Wednesday, November 19, 2008

14,000 ஊழியர்கள், 30,000 ஏஜென்டுகளை புதிதாக வேலையில் சேர்க்கிறது மேக்ஸ் நியுயார்க் லைஃப் இந்தியா

உலக பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருப்பதை அடுத்து, பல முன்னணி நிறுவனங்கள் செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டிருக்கும்போது, இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமான மேக்ஸ் நியுயார்க் லைஃப் இந்தியா, இந்த நிதி ஆண்டிற்குள் 14,000 புதிய ஊழியர்களையும் 30,000 புதிய ஏஜென்ட்களையும் நியமிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இன்னொரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமான மெட்லைஃப் இந்தியாவும், 2,000 நிர்வாகிகளையும் 30,000 ஆலோசகர்களையும் புதிதாக வேலையில் சேர்த்துக்கொள்ள இருப்பதாக நேற்று அறிவித்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளான சிட்டி குரூப், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்றவைகள் செலவை குறைக்கும் விதமாக உலக அளவிலான அதன் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டிருக்கும் போது, இவர்கள் புதிதாக ஊழியர்களை வேலையில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். பொருளாதார மந்த நிலையை முன்னிட்டு நீங்கள் செலவை குறைக்கும் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லையா என்று மேக்ஸ் நியுயார்க் லைஃப் இன்சூரன்ஸ் சீனியர் டைரக்டர் அனில் மேத்தாவிடம் கேட்டபோது, ஏற்கனவே நாங்கள் வேறு வழியில் செலவை குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம். எனவே ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துதான் செலவை குறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார். மேலும் அவர் இதுகுறித்து சொன்னபோது, ஐ.ஆர்.டி.ஏ.,யின் சட்டதிட்டத்தின் படி, இருக்க வேண்டிய சால்வன்ஸி மார்ஜினை விட எங்களிடம் இரட்டிப்பு அளவு மார்ஜின் இருக்கிறது. எனவே எங்களுக்கு ஜாப்கட் போன்ற பிரச்னைகள் எழுவதில்லை. நாங்கள் 2008 - 09 பிரீமியம் வசூலில் 65 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். கடந்த நிதி ஆண்டில் நாங்கள் பிரீமியம் தொகையாக ரூ.2,714 கோடி வசூல் செய்திருந்தோம். இந்த நிதி ஆண்டில் அது ரூ.3,500 கோடியாக உயர்ந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம் .இந்த நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலேயே நாங்கள் 65 சதவீத வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். அது, இந்த நிதி ஆண்டு முழுவதிற்கும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இப்போது எங்களிடம் 30 லட்சம் பாலிசிதாரர்கள் இருக்கிறார்கள் என்றார் அவர்.

நன்றி : தினமலர்



No comments: