Monday, November 3, 2008

ஆள் எடுக்க இந்தியா வருது லேமென்

அமெரிக்க நிதி நெருக்கடி சிக்கலில் சிக்கிய முதலீட்டு வங்கி, நிதித்துறையில் வர்த்தகம் செய்யும் 'லேமென் பிரதர்ஸ்' நிறுவனம், இந்தியாவில் வழக்கம் போல, எம்.பி.ஏ., மாணவர்களை வேலைக்கு எடுக்க வர உள்ளது. அமெரிக்காவில் நிதி நெருக்கடியில் லேமென் வங்கி பாதிக்கப்பட்டாலும், இந்தியாவில் அதன் வர்த்தகம் பாதிக்கப்படவில்லை; ஊழியர்களுக்கும் வேலை இழப்பு ஏற்படவில்லை. ஆசிய, ஐரோப்பிய கிளை நிறுவனங்களின் பங்குகளை, ஜப்பானின் 'நோமுரா' கம்பெனியிடம் விற்றதை அடுத்து, இந்த நிறுவனங்கள் தலை தப்பியது. இந்திய கிளையும் இதில் உள்ளதால், எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
ஜப்பான் நிறுவனத்திடம் இந்த நிறுவனங்கள் கைமாறுவது குறித்த சட்ட நடவடிக்கைகள் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். அதன்பின், லேமென் இந்திய மற்றும் ஆசிய கிளை நிறுவனங்கள் வழக்கம்போல வர்த்தகத்தை நடத்தும். இந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.ஏ., மாணவர்களை வேலைக்கு எடுக்கும் 'பிளேஸ்மென்ட்' முகாமில் பங்கேற்கும் சர்வதேச நிறுவனங்களில் லேமென் முன்னணியில் இருக்கும். கடந்தாண்டு கூட, ஆமதாபாத் உட்பட சில நகரங்களில் உள்ள ஐ.ஐ.எம்.,களில் இருந்து எம்.பி.ஏ., மாணவர்களுக்கு பல லட்சம் ஆண்டு சம்பளம் நிர்ணயித்து வேலைக்கு எடுத்துச் சென்றுள்ளது. இந்தாண்டு வருவது சந்தேகம் தான் என்று சொல்லப்பட்ட நிலையில், லேமென் அதை மறுத்துள்ளது. இதன் இந்திய அதிகாரிகள் கூறுகையில், 'லேமென் தன் நிதி நெருக்கடி சிக்கலில் இருந்து மீண்டு வருகிறது. தன் ஊழியர்களுக்கு 50 சதவீத கூடுதல் போனஸ் தந்துள்ளது. இந்திய நிறுவனத்தில் பணியாற்றும் மூவாயிரம் பேரில் யாரும் வெளியேற்றப்படவில்லை' என்று தெரிவித்தார். அமெரிக்காவில் பல நிறுவனங்கள், வங்கிகளில் இருந்து இதுவரை ஒன்றரை லட்சம் பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். லேமென் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால், பல நிறுவனங்களுக்கு தெம்பு ஏற்பட்டுள்ளது. ஆட்குறைப்பை குறைத்து கொள்ள திட்டமிட்டுள்ளன.
நன்றி : தினமலர்