Monday, November 17, 2008

இன்னும் 5 ஆண்டுகளில் ரூ.3,000 கோடியை முதலீடு செய்கிறது அப்பல்லோ டயர்ஸ்

வாகனங்களுக்கான டயர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அப்பல்லோ டயர்ஸ், இன்னும் ஐந்து ஆண்டுகளில் ரூ.3,000 கோடியை முதலீடு செய்கிறது. இந்தியா மற்றும் வெளிநாட்டில் புதிதாக இரண்டு கிரீன்ஃபீல்ட் டயர் தொழிற்சாலைகளை அமைக்கவும் ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்தவும் இந்த பணம் செலவு செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சென்னை மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் புதிய தொழிற்சாலைகளை அமைப்பதன் மூலம், இன்றும் ஐந்து ஆண்டுகளில் அதன் மொத்த வரவு செலவை 4 பில்லியன் டாலராக உயர்த்தி, உலகின் மிகப்பெரிய ஆறு டயர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து விட அது திட்டமிட்டிருக்கிறது. நாங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் ரூ.3,000 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம். எனக்கும் எங்கள் குழுவினருக்கும் இருக்கும் ஒரே ஆசை என்னவென்றால், எப்படியாவது உலகின் மிகப் பெரிய டயர் தொழிற்சாலைகள் ஆறில் ஒன்றாகி விட வேண்டும் என்பதுதான் என்றார் அப்பல்லோ டயர்ஸின் வைஸ் சேர்மன் மற்றும் ஜாயின்ட் எம்.டி., நீரஜ் கன்வார். நாங்கள் ஹங்கேரியில் இருந்து வெளியேறியதும் ஸ்லோவாக்கியா அல்லது போலந்தில் ஒரு தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்திருக்கிறோம். அங்கு ரூ.1,200 கோடி முதலீட்டில், வருடத்திற்கு 70 லட்சம் பயணிகள் வாகன ரேடியல் டயர்களை தயாரிக்க முடிவு செய்திருக்கிறோம். இப்போது சென்னையில் ஒரு புது தொழிற்சாலையை அமைத்துக்கொண்டிருக்கிறோம். அது அடுத்த வருடம் முடிவு பெற்றுவிடும். சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கியதும் நாங்கள் வருடத்திற்கு 35,000 பயணிகள் வாகன ரேடியல் டயர்களும், 1,800 பஸ், லாரி டயர்களும் தயாரிப்போம். அப்போது இந்திய டயர் சந்தையில் 25 - 28 சதவீத மார்க்கெட் ஷேர்களை நாங்கள் பெற்று விடுவோம் என்றார் நீரஜ்.
நன்றி : தினமலர்


No comments: