மில்லியன் கியூபிக் மீட்டருக்கு 2.34 டாலர் என்ற விலையில் 17 வருடங்களுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்றும் ஒப்பந்தம் ஆகி இருந்தது. ஆனால் மத்திய அரசோ, கேஜி டி 6 பேசினில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை யாருக்கு விற்றாலும் அதற்கு விலை, ஒரு மில்லியன் கியூபிக் மீட்டருக்கு 4.20 டாலர் தான் என்று 2006 ல் நிர்ணயம் செய்தது.
இதனை ஏற்றுக்கொள்ளாத அனில் அம்பானி, எங்களது குடும்பத்தில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, எங்களுக்கு 2.34 டாலர் விலையில்தான் எரிவாயுவை சப்ளை செய்ய வேண்டும் என்கிறார். மேலும் இது சம்பந்தமாக அவர் மும்பை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து, குடும்ப ஒப்பந்தத்தின்படியே ஒரு மில்லியன் கியூபிக் மீட்டருக்கு 2.34 டாலர் என்ற விலையிலேயே 17 வருடங்களுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவையும் பெற்று விட்டார்.
மும்பை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து முகேஷ் அம்பானி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருக்கிறார். அங்கு வழக்கு விசாரணை செப்டம்பர் ஒன்றாம் தேதி துவங்க இருக்கிறது. இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகமும் இது குறித்து ஒரு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறது. அதில், பூமிக்கு அடியில் கிடைக்கும் இயற்கை எரிவாயு மத்திய அரசுக்கு தான் சொந்தம். இதற்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையும் மத்திய அரசுக்கு தான் இருக்கிறது. இரண்டு தனி நபர்களோ, அல்லது இரண்டு தனியார் நிறுவனங்களோ இதற்கு உரிமை கொண்டாட முடியாது என்று சொல்லியிருக்கிறது. இதனையடுத்து பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, முகேஷ் அம்பானிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று அனில் அம்பானி குற்றம் சாட்டினார்.
கிருஷ்ணா கோதாவதி ஆற்று படுகையில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் லிமிடெட் ( ஆர் ஐ எல் ), அரசு நிறுவனமான ஆயில் அண்ட் நேச்சரல் கேஸ் கார்பரேஷன் ( ஓ என் ஜி சி ), குஜராத் ஸ்டேட் பெட்ரோலியம் கார்பரேஷன் ( ஜி எஸ் பி சி ) ஆகிய மூன்று நிறுவனங்களும் மொத்தமாக 30 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ. 1,44,000 கோடி ) முதலீடு செய்து தனித்தனியாக மூன்று இடங்களில் எரிவாயு மற்றும் சில இடங்களில் எண்ணெய் எடுக்கும் நிலையங்களை அமைத்திருக்கின்றன. ஆர் ஐ எல் நிறுவனம் அங்கு 12 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.57,600 கோடி ) முதலீடு செய்து எரிவாயுவை எடுத்து, இந்தியா முழுவதிற்கும் சப்ளை செய்ய திட்டமிட்டிருக்கிறது. ஓ என் ஜி சி நிறுவனம் அங்கு 3 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.14,400 கோடி ) அங்கு முதலீடு செய்கிறது. கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகையில் நாள் ஒன்றுக்கு 120 மில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுவை ( 2013 வாக்கில் ) எடுக்க முடியும் என்று சொல்லப் படுகிறது.
முழு அளவில் அங்கு எரிவாயு எடுக்க ஆரம்பித்து விட்டால், இப்போது இந்தியா எரிவாயுக்காக கொடுத்து வரும் தொகையில் 30 சதவீதம் வரை குறைந்து விடும் என்றும் சொல்லப்படுகிறது. ஆசிய நாடுகளில் அதிகம் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, இப்போது எண்ணெய் இறக்குமதிக்காக வருடத்திற்கு சுமார் 80 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.3,84,000 கோடி ) செலவு செய்து வருகிறது. அதிலிருந்து சுமார் 20 பில்லியன் டாலர்களை ( சுமார் ரூ.96,000 கோடி ) மிச்சப்படுத்த முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: