Wednesday, March 18, 2009

வீட்டு கடனுக்கான வட்டி குறைப்பால் மற்ற வங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் எஸ்.பி.ஐ

ஸ்பெஷல் ஹோம் லோன் திட்டத்தில் கடன் வாங்குபவர்களுக்கு 8 சதவீதம்தான் வட்டி என்று சமீபத்தில் ஸ்டேட் பேங்க் அறிவித்ததை அடுத்து, மற்ற தனியார் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் ஸ்டேட் பேங்க்கிற்கு வந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எத்தனை வாடிக்கையாளர்கள் அப்படி ஸ்டேட் பேங்க்கிற்கு மாறி இருக்கிறார்கள் என்று சரியாக தெரியவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க நபர்கள் வந்திருக்கிறார்கள் என்கிறார்கள். இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பது நாங்கள் எதிர்பார்த்ததுதான் என்றாலும், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் டிமாண்ட் இருக்கிறது என்றார் மும்பை ஸ்டேட் பேங்க்கின் மூத்த அதிகாரி ஒருவர். இருந்தாலும் சில சிறிய நகரங்களில் வீட்டு கடனுக்கு விண்ணப்பிப்பது குறைவாகத்தான் இருக்கிறது. காரணம் என்னவென்றால், ரியல் எஸ்டேட் தொழில் இன்னும் ' டல் ' ஆகும் என்றும் அதனால் வீடுகளின் விலை இன்னும் குறையும் என்றும் எதிர்பார்ப்பதால்தான் என்றார் அவர். மேலும் வீட்டு கடனுக்கான வட்டியும் இன்னும் குறையும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள் என்றார் அவர். தனியார் வங்கி வாடிக்கையாளர்கள் ஸ்டேட் பேங்கிற்கு மாறுகிறார்களா என்று சில தனியார் வங்கிகளில் விசாரித்தபோது, அதை ஒரளவு ஒத்துக்கொண்ட அவர்கள், எங்களிடம் கடன் வாங்கியவர்களில் பலர் முன் கூட்டியே வீட்டு கடனை முடிக்கிறார்கள் என்கின்றனர்.
நன்றி : தினமலர்


No comments: