Monday, November 3, 2008

தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பாததால் 400 கோடி ரூபாய் பனியன் உற்பத்தி பாதிப்பு

பனியன் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள், திருப்பூர் திரும்பாததால் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள பனியன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் 2,000க்கும் அதிகமான ஏற்றுமதி பனியன் உற்பத்தி நிறுவனங்களும், 1,500க்கும் அதிகமான உள்நாட்டு வர்த்தகத்துக்கான பனியன் உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. இவற்றின் துணை நிறுவனங்களான சாய, சலவை ஆலைகள் ஸ்கிரீன் பிரின்டிங், பவர் டேபிள் நிறுவனங்கள், செக்கிங் சென்டர்கள், எம்ப்ராய்டரிங் உள்ளிட்ட 2,000க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன.இவற்றில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள் மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். சாய, சலவை ஆலைகளில் பணியாற்றும் 90 சதவீத தொழிலாளர்கள் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.வெளியூர் தொழிலாளர்கள் அனைவரும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று 10 நாட்களுக்கு மேல் தங்கி இருந்து வருவார்கள். இதில், 20 சதவீதம் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு சென்று விட்டு திரும்பி வருவதில்லை. சொந்த ஊர்களிலேயே விவசாயம் உள்ளிட்ட பிறதொழில்களில் ஈடுபடுகின்றனர். இதனால் ஆண்டுதோறும் பனியன் நிறுவனங்களுக்கு தீபாவளி முடிந்தவுடன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல் போனஸ் பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு கடந்த மாதம் 24ம் தேதியில் சென்றவர்கள் நேற்று வரை திரும்பவில்லை.கடந்த ஒருவார காலமாக 3,000க்கும் அதிகமான பனியன் நிறுவனங்களிலும் உற்பத்தியை துவங்க முடியாமல், மூடியிருந்தன. பல நிறுவனங்களின் முன் பல்வேறு பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவையென விளம்பர அட்டைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.பெரும்பாலான நிறுவனங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. தொழிலாளர்கள் வெளியூர்களில் இருந்து இன்று திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் பனியன் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.ஒரு வாரத்தில் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்றுமதி வர்த்தகத்துக்கான பனியன் உற்பத்தி நிறுவனங்களில் அதிகமாக வெளியூர் தொழிலாளர்கள் பணியாற்றுவதால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.தொழில் நிறுவனங்கள் செயல்படாததால், அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் வியாபாரம் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்களில் கூட ரசிர்கள் கூட்டம் இல்லாததால் பெரும்பாலான தியேட்டர்களில் புதுப்படம் திரையிடப்பட்டும் வசூல் இல்லையென தியேட்டர் உரிமையாளர் ரேவதி ராஜா தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: