Saturday, February 7, 2009

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் சேர்மனாக கிரண் கார்னிக் நியமனம்

ஏ.எஸ்.மூர்த்தியை சத்யம் கம்ப்யூட்டர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்த ஒரு நாளில், அதன் தலைவராக கிரண் கார்னிக் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆறு உறுப்பினர்களை கொண்ட சத்யத்தின் போர்டுக்கு தலைவராக நாஸ்காம் அமைப்பின் முன்னாள் தலைவரான கிரண் கார்னிக் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் பி.சி.குப்தா இதனை அறிவித்தார். சத்யத்தின் நிறுவன தலைவரான ராமலிங்க ராஜூ மோசடியில் ஈடுபட்டதை அடுத்து, அதன் போர்டை, மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று கம்பெனி லா போர்டு கலைத்தது. பின்னர் கம்பெனி லா போர்டு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மத்திய அரசு முதலில் 3 பேரை கொண்ட புது போர்டை அமைத்தது. கிரண் கார்னிக், தீபக் பரேக் மற்றும் அச்சுதன் ஆகியோர் போர்டு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். பின்னர் அந்த போர்டில் மேலும் மூன்று பேர் சேர்க்கப்பட்டனர். தருன் தாஸ், பாலகிருஷ்ண மைனக் மற்றும் மனோகரன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சத்யத்தின் தலைமை அலுவலகத்தில் ஆறு பேரை கொண்ட அதன் போர்டு இதுவரை ஆறு முறை கூடியுள்ளது. நேற்றைக்கு முந்தின நாள்தான் சத்யத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஏ.எஸ்.மூர்த்தியை அது நியமித்தது. அத்துடன் அவருக்கு ஆலோசகர்களாக ஹோமி குஷ்ரோகான் மற்றும் பார்தோ தத்தா ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். சத்யத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் கிரண் கார்னிக், நாஸ்காமின் தலைவராக 2001 - 02 ல் பணியாற்றியிருக்கிறார். இது தவிர ஐ.டி.துறையிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார். டிஸ்கவரி நெட்வொர்க்கின் இந்திய நிறுவனத்தில் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
நன்றி: தினமலர்


No comments: