Wednesday, November 19, 2008

சிட்டி குரூப், ஹெச்.எஸ்.பி.சி., வேலை இழப்பால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை

உலகின் மிகப்பெரிய வங்கிகளான ஹெச்.எஸ்.பி.சி., மற்றும் சிட்டி குரூப் ஆகியவை நேற்று மிகப்பெரிய வேலை இழப்பு செய்தியை வெளியிட்டன.ஹாங்காங்கை சேர்ந்த ஹெச்.எஸ்.பி.சி., வங்கி 500 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக நேற்று அறிவித்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான சிட்டி குரூப்போ 52,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. அடுத்த வருடத்தில்தான் இந்த வேலை இழப்பு இருக்கும் என்றாலும் உலகம் முழுவதும் இதன் பாதிப்பு நேற்று தெரிந்தது. இந்நிலையில் இந்த இரு வங்கிகளின் வேலைஇழப்பு திட்டத்தால் இந்தியாவில் பெரிதாக பாதிப்பு ஏதும் நிகழப்போவதில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. ஹெச்.எஸ்.பி.சி., யின் 500 பேர் வேலை இழப்பு திட்டத்தால், ஹாங்காங்கில் இருப்பவர்கள் 450 பேர் வேலை இழப்பார்கள் என்றும் மீதி 50 பேரும் இந்தியா தவிர மற்ற ஆசிய நாடுகளில்தான் வேலை இழப்பார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் சிட்டி குரூப்பை பொருத்தவரை, 52,000 பேர் வேலை இழப்பு திட்டத்தால் இந்தியாவில் சிறிதளவே பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. சிட்டி குரூப்பை சேர்ந்த சிட்டி குரூப் குளோபல் சர்வீசஸ் லிமிடெட் ( முன்னாள் இ-சர்வீஸ் ) என்ற நிறுவனம், டி.சி.எஸ்.,க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனை இந்த காலாண்டிற்குள் முடிவடைந்து விடும் என்று தெரிகிறது. அப்போது சிட்டிகுரூப்பின் இந்திய ஊழியர்கள் எண்ணிக்கை பாதியாக குறைந்து விடும். அதை தவிர இங்கு வேறு எந்த பெரிய மாற்றமும் ஏற்படாது என்று சொல்கிறார்கள். எனவே இந்தியாவில் வேலை பார்த்து வரும் இந்த இரு வங்கி ஊழியர்களும் பயப்பட தேவையில்லை என்று சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: