Saturday, August 30, 2008

8 சதவீத வளர்ச்சி சிதம்பரம் நம்பிக்கை

'நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் கண்டிப்பாக 8 சதவீதமாக இருக்கும்' என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.மும்பை பங்குச் சந்தையில், 'கரன்சி பியூச்சர் டிரேடிங்'கை மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று துவக்கி வைத்தார். நேற்று வர்த்தகம் துவங்கிய முதல் நாளில் அமெரிக்க டாலர் ரூ.44.15 என்ற விலையில் வர்த்தகமாகியது. மொத்தம் ஐந்தாயிரம் வர்த்தக ஒப்பந்தங்கள், வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் ஏற்பட்டன. இந்த வர்த்தகத்தில் பங்கேற்க 300 உறுப்பினர்கள், 11 வங்கிகள் பதிவு செய்துள்ளன. இதில், முதல் முறையாக வங்கிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டன. இருப்பினும், பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் அனைவரும் வர்த்தகத்தில் பங்கேற்கவில்லை.இந்த விழாவிற்கு பின், நிருபர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 சதவீதம் என்ற அளவில் நிலை பெறும்.கடந்தாண்டு நான் சொன்னபடி, மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாக இருந்தது. என்னுடைய கணிப்புப்படி, ஆண்டு வளர்ச்சியானது பெரும்பாலும் சரியாக இருக்கும்.கரன்சி பியூச்சர் டிரேடிங்கில் ஒரு முதலீட்டாளர், அன்னிய செலாவணி சந்தையில் ஏற்படும் அபாயங்களுக்கு இதை ஹெட்ஜிங் செய்து கொள்ளலாம். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், குடியுரிமை பெறாத இந்தியர்கள் ஆகியோர் பங்கேற்க முடியும்.ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவிக்கு காலியிடம் ஏற்படும் சமயத்தில் அப்போது முடிவு செய்யப்படும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.ஆனால், ரிசர்வ் வங்கி கவர்னர் வரும் 5ம் தேதி ஓய்வு பெறுகிறார். கவர்னர் பதவியில் தொடர்ந்து இருக்க விரும்பவில்லை என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில், டில்லியில் மத்திய புள்ளியியல் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:நடப்பு நிதியாண்டில், முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 சதவீதமாக இருந்தது. இதே காலகட்டத்தில் கடந்தாண்டு 9.2 சதவீதமாக இருந்தது.தயாரிப்பு பிரிவு மற்றும் மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட பின்னடைவால் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்தாண்டு பொருட்கள் தயாரிப்பு பிரிவில் வளர்ச்சி 10.9 சதவீதமாக இருந்தது. அது, தற்போது 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல் மின்சக்தி உற்பத்தியானது 7.9 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்


No comments: