ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக எழுந்து நிற்க முடியாத நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு முதல்வர் கருணாநிதி தாமே தலைமை ஏற்று ஓர் ஊர்வலம் நடத்தியிருக்கிறார். பாவம்! எத்தனை முறைதான் ஊர்வலம் நடத்துவார்? எத்தனை முறைதான் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவார்? எத்தனை முறைதான் சட்டமன்றத்தைக் கூட்டி மீண்டும் மீண்டும் ஒரே தீர்மானத்தை நிறைவேற்றுவார்? நாடகக்காரர்கள் "இன்றே இந்த நாடகம் கடைசி' என்று அறிவிப்பது போல, சட்டமன்றத்திலும் "இந்தத் தீர்மானம் இதுவே கடைசி' என்றெல்லாம் போட்ட தீர்மானத்தையே திரும்பப் போட்டு உலகத்தினர் நகைக்கும் நிலைக்கு உள்ளாகியும்கூட கருணாநிதி சோரவில்லையே! பேயோட்டுகிற பூசாரி பேய்க்குக் கெடு வைத்து வேப்பிலை அடிப்பது போல, தன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமா கடிதங்களைத் தன் பைக்குள் வாங்கி வைத்துக் கொண்டு, இரண்டு வாரத்துக்குள் போர் நிறுத்த ஏற்பாடு செய்யவில்லை என்றால் தில்லி செங்கோட்டையிலிருந்து விரட்டப்படும் நிலை ஏற்படும் என்று, உடுக்கை வேகமாகக் கருணாநிதி தட்ட, நாடகம் சூடு பிடித்தது. பதிநான்காம் நாள் என்ன நடக்கும் என்று நாடே திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தது. பதிநான்காம் நாளும் வந்தது. தில்லியின் சிறப்புத் தூதர் கோபாலபுரத்துக்கு வந்தார். பூசாரி "உடனே உடுக்கை கீழே போடாவிட்டால், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையைவிட்டே வெளியேற நேரிடும்' என்றார். அவ்வளவுதான்; கருணாநிதிக்குப் புரிகிற மொழியில் சொன்னால் எதையும் எளிதாகப் புரிந்து கொண்டுவிடுவார்! ஈழத் தமிழர்களின் ஆவி முக்கியமா? குடும்ப ஆட்சி முக்கியமா? இப்படித் தெளிவாகக் கேட்டால் குழப்பமில்லாமல் முடிவெடுத்துவிடுவார் கருணாநிதி! மேலும் இந்தியப் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவது இந்துமாக்கடல் பகுதியில் இந்திய அரசின் மேலாண்மையை நிலைப்படுத்துவதோடு தொடர்புடையது என்று பெங்களூர் வந்தபோது வெளிப்படையாகவே சொன்னார்! இவற்றுக்கெல்லாம் பின்னால் கங்கையில் நிறைய வெள்ளம் பாய்ந்து வழிந்தோடிவிட்டது. சிங்கள ராணுவம் நுழைந்தபோது கிளிநொச்சி நகரமே அந்த மக்களால் கைவிடப்பட்டு, பேயறைந்த நகரம் போல மனித நடமாட்டேமே அற்றுப் போயிருந்தது. இதுவரை பொத்திப் பொத்திக் காத்த தங்களுடைய வீடுவாசல், சொத்து சுகம், வயல்வரப்பு, அத்தனையையும் விட்டுவிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு முல்லைத் தீவுக் காட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டவர்கள் ஒருவரா இருவரா? இரண்டு லட்சம் பேர். இரண்டாயிரம் விடுதலைப் புலிகளை அழிப்பதாகச் சொல்லிக் கொண்டு இரண்டு லட்சம் தமிழர்களைச் சிங்களக் காடையர்கள் கொல்லவும், ஈழமண் தமிழர்களின் ரத்தத்தால் செஞ்சகதியாக மாறவும் துணைபுரியும் மத்திய அரசையும், அதில் அங்கம் வகிக்கும் திமுகவையும் எந்தத் தமிழனாவது மன்னிப்பானா? நாளொரு ஆர்ப்பாட்டம், பொழுதொரு ஊர்வலம் என்று விடாமல் நடத்திக் கொண்டே இருந்தால், "பாவம் கருணாநிதி என்ன செய்வார்! தில்லியில் உள்ள பிரதமரும் அவரை வைத்து பொம்மலாட்டம் நடத்துபவரும்தான் கேட்கமாட்டேன் என்கிறார்கள்' என்று தம் மீது மக்கள் இரக்கம் கொள்ளும்படி செய்துவிட முடியும் என்று கருணாநிதி திண்ணமாக நம்புகிறார்! இதுதான் கருணாநிதியின் அரசியல் பாணி! அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்துள்ள இவ்வளவு கொடுமைகளுக்கும் மத்திய அரசு மட்டுமே காரணம் இல்லை; அந்த அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதியும்தான் காரணம் என்பது கூடவா மக்களுக்குப் புரியாது? நடப்பது என்ன காங்கிரஸின் தனி ஆட்சியா? "காப்பாற்றுங்கள் தாயே' என்று சோனியாவிடம் கருணாநிதி பொதுக் கூட்டத்தில் முழந்தாளிடாத குறையாக வரம் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன? இந்தியாவை மன்மோகன் சிங் தனித்தா ஆள்கிறார்? அவர் சம அதிகாரம் பெற்ற அமைச்சரவைச் சகாக்களின் வரிசையில் முதலில் நிற்பவர். சங்கு ஊதிக் கொண்டு செல்லும் சிவப்பு விளக்குப் பரிவாரங்கள் அவரைப் புடை சூழ்ந்திருப்பதும், அவருக்காகப் போக்குவரத்து நிறுத்தப்படுவதுமான ஆரவாரங்களால் பெரிதாக்கப்படுகிறார், அவ்வளவே! எந்த முடிவையும் அவர் தனித்து எடுக்க முடியாது. நாட்டை ஆள்வது மன்மோகன் சிங் என்றோ கருணாநிதி என்றோ சொல்வது ஒரு சம்பிரதாயமே தவிர, அரசியல் நிர்ணயச் சட்டம் இவர்களுக்கு வீசம் அளவுக்கு அதிகாரத்தைக்கூட கூடுதலாகக் கொடுக்கவில்லையே! எந்த ஒரு முடிவையும் அமைச்சரவைதான் எடுக்க முடியும். அமைச்சரவைதான் நாட்டை ஆள்கிறது. அந்த முடிவுகள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. அமைச்சரவை நிலையிலேயே இந்தியா, இலங்கைக்கு ஆயுத உதவிகளையும் ராணுவசூட்சும உதவிகளையும் செய்வதைக் கருணாநிதி தடுத்திருக்க முடியும். அடுப்பில் விறகை உருவிவிட்டால், கொதிப்பது அடங்கிவிடும் என்று சாதாரணப் பெண்கள் அறிந்திருப்பதை அசாதாரணமான அரசியல்வாதி கருணாநிதி அறியமாட்டாரா? அதைச் செய்யத் தவறியவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்; மன்னிக்கவும் கூடாது! விஜயகாந்த் ஈழத் தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று வழிபாட்டுக்கு அழைக்கிறார்! தமிழர்களின் அழிவுக்குக் காரணம் கொழும்பு சார்ந்தது மட்டுமன்று; தில்லி சார்ந்ததும்கூட என்னும் நிலையில் பகையை நோக்கி தமிழ்நாட்டின் உணர்வுகள் ஒருமுனைப்பட வேண்டிய நேரத்தில், கடவுள், கூட்டுவழிபாடு என்று பகையின் முனையை விஜயகாந்த் மழுக்குவது யாது கருதியோ? தில்லி அரசோடு உள்ள முற்பிறவித் தொடர்பா? கூட்டுப் பிரார்த்தனை செய்தால் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுப்பதைக் கடவுள் நிறுத்திவிடுவாரா என்பதை விஜயகாந்த் தெளிவுபடுத்தவில்லையே! அதே வகையில் "காப்பாற்றுங்கள் தாயே' என்று தன்னுடைய வயதை மறந்து சோனியாவை நோக்கி தழுதழுக்கிறார் கருணாநிதி. தங்கபாலு நிலைக்கு கருணாநிதி வந்துவிட்டார். "காப்பாற்றுங்கள் தாயே' என்று தழுதழுத்தால் தன் முதிர்ந்த மகன் கருணாநிதியின் அழுகுரல் கேட்டு சோனியா தன் முடிவை மாற்றிக் கொண்டு சரணடைந்த மார்க்கண்டேயனைக் காக்க எமதர்மனைக் காலால் எட்டி உதைத்தது போல, ராஜபட்சவின் சட்டையைப் பிடித்து இழுத்து ஈழத் தமிழர்களைக் காக்கப் போரை நிறுத்தச் சொல்லிவிடுவாரா தாய் சோனியா? மண்டியிட்டதும் முட்டிக் கொண்டதும்தான் மிச்சம். இத்தகைய நாடகங்கள் ஈழத் தமிழர்கள் அழிந்து முடியும் வரையிலா? அல்லது இந்தத் தேர்தல் முடியும் வரையிலா? சிங்கள அரசில் அமைச்சர் பதவி வகிக்கும் கருணாகூட ஒரு தமிழர்தான். அவரும் தம் கட்சிக்குச் சில நியாயங்கள் பேசுகிறார். அவரும் விடுதலைப் புலிகளை அழிப்பதாகச் சொல்லிக் கொண்டுதான் அப்பாவித் தமிழ்மக்கள் அழிவதற்குச் சிங்களக் காடையர்களுக்குத் துணை போகிறார். இவரைப் பெற்றவர் புறநானூற்றுத் தாயாக இருந்தால், இவர் பாலுண்ட இரண்டு மார்பகங்களையும் அறுத்தெறிந்திருப்பார். யூத இனம் கொத்துக் கொத்தாக அரக்கன் ஹிட்லரிடம் அழிந்துபட்டது போல, ஈழத் தமிழினம் ராஜபட்சவிடம் கூட்டம் கூட்டமாக அழிகிறது. இலங்கை அரக்கர்களின் நாடு. பத்துத் தலைக்குப் பதிலாக ஒரு தலை என்பதுதான் மாறுதல்! ஐ.நா. சபை கண்ணீர் வடிக்கிறது. ஐரோப்பிய நாடுகள் பரிவு கொள்கின்றன. அமெரிக்கா கூட பரிந்து பேசுகிறது! தில்லி அரசு மட்டும் இரங்க மறுக்கிறது. யாரோடோ உள்ள பழைய பகையை அப்பாவி மக்களிடம் தீர்த்துக் கொள்ள நினைப்பது காட்டுமிராண்டித் தனம் அல்லவா! பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதை மன்னிக்க முடியாத சீக்கியக் காவலாளி இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்றார். நாடு பதைபதைத்தது. தில்லிக் காங்கிரஸ் ஆட்சி சீக்கிய இனத்தைப் பழி தீர்த்துக் கொள்ளக் களத்தில் இறங்கியது. சீக்கியர்கள் நான்காயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து டைட்லரைச் சீக்கியர்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணியே மத்திய புலனாய்வுத் துறையைக் கொண்டு, டைட்லர் குற்றமற்றவர் என்று அறிவிக்கச் செய்து உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை மூடிவிட முயன்றார்கள்! பொறுப்பானா தன்மானச் சீக்கியன்? டைட்லர் தேர்தல் களத்திலிருந்து உடனடியாகக் காங்கிரஸôல் தூக்கிவீசப்பட்டுவிட்டார். அதைப் பற்றி மன்மோகன் சிங் கருத்துச் சொல்கிறார்: "சீக்கிய உணர்வுகளுக்குக் காங்கிரஸ் காட்டும் மரியாதை இது! திருத்திக் கொள்ளாமலே போவதைவிட காலம் கடந்தாவது திருத்திக் கொள்வது நல்லதுதானே! மன்மோகன் சிங் சொந்தமாக எடுத்த ஒரே ஒரு முடிவு சீக்கியர்களுக்கு ஆதரவாக நின்ற இந்த ஒன்றே ஒன்றுதான்! மாறாகப் போனால் தலைமை அமைச்சர் என்றாலும் பொற்கோயிலில் செருப்புத் துடைக்க வைத்துவிடுவார்கள்! சீக்கிய இனத்துக்குக் காட்டும் மரியாதையை காங்கிரஸ் ஏன் தமிழினத்துக்குக் காட்டவில்லை? காரணம், இனத்துக்கு ஒரு நெருக்கடி என்னும் நிலையில் சீக்கியத் தலைவர்கள் விலை போவதில்லை. பிரபாகரனைக் கைது செய்யப் போகும் ராஜபட்ச அவரை மரியாதையாக நடத்த வேண்டும் என்று கருணாநிதி கேட்டிருப்பது பிரபாகரனின் மீது கொண்டுள்ள அன்பைக் காட்டவில்லை. கருணாநிதி மனத்திலுள்ள அழுக்கைக் காட்டுகிறது! தமிழினத்தை அழித்தொழித்த ராஜபட்ச என்னும் பெயர் அலெக்சாந்தருக்கு நிகராகத் தெரிகிறது கருணாநிதிக்கு! பதுங்கு குழிக்குள்ளும் பாதுகாப்பு வளையத்துக்குள்ளும் அஞ்சி வாழும் ராஜபட்ச என்ன அலெக்சாந்தரா? விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியைக் கொன்று ஒரு பெரிய நாட்டைப் பகைத்துக் கொண்டது தற்கொலைக்கு நிகரான ஒரு மாபெரும் ராஜதந்திர பிழை. தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிப் பார்க்காத ஒரு பேதைமைச் செயல் அது! ராஜபட்ச அரியணை ஏறும் வகையில் விடுதலைப் புலிகள் தேர்தல் நேரத்தில் கையாண்ட தவறான அரசியல் உத்தி என்று இன்னும் எத்தனை எத்தனையோ பிழைகள் ஓர் இயக்கத்தின் வரலாற்றில் நிகழ்ந்து விடுகின்றன. அதற்காகவெல்லாம் தமிழினத்தையே அழித்து ஈழத்தையே சுடுகாடு ஆக்கிவிடலாமா? பொழுது விடிந்து பொழுது போகிறவரை போர்க்களத்தில் சாவோடு மோதி வாழும் ஒருவன், கைது செய்யப்பட்ட பிறகு கருணாநிதி பரிந்துரையால் ராஜபட்ச தரப்போகும் மரியாதையை எண்ணியா வாழ்வான்? சுகபோகங்களை அடையத் தான் ஆள வேண்டும்; தனக்குப் பின் தன் மகன் ஆள வேண்டும் என்று எண்ணி வாழ்பவர் கருணாநிதி. விடுதலையை அடையத் தான் சாகவேண்டும்; தனக்குப் பின் தன் மகன் சாக வேண்டும் என்று எண்ணி வாழ்பவன் விடுதலை வீரன். வீரர்களை நிறுக்கக் கருணாநிதியின் தராசு தகுதியற்றது! புளியை நிறுக்கும் தராசு வேறு; தங்கத்தை நிறுக்கும் தராசு வேறு!
நன்றி : தினமணி
Tuesday, April 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
thanum than kudumbamum enbathai thavira veru ethuum tamilagam ellai. athuve en mulumoochi enru thullum enthe 84 vayathu
suyanala piththanai sariyaka ulakirku kattiullar. thodarttum avar narpani
well said pl. karuppia iya
மிக அருமையான அலசல். தன் மானம் கெட்டதுடன் , தமிழ் மானத்தையும் கெடுத்த கருணாநிதி சரித்திரத்தில் ஒரு இன துரோகியாக அடையாளமும் காணப்பட வேண்டும்.
Post a Comment