Saturday, June 20, 2009

'யூ மொபைல்' வசதியை அறிமுகப்படுத்தியது யூனியன் வங்கி

மொபைல் மூலம் வங்கியின் அனைத்து சேவையும் பெற முடிகிற, 'யூ மொபைல்' வசதியை, இந்திய யூனியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நாயர் அறிமுகப்படுத்தினார்.
அறிமுக நிகழ்ச்சியில் நாயர் பேசியதாவது: இந்திய யூனியன் வங்கி ஏற்கனவே, குறிப்பிட்ட செயல்பாடுகள் கொண்ட மொபைல் வங்கி சேவையை நடைமுறைப்படுத்தியது. அடுத்த கட்டமாக, முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்ட, 'யூ மொபைல்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். கடந்த ஆண்டில் இந்திய யூனியன் வங்கியில் மற்றும் கிளைகளில் ரொக்கம் பெறாமல், எலக்ட்ரானிக் முறையில் பணப் பரிவர்த்தனை செய்ததில், 6 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு, இதை 35 சதவீதமாக உயர்த்த, 'யூ மொபைல்' வசதி பெரிதும் உதவும். மொபைல் போனில் பட்டனை அழுத்தினால், வங்கியின் அனைத்து சேவைகளையும் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த 'யூ மொபைல்' வசதியை, எஸ்.எம்.எஸ்., மற்றும் ஜி.பி.ஆர்.எஸ்., மூலம் பெறலாம். வங்கித் துறையில் பாதுகாப்பாக, எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செயல்படுத்த முடிகிற இந்த வசதியின் மூலம், யூனியன் வங்கி கணக்கிற்கு மற்றும் இதர வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றவும், காசோலைகளை நிறுத்தவும், காசோலை புத்தகம் அனுப்பச் சொல்லியும் தகவல் அனுப்பி, பயன் பெறலாம். யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்கள், மொபைல் போன் கணக்கு மூலம் செக் நிலவரம், கிளை ஏ.டி.எம்., இருப்பிடம், கணக்கு பட்டியல், கணக்கு இருப்பு பற்றிய விசாரணை, மினி ஸ்டேட்மென்ட் போன்றவற்றைப் பெறலாம். இவ்வாறு நாயர் பேசினார்.
நன்றி : தினமலர்


No comments: