Tuesday, August 26, 2008

டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன் ?

ஏப்ரல் - ஜூலை மாதத்தில் இந்தியாவின் டீசல் தேவை ( டிமாண்ட் ) சராசரியாக 18 சதவீதம் அதிகரித்திருக்கிறது. மின் உற்பத்தி நிலையங்களில் டீசலுக்கான தேவை அதிகரித்திருப்பதால் தான் இந்த உயர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் இந்தியாவில் டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. டீசலுக்கான தேவை அதிகரித்திருப்பதாலும் இந்தியாவில் கிடைக்கும் பெட்ரோலிய உற்பத்தி குறைந்திருப்பதாலும் நாம் 2008 - 09 ல் 4.14 மில்லியன் டன் டீசலை இறக்குமதி செய்ய வேண்டியதாகிறது. இதில் 1.267 மில்லியன் டன் டீசலை ஏப்ரல் - ஜூலையில் இறக்குமதி செய்திருக்கிறோம் என்று ஐ ஓ சி சேர்மன் புகாரியா தெரிவித்தார். மேலும் இப்போதுள்ள டீசல் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக, இப்போது லிட்டருக்கு ரூ.34.80 என்ற விலையில் விற்கப்படும் டீசலை, தொழிற்சாலைகள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு விற்கும் போது, லிட்டருக்கு ரூ.57 என்ற விலையில் விற்கலாம் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன. எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக டீசலை வாங்கும் இந்திய ரயில்வே, மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற நிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ.57 என்று விலை வைக்கலாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் மத்திய பெட்ரோலிய துறைக்கு பரிந்துரை செய்திருக்கிறது. மேலும் போக்குவரத்து துறை மற்றும் விவசாயத்துறைக்கு தள்ளுபடி விலையில் சப்ளை செய்யும் டீசலுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் பெட்ரோலிய அமைச்சர் முர்ளி தியோரவை சந்தித்து டீசல் தட்டுப்பாடு குறித்து விவாதித்த எண்ணெய் நிறுவன அதிகாரிகள், அப்போது, ஏப்ரல் - ஜூலை மாதங்களில் மட்டும் இந்தியாவில் டீசலுக்கான தேவை 18 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்த 18 சதவீததேவை அதிகரிப்பு பெரும்பாலும் மின்நிலையங்களால்தான் ஏற்பட்டிருக்கிறது என்றனர். போக்குவரத்து, விவசாயம் போன்ற துறைகளில் டீசலின் தேவை 10 - 12 சதவீதமும், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் டீசலின் தேவை 30 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்றனர்.
நன்றி : தினமலர்


No comments: