Thursday, July 16, 2009

நாய், பூனைகளுக்கு பிரத்யேக விமான சேவை : அமெரிக்காவில் துவக்கப்பட்டது

இப்போது உள்ள பொருளாதார சீரழிவில், மனிதர்களை ஏற்றி செல்லும் விமான சேவையே கடும் சிக்கலில் இருக்கும்போது, அமெரிக்காவில் நாய் பூனைகளுக்காக தனியாக விமான சேவை துவங்கப்பட்டிருக்கிறது. 'பெட் ஏர்வேஸ்' என்ற பெயரில் துவங்கப்பட்டிருக்கும் இந்த புதிய விமான சேவை செவ்வாய் அன்று நியுயார்க்கில் துவங்கப்பட்டது. இந்த விமானம் வாஷிங்டன், சிகாகோ, டென்வர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு செல்லும்.செல்லப்பிராணிகளுக்காக பிரத்யேகமாக துவங்கப்பட்ட இந்த விமான சேவை முதலில் நாய் மற்றும் பூனைகளை மட்டுமே ஏற்றி செல்லும் என்று அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. பொதுவாக எல்லா நாடுகளிலுமே பயணிகள் விமானங்களில் நமது செல்லப்பிராணிகளை ஏற்றுவது இல்லை. அவைகளை கார்கோவில் தான் ஏற்றி கொண்டு செல்ல வேண்டும். கார்கோவுக்கான இடம் விமானங்களின் அடிப்பாகத்தில் அமைந்திருப்பதால் அந்த இடம் ஒன்று அதிக வெப்பமாக இருக்கும். அல்லது அதிக குளிராக இருக்கும். இந்த சூழ்நிலை செல்லப்பிராணிகளுக்கு ஒத்துக்கொள்வதில்லை. எனவே அவைகளில் சில கடுமையான பாதிப்பிற்குள்ளாவதுண்டு. சில விமான கம்பெனிகள் மட்டும், நமது இருக்கைகளுக்கு கீழே வைத்துக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் சிறிய பிராணிகளை மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு தான் அமெரிக்காவில் செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்காக பிரத்யேக விமான சேவையை அல்சா பின்டர் மற்றும் டான் வீசல் என்பவர்களால் துவங்கப்பட்டிருக்கிறது. இந்த விமான சேவைக்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களுக்கு விமானம் புக் ஆகி விட்டது என்கிறார் விமான கம்பெனி அதிகாரிகளில் ஒருவரான அய் தோக்னோட்டி. இப்போது ஒரு சில நகரங்களுக்கு மட்டுமே இயக்கப்படும் இந்த விமான சேவை இன்னும் இரு வருடங்களில் 25 நகரங்களுக்கு விரிவு படுத்தப்படுகிறது. இந்த விஷேச விமானத்தில் இருக்கைகளுக்கு பதிலாக ஷெல்ஃப் கள் தான் இருக்கும். அவைகளில், கூண்டுகளில் அடைக்கப்பட்ட செல்லப்பிராணிகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த விமானத்தில் பைலட் மற்றும் சிப்பந்திகள் மட்டுமே மனிதர்களாக இருப்பார்கள். சிப்பந்திகளும் கூட, பிராணிகளுடன் அன்பாக பழக கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு செல்லப்பிராணிகளை அனுப்ப டிக்கெட் கட்டணம் 149 டாலரில் ( சுமார் 7,150 ரூபாய் ) இருந்து துவங்குகிறது.
நன்றி : தினமலர்


No comments: