Tuesday, March 24, 2009

'நானோ' கார் வாங்குவோருக்கு அதிர்ஷ்டம்: கூடுதல் விலைக்கு கை மாற்றிவிட வாய்ப்பு

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டாடாவின் ஒரு லட்ச ரூபாய் நானோ காருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. முதல் கட்ட விற்பனையில் இந்த காரை வாங்குவோருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. குறைந்த அளவிலேயே கார் தயாரிக்கப்படுவதால், தற்போது காரை வாங்குவோர், அதை கூடுதல் விலைக்கு மற்றொருவருக்கு மாற்றி விடும் வாய்ப்பு உள்ளது. தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கனவுத் திட்டம் நானோ கார். உலகிலேயே மிகக் குறைந்த விலையாக ஒரு லட்ச ரூபாய்க்கு கார் தயாரித்து விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பிரச்னை, நானோ கார் தயாரிப்பில் தாமதத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும், டாடாவுக்கு குஜராத் மாநிலம் ஆதரவுக் கரம் நீட்டியது. தற்போது, காரை தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நானோ கார் நேற்று முறையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. தயாரிப்பு மிகக் குறைவாக உள்ளதால், நானோ காருக்கு கடும் கிராக்கி நிலவுகிறது.
இதுகுறித்து ஆட்டோ மொபைல்ஸ் வட்டாரங்கள் கூறியதாவது: நானோ கார் தொடர்பாக ஐந்து கோடிக்கும் அதிகமானோரிடம் இருந்து விசாரிப்புகள் வந்துள்ளன. முதல் கட்ட தேவையைப் போக்குவதற்கு இரண்டு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் கார்கள் வரை தேவைப்படுகின்றன. மொத்த தேவையில் 2.5 சதவீதத்துக்கும் குறைவான அளவே முதல் கட்டமாக கார்கள் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது. காருக்கான அனைத்து முன்பதிவுகளும் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், முன்பதிவு செய்த அனைத்து வாடிக்கையாளர்களும் நானோ காரை பெறுவதற்கு இரண்டாண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். முன்னர், மாருதி 800 கார் விற்பனைக்கு வந்த போதும் இதே நிலை தான் ஏற்பட்டது. இதன் காரணமாக, தற்போது முதல் கட்ட விற்பனையில் நானோ காரை பெறும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளது. குறைவான எண்ணிக்கையிலேயே கார் தயாரிக்கப்படுவதால், தங்கள் பெயரில் புக் செய்யப்பட்ட காரை, கூடுதல் விலைக்கு வேறொருவருக்கு விற்பனை செய்ய அவர்கள் முயற்சிக்கலாம். கார் தேவைப்படாதவர்கள் கூட, காருக்காக முன்பதிவு செய்து, அதை கூடுதல் விலைக்கு வேறொருவருக்கு விற்க முயற்சிக்கலாம். எப்படியாது நானோ காரை வாங்கியே தீர வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள்,காரின் விலையை விட கூடுதலாகக் கொடுத்து அதை வாங்க முயற்சிப்பர்.
நானோ கார் விற்பனை தொடர்பாக டாடா நிறுவனம் எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், அதன் டீலர்கள் சில விவரங்களைத் தெரிவித்துள்ளனர். இதன்படி, நானோ கார் தொடர்பாக டாடா நிறுவனம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் உடன்பாடு செய்துள்ளது. நானோ கார் வாங்குவதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிதி வசதி அளிக்கும். காருக்கு புக் செய்தவர்களின் பெயர்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக விற்பனைக்கு வரும் கார்களைப் பெறும் அதிர்ஷ்டசாலிகள் அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். புக் செய்யப்பட்டவரின் பெயருக்கு டீலர்களின் ஷோரூம்களுக்கு கார் வந்து விடும். வாடிக்கையாளர்கள் அங்கிருந்து தங்கள் கார்களை எடுத்துச் செல்லலாம். நிதி விவகாரங்களில் டீலர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. காரை டெலிவரி செய் யும் பணி மட்டுமே டீலர்களுக்கு உண்டு. இவ்வாறு ஆட்டோ மொபைல்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகையில், 'நானோ காருக்காக பெருமளவு வாடிக்கையாளர்கள் புக் செய்வது, டாடா நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்யும். 'இரண்டு லட்சம் கார்கள் புக் செய்யப்பட்டால் கூட, அந்நிறுவனத்துக்கு அதன் மூலமாக 1,400 கோடி ரூபாய் கிடைக்கும். இந்த நிதியை டாடா நிறுவனம், தனது பல்வேறு நிதித் தேவைகளுக்கு பயன்படுத்தும்' என்றன.
நன்றி : தினமலர்


No comments: