Wednesday, April 1, 2009

பயணிகள் ரெயில் கட்டணம் குறைப்பு : இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பயணிகள் ரெயில் டிக்கெட் கட்டண மாற்றம் இன்று (புதன் கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் கூறப்பட்டிருப்பதாவது:- கட்டண மாற்றம் 2009-2010 ஆண்டிற்கான ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி பயணிகளுக்கான ரெயில் டிக்கெட் கட்டணத்தில் ஏற்பட்ட மாற்றம் இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இரண்டாம் வகுப்பு:- புறநகர், மெயில்/ எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சாதாரண பயணிகள் ரெயில்களில் அடிப்படைக் கட்டணம் ரூ.50 ஆக இருந்தது. அது ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது. சாதாரண ரெயில்களில் 10 கிலோ மீட்டர் வரை பயணம் செய்பவர்களுக்கு இது பொருந்தாது.
புறநகர் ரெயில்கள்:- புறநகர் ரெயில் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை. படுக்கும் வசதி கொண்ட மெயில்/எக்ஸ்பரஸ் ரெயில்கள், சாதாரண பயணிகள் ரெயில் கட்டணத்தில் 2 சதவீதம் குறைப்பு செய்யப்படுகிறது. முதல் வகுப்பு ஏ.சி, இரண்டடுக்கு ஏ.சி., மூன்றடுக்கு ஏ.சி, சேர் கார் வகுப்புகளுக்கு 2 சதவீத கட்டண குறைப்பு செய்யப்படும். மெயில்/ எக்ஸ்பிரஸ் மற்றும் சாதாரண ரெயில்களில் முதல் வகுப்பல் எந்த கட்டண மாற்றமும் இல்லை.
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஜூலை 31-ந் தேதி வரையிலும், செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து ஜனவரி 31-ந் தேதி வரையிலும் நெரிசல் மிகுந்த காலமாக கருதப்படும். அதே போல் பிப்ரவரி 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந் தேதி வரையிலும், ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும் நெரிசல் குறைந்த காலமாகவும் கருதப்படும். இந்த மாற்றங்கள் இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
கட்டண விகிதங்கள் மாற்றப்பட்டிருப்பதால், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர்களிலேயே அந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம். பயணத்திற்கு முன்பாக இந்த தொகையை பெற விரும்புபவர்கள் ஒரிஜினல் டிக்கெட்டுகளை ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு கட்டண வீதம் மாற்றி அமைக்கப்பட்ட புதிய டிக்கெட்டுகள் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பல் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: