Tuesday, February 17, 2009

நேற்று மட்டும் முதலீட்டாளர்கள் இழந்தது ரூ.ஒரு லட்சம் கோடி

மத்திய அரசு 2009 - 10 கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நேற்று ஒரு நாள் மட்டும் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் ரூ.ஒரு லட்சம் கோடியை இழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய தொழில் துறைகளை மேம்படுத்த எந்தவித திட்டமும் பட்ஜெட்டில் இல்லை என்று கூறப்பட்டதால் நேற்று பங்கு சந்தை சரிவை சந்தித்தது. பட்ஜெட்டுக்கு முந்தைய இரண்டு வாரங்களில் கொஞ்சம் முன்னேறி இருந்த சென்செக்ஸ், நேற்று ஒரே நாளில் 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்து விட்டது. குறிப்பாக மெட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. வெள்ளிக்கிழமை அன்று பங்கு சந்தை முடிந்தபோது ரூ.30,71,114.61 கோடியாக இருந்த சந்தை முதலீடு, நேற்று வர்த்தகம் முடிந்த போது ரூ.29,79,509.44 கோடியாக குறைந்திருந்தது. ஒரே நாளில் சந்தை முதலீடு ரூ.91,000 குறைந்திருக்கிறது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இந்த இடைக்கால பட்ஜெட் இழந்திருப்பதால், இனி வரும் நாட்களிலும் சந்தை சரிந்து கொண்டுதான் இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மெட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்கள் தொடர்ந்து சரிந்து தான் இருக்கும் என்கிறார்கள்.

No comments: