பங்குச்சந்தை, நிலம் இவற்றில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலையை கருத்தில் கொண்டு நடுத்தர மக்களும் கூட சிறிய அளவில் ஒரு கிராம், இரண்டு கிராமாவது சேர்க்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நகைக்கடைகளில் மட்டுமே தங்கம் விற்கப்பட்ட நிலை மாறி, வங்கிகளும் விற்பனை செய்யத் துவங்கின. கடந்தாண்டு அஞ்சல் துறையும், தனியார் நிறுவனத்துடன் இணைந்து தங்க நாணய விற்பனையை துவக்கியது. இத்திட்டத்தில் 24 காரட் சுத்த தங்கத்தில் அரை, ஒன்று, ஐந்து மற்றும் எட்டு கிராம் எடையுள்ள நாணயங்கள், சுவிட்சர்லாந்து வால்கேம்பி நிறுவனத்தின் தர நிர்ணய முத்திரையுடன், முற்றிலும் 'சீல்' வைக்கப்பட்ட வகையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டன. தங்க நாணய விற்பனையை கடந்தாண்டு அக்டோபர் 15ம் தேதி மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ராஜா, இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தினர். அன்று முதல் நாடு முழுவதும் பல பகுதிகளில் உள்ள அஞ்சலகங்கள், தமிழகத்தில் 20 அஞ்சலகங்களில் தங்க நாணயங்கள் விற்பனை துவக்கப்பட்டது. கடந்த மாதம் மேலும் ஒன்பது அஞ்சலகங்கள், இம்மாதம் 13ம் தேதி 22 அஞ்சலகங்கள் என தற்போது தமிழகத்தில் 51 அஞ்சலகங்களில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.விற்பனை துவக்கப்பட்டு ஐந்து மாதங்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த 15ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள 29 அஞ்சலகங்களில் இதுவரை 24.862 கிலோ விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மத்திய கோட்டத்தில் மட்டும் 65 லட்சம் ரூபாய் வரை தங்கம் நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தங்க நாணய விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை தற்போது ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாணயங்கள் தினந்தோறும் மாறும் விலைக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், வெளிமார்க்கெட் விலையிலேயே தங்க நாணயங்கள் அஞ்சலகங்களில் கிடைக் கின்றன. இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தங்க நாணயம் விற்பனைக்கான அஞ்சலகங்கள், பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை வசதியை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்படுகின்றன. ''அஞ்சலகங்களில் வாங்கும் தங்க நாணயத்திற்கு, 'பில்' தரப்படுகிறது. மேலும், அஞ்சலகம் அரசு நிறுவனம் என்பதால், பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தங்க நாணயங்களை வாங்கிச் செல்கின்றனர். ''தங்க நாணயங்கள் விற்பனை, மற்ற நகைக் கடைகள் போல் இல்லாவிட்டாலும், பண்டிகை காலங்களிலும், பங்குச் சந்தை சரிவு உள்ளிட்ட காலங்களிலும் அதிகளவில் இருக்கும். சென்னை, திருச்சி பகுதி அஞ்சலகங்களிலும் அதிகளவு தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டுள் ளன,'' என்றார்.
நன்றி : தினமலர்







No comments:
Post a Comment