Sunday, August 24, 2008

கதிகலங்க செய்த பங்குச் சந்தையில் வரவேற்கத்தக்க திடீர் திருப்பம்...


முன்பெல்லாம் வெள்ளியன்று சந்தை முடியும் போது பயமுறுத்திக் கொண்டிருந்த பணவீக்கம், வியாழக்கிழமையே பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. அதுவும், 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்பது போல பணவீக்க புள்ளி விவரம் வெளிவருவதற்கு முன்னரே (வியாழன் மாலை வெளியிடப்படுகிறது) பங்குச் சந்தையை புரட்டிப் போட்டு விடுகிறது. அப்படித்தான் இருந்தது வியாழக் கிழமை சந்தை. காலையிலிருந்தே சந்தை குறைய ஆரம்பித்தது. போதாக்குறைக்கு ஆசிய பங்குச் சந்தைகளும் விழுந்தன. மீண்டும் கூடி வரும் கச்சா எண்ணெய் விலையும் சேர்ந்து மொத்தமாக பங்குச் சந்தையை 435 புள்ளிகள் விழ வைத்தன. பணவீக்கம் கூடுகிறது என்றாலே அது வங்கிப் பங்குகளையும், கட்டுமானத்துறை பங்குகளையும் தான் அசைத்துப் பார்க்கும். வங்கித் துறை 5.2 சதவீதமும், கட்டுமானத்துறை 5.1 சதவீதமும் கீழே இறங்கின.

சமீப காலமாக கட்டுமானத் துறை மிகவும் கீழே இறங்கி வருவது ஒரு கவலைக்குரிய விஷயமாகும். 1997 மற்றும் 1998ம் ஆண்டுகளில் இதுபோல ஒரு பெரிய சரிவை சந்தித்தது. அதன் பிறகு வீறு கொண்டு எழுந்த கட்டுமானத் துறை, மறுபடி கீழே இறங்கி வருவது அது சார்ந்துள்ள எல்லா துறை பங்குகளையுமே அசைத்துப் பார்க்கும்.வியாழனைப் போல வெள்ளியும் துவக்கத்தில் கீழேயே இருந்தது. ஒரு கட்டத்தில் 100க்கும் அதிகமான புள்ளிகள் கீழே சென்றிருந்தன. சரி, இந்த வாரம் மொத்தமாக நஷ்ட வாரம் தான் என்று பலரும் நினைத்திருந்த போது ஐரோப்பிய சந்தைகளின் நல்ல துவக்கம், லண்டனில் உலகச் சந்தையில் மெட்டல் விலைகள் கூடியதால் அதன் எதிரொலி இங்கும் கேட்டது. பங்குச் சந்தை சிறிது மேலே வர அதுவும் ஒரு காரணமாக இருந்தது. குறிப்பாக ஸ்டெர்லைட், ஹிண்டால்கோ பங்குகளின் விலைகள் கூடின. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 14,401 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4,327 புள்ளிகளுடனும் முடிவடைந்தன. சென்செக்ஸ் 14,400ஐ தாண்டியும், நிப்டி 4,300ஐ தாண்டியும் முடிந்து இருப்பது ஆச்சரியமான திருப்பம் தான். இது வரவேற்கத்தக்கது.அம்பானி சகோதரர்களின் பிரச்னை: அம்பானி சகோதரர்களின் பிரச்னைகளை, அவர்களின் அம்மா கோகிலா பென்னை வைத்து தீர்த்துக் கொள் ளும்படி கோர்ட் கூறியுள்ளது. இது ஒரு நல்ல முடிவைத் தரும் என்று பலரும் நினைப்பதால், அவர் களின் கம்பெனி பங்குகள் மேலே சென்றன.

ஐ போனும், பங்கு சந்தையும்: உலகில் பல நாடுகளில் அறிமுகமான ஆப்பிள் கம்பெனியின் ஐ போன் இந்தியாவிற்கு வராதா என்று பலரும் ஏங்கிக் கொண்டிருந்தனர். தற்போது, இந்தியாவிலும் வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய கம்பெனிகள் ஐ போனை அறிமுகம் செய்துள்ளன. விலை சாதாரண போன்களை விட அதிகமாக உள்ளதால், ஐ.சி.ஐ.சி.ஐ., பாங்க், அக்சிஸ் பாங்க், பார்கலேஸ் பாங்க் ஆகியவை இந்த போனை வாங்குவதற்கு கடன்களும் கொடுக் கப் போகின்றன என்ற செய்திகளும் வருகின்றன. நன்கு விற்பனை ஆகும் பட்சத்தில் பாரதி ஏர்டெல் கம்பெனியின் பங்கு விலைகள் கூடலாம்.எப் அண்ட் ஓவிற்கு சென்ற பங்குகள்: 39 பங்குகள் எப் அண்ட் ஓ செக்மெண்டில் 21ம் தேதி முதல் பட்டியலிடப்பட்டது. பலரும் இந்தப் பங்குகள் நன்றாக விலைகள் கூடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், பட்டியலிடப்பட்ட தினத்தன்று மூன்று பங்குகள் வர்த்தகமே நடைபெறவில்லை. மற்ற பங்குகளில் பல 2 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கீழே விழுந்தன. 18 பங்குகளில் எப் அண்ட் ஓ டிரேடிங்கில் 50 டிரேட் மட்டும் தான் நடைபெற்றது.புதிய வெளியீடு: 22 கம்பெனிகள் புதிய வெளியீடுகள் கொண்டு வருவதற்காக செபியிடம் வாங்கியிருந்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. சந்தையின் நிலைமை சரியில்லாததால், தற்போது புதிய வெளியீடுகள் கொண்டு வரும் பட்சத்தில் அது சரியாக விற்காது, முதலீட்டாளர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற எண்ணத்திலே பலரும் தங்களது திட்டங்களை ஒத்தி வைத்துவிட்டனர். அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: சந்தையின் நிலைமை இன்னும் மேலேயும், கீழேயும் தான் இருக்கிறது. பலரும் பணங்களை கைகளில் வைத்துள்ளனர். சந்தையில் முதலீடு செய்ய மனது வரவில்லை.
ஏனெனில், வங்கிகளில் 10 சதவீதம் அளவு வட்டி கிடைக்கிறது. அதில் முதலீடு செய்து விட்டு அக்கடா என்று இருக்கலாம் என்று தான் நினைக்கின்றனர். இது தவிர, மியூச்சுவல் பண்டுகள் வைத்திருக்கும் பணங்களும் சந்தைக்கு வரவில்லை. சந்தை இப்போதுள்ள நிலையில் சிறு முதலீட்டாளர்களுக்கு சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை. அன்றாட வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் சற்று ஒதுங்கியிருப்பது நல்லது. கையில் உள்ள பங்குகள் லாபத்தை எட்டினால் விற்று விட்டு, சரிவுக்காக காத்திருப்பதே மேல்.அடுத்த வாரம்' டிரைவேடிவ் டிரேடிங்' முடிவு தேதி வருகிறது. அதுவரை இது போல மேலும், கீழுமாகத்தான் இருக்கும்.காத்திருப்போம் பொறுமையாக.

-சேதுராமன் சாத்தப்பன்-

நன்றி :தினமலர்


No comments: