Sunday, August 24, 2008

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கள்ள நோட்டு அபாயம்: அச்சம் தருகிறது உளவுத்துறை கணிப்பு

இந்தியா முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களில், 28 சதவீதம் கள்ள நோட்டுக்கள் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது புலனாய்வுத் துறை. மக்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்களில், நான்கில் ஒன்று கள்ள நோட்டு.புலனாய்வுக் குழு (ஐ.பி.,) திரட்டியுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்தியாவில், புழக்கத்தில் உள்ள பணத்தில் ரூ. 1.7 லட்சம் கோடி பணம், கள்ளநோட்டுக்கள். 2008, ஜூலை 18ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, இந்தியாவில் மக்கள் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ. ஆறு லட்சத்து மூவாயிரம் கோடி. புலனாய்வுக் குழு வெளியிட்ட தகவலை ஒப்பிட்டால், புழக்கத்தில் உள்ள ஆறு லட்சத்து மூவாயிரம் கோடி ரூபாயில், 28 சதவீதம் கள்ள நோட்டுக்கள். ரிசர்வ் வங்கி கையிருப்பாக வைத்திருக்கும் வெளிநாட்டு கரன்சிகள், தங்கம் போன்றவற்றின் மதிப்புக்கு இணையாக, ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும் காலம் இப்போது கிடையாது.
ஆனால், கள்ளநோட்டுக்களும் பெருமளவு சேர்வதால், ரூபாயின் மதிப்பு படுபாதாளத்துக்கு போவதுடன், பணவீக்கம் பெரிதும் அதிகரித்து, விலைவாசி கடுமையாக உயருமே தவிர குறையாது. அதேசமயம் கள்ள நோட்டு நடமாட்டத்தால், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமே சிதைந்து போகும் அபாயம் காத்திருக்கிறது.கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்கு, வங்கி அதிகாரிகளே துணை போகும் அவலமும் இந்தியாவில் உள்ளது. சமீபத்தில் உ.பி.,யில் அரசு வங்கியான ஸ்டேட்பாங்க் மற்றும் தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டன. ஸ்டேட் பாங்க் காசாளர் வீட்டில் நடத்திய சோதனையில், 7.21 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப் பட்டது. இதில், ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கள், கள்ள ரூபாய் நோட்டுக்கள்.
புலனாய்வு குழு வெளியிட்ட தகவலை ரிசர்வ் வங்கி மறுத்த போதும், இந்த அளவு கள்ளநோட்டுகள் எப்படிப் புழங்குகின்றன என்பதற்கு சரியான ஆதாரம் மற்றும் புள்ளிவிவரம் இல்லை. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மூத்த போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் டில்லியில் நடந்த போது, வங்கித் துறையே கள்ள நோட்டு புழக்கத்துக்கு காரணமாக இருப்பதை, உ.பி., மாநில அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார். இதை தடுப்பதற்குரிய வழிவகை இல்லாததும் சுட்டிக் காட்டப்பட்டது. கள்ள நோட்டுகள் பிடிபட்ட சம்பவங்களில் வங்கியின் சில அதிகாரிகளே உதவியதாகக் கூறப்படுவது போலீசாருக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது.
ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும் ரூபாய் நோட்டுக்கள், இந்தியா முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 422 கருவூலங்கள் மூலம் வினியோகிக்கப் படுகின்றன. இந்த கருவூலங்களிலேயே கள்ளநோட்டுக்கள் ஊடுருவும் அபாயமும் உள்ளது. புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்கள், சாதாரணமாக ஒரு வங்கியின் காசாளரால் அடையாளம் காணமுடியாத அளவுக்கு நவீனத் தொழில் நுட்பத்துடன் துல்லியமாக அச்சிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளால், வைக்கப் பட்டுள்ள ஏ.டி.எம்., இயந்திரங்களில், கள்ளநோட்டுக்கள் கலந்து உள்ளன.இதனால், அதைப் பயன்படுத்தி பணம் எடுப்போர், எடுக்கப்படும் ரூபாய் நோட்டு, தற்செயலாக கள்ள நோட்டாக இருப்பதை அறிந்தால், அவர்கள் மாட்டிக் கொள்வார்களே தவிர, அதற்கு ஈடாக நல்ல நோட்டு பெற முடியாது. ஆகவே, ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி பணபட்டுவாடா நிலையத்தில் கள்ள நோட்டு ஊடுருவும் அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டதால், இன்று இப்பிரச்னையின் பூதாகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.அதேநேரம் ரியல் எஸ்டேட்களில் பெருமளவு முதலீடு செய்யும் பெரும்பணக்காரர்கள், அதில் ஒரு பகுதியை, கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற பயன்படுத்துகின்றனர். இந்த கறுப்புப் பணத்தில் ஒரு பகுதி கள்ள நோட்டுக்களாக உள்ளன. ரியல் எஸ்டேட் துறையில் தான் அதிகளவில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்துக்கு கொண்டுவரப்படுகின்றன என்பதும் அதிர்ச்சி தரும் தகவல். கள்ள நோட்டுக்களுடன் சிக்குவோரிடமும், சந்தேகத்துக்கு இடமானோரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இந்திய கரன்சி நோட்டுக்களை அச்சிடுவதற்கென்றே பாகிஸ்தானில், அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் கண்காணிப்பின் பிரத்யேக அச்சகம் அனைத்து உள்கட்டமைப்புகளுடன் இயங்கி வருவது தெரியவந்துள்ளது அதேபோல, ஐரோப்பாவில் செயல்படும் பாகிஸ்தான் நிறுவனங்களும் இந்திய கரன்சியை அச்சிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாகிஸ்தான் நிறுவனங்கள் வாங்கும் கரன்சி நோட்டு அச்சிட பயன்படுத்தும் காகிதம், அதன் தேவைக்கு மிக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவைப் போலவே, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கள்ளநோட்டுக்கள் அச்சிடப்படுவதால், அவற்றை கண்டுபிடிப் பது முடியாத காரியமாக உள்ளது. கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை தடுப் பதற்கு, வங்கித்துறையில் உரிய கட்டுப் பாடுகளும், கறுப்புப் பண புழக்கத்தை தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகளும் எடுக்கப் பட வேண்டியது அவசியமாகி உள்ளது.

1 comment:

ram said...

very informative excellent work keep it up