Sunday, December 7, 2008

பங்குச் சந்தை சாண் ஏறி முழம் வழுக்குகிறது

வெள்ளியன்று மறுபடி சந்தை 9,000க்கும் கீழே சென்று முடிவடைந்திருக்கிறது. முழம் ஏறி சாண் வழுக்கினால் பரவாயில்லை. சந்தையில் இப்போதெல்லாம் சாண் ஏறி முழம் வழுக்குகிறது. வியாழனன்று மும்பை பங்குச் சந்தை 482 புள்ளிகள் வரை மேலே சென்றது. வெள்ளியன்று அதற்கு நேர்மாறாக அதற்கு பாதியளவு சரிந்தது. மும்பை பங்குச் சந்தை 265 புள்ளிகள் குறைந்து 9,000க்கும் கீழே வந்தது. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 8,965 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,714 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. பணவீக்கம் இந்த வாரம் 8.4 சதவீதமாக முடிவடைந்திருக்கிறது. சென்ற வாரம் 8.84 சதவீதமாக இருந்தது. நல்ல இறக்கம் தான். ஆனால், சந்தையில் வெள்ளியன்றும் அது பரிணமிக்கவில்லை. வெள்ளியன்று சந்தை நேரத்திற்கு பிறகு வந்த நல்ல செய்தி, பெட்ரோல் விலை ஐந்து ரூபாயும், டீசல் விலை மூன்று ரூபாயும் குறையவுள்ளது. பெட்ரோல் விலை 10 ரூபாய் அளவு குறையும் என்று எதிர்பார்த்தன. குறைவு குறைவாக இருக்கிறது. ஆதலால், சந்தை எப்படி பரிணமிக்கப் போகின்றன என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில், கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 147 டாலராக உச்ச பட்சமாக இருந்தது, தற்போது 44 டாலர் அளவில் வந்துள்ளது. கிட்டத்தட்ட 66 சதவீத தள்ளுபடியில் வந்து நிற்கிறது. ஆனால், தற்போது பெட்ரோல் விலையோ 10 சதவீதம் அளவு தான் குறைக்கப் பட்டிருக்கிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்போசிஸ் வரும் ஆண்டில் ஆள் எடுப்பதைக் குறைக்கும் என்று செய்தி வந்தவுடன், அது சந்தையில் சாப்ட்வேர் பங்குகளை ஒரு இறக்கு இறக்கிப் பார்த்தது வெள்ளியன்று. ஏனெனில், இன்போசிஸ் இந்த முடிவை எடுத்தால், மற்ற கம்பெனிகளுக்கும் அதே போலத்தானே இருக்கும் என்ற முடிவுக்கு சந்தை வந்தது. அது, சந்தையை அசைத்துப் பார்த்தது. இது தவிர, வெள்ளியன்று வங்கிப் பங்குகளும், கட்டுமானத்துறை பங்குகளும் குறைந்தன. மும்பையில் சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள், சந்தையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாதது ஒரு பெரிய நிம்மதி. வெளிநாடு முதலீட்டு நிறுவனங்கள் இதை ஒரு தனிப்பட்ட நிகழ்வாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் எப்படி இருக்கும்? எல்லாரும் தற்போது எதிர்பார்ப்பது சனியன்று ரிசர்வ் வங்கி ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ சதவீதத்தை முறையே 200 புள்ளிகளும், 125 புள்ளிகளும் குறைக்கலாம் என்பது தான். அப்படி குறைக்கப்பட்டால், சந்தையில் குறைந்து வரும் பணவீக்கம், பெட்ரோல் விலை குறைப்பு ஆகியவைகளை வைத்து திங்களன்று மேலே செல்லும். வரும் 12ம் தேதி இண்டஸ்டிரியல் டேட்டா புள்ளிவிவரம் வரவுள்ளது. அது ஒரு முக்கிய நிகழ்வாகும். அதைப் பொறுத்தும் சந்தையில் மாற்றங்கள் இருக்கும்.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


No comments: