Monday, June 30, 2008

பங்கு சந்தையில் தொடர்ந்து கடும் வீழ்ச்சி : இன்று 340 புள்ளிகள் வீழ்ந்தன


மும்பை : கடந்த வெள்ளி அன்றே மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 619 புள்ளிகள் குறைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சென்செக்ஸ் 340 புள்ளிகள் குறைந்து விட்டது. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சென்செக்ஸ் குறைய ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்த சென்செக்ஸ் மாலை வர்த்தகம் முடிவில் 340.62 புள்ளிகள் குறைந்து 13,461.60 புள்ளிகளில் முடிந்தது. அதே போல் தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 96.10 புள்ளிகள் குறைந்து 4,040.55 புள்ளிகளில் முடிந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாற்று சாதனையாக பேரல் ஒன்றுக்கு 142.76 டாலராக உயர்ந்து விட்டதாலும், இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலை ( அணுசக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறைவேற்றினால் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கம்யூனிஸ்டுகள் சொல்லிவிட்டதால் முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்பதால் ) காரணமாகவும் பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இன்றும் பங்குகளை விற்றவர்களே அதிகம். பங்குகளை வாங்க ஆள் இல்லாத நிலை ( அதாவது கரடியின் ஆதிக்கம் ).இன்று அதிகம் நஷ்டமடைந்தவர்கள் அம்புஜா சிமென்ட்ஸ், டி எல் எஃப், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பி பி சி எல், ஏ சி சி, மற்றும் பி என் பி.


Sunday, June 29, 2008

பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு இது சோதனை காலம்


சந்தை 15,000 புள்ளிகளுக்கு கீழே வரும் போதெல்லாம் முன்னர் சப்போர்ட் இருந்து வந்தது. தற்போது, எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் சந்தை விழுந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு காரணங்களுக்காக 14,000க்கும் கீழே இறங்கி பலரையும் கிறங்கடித்துக் கொண்டிருக்கிறது.
புதன் அன்றும், வியாழனன்றும் சந்தை சிறிது மேலே சென்றது. இரண்டு நாட்களில் கிடைத்த லாபங்களெல்லாம் வெள்ளியன்று காணாமல் போய்விட்டது.
நிரந்தரமற்ற அரசியல் சூழ்நிலை, சந்தை சரிய ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. இடதுசாரிகள், அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவை சந்தையின் பிடிப்புகளையெல்லாம் தளர்த்தி விட்டது.ரிலையன்ஸ், சாப்ட்வேர் பங்குகள், மெட்டல் பங்குகள், கட்டுமானத்துறை பங்குகள் எல்லாம் குறிப்பாக மேலே சென்றன. நேற்று நடந்த யூ.பி.ஏ., மற்றும் இடதுசாரி அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தள்ளி வைக்கப்பட்டன. இது, அவர்களுக்கிடையே நடைபெறும் ஒன்பதாவது பேச்சுவார்த்தை. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்கள் கூட்டப்பட்டதாலும், சி.ஆர்.ஆர்., விகிதங்கள் கூட்டப்பட்டதாலும், பல வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை கூட்டியது.வியாழனன்று முடிவாக மும்பை பங்குச் சந்தை 201 புள்ளிகள் கூடுதலாகவும், தேசிய பங்குச்சந்தை 63 புள்ளிகள் கூடுதலாகவும் முடிவடைந்தது.இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தில் இடதுசாரி கட்சிகள் ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் கையெழுத்திடலாம் என்று பிரதமருக்கு சோனியா கூறியுள்ளார் என்றும், அதனால் அரசு கவிழும் நிலை வந்தாலும் பரவாயில்லை; அதை கூட்டணி எதிர்கொள்ளும் என்று வந்த செய்திகள், சந்தையை வெள்ளியன்று கலகலக்கச் செய்தது என்று தான் கூற வேண்டும். இது தவிர, வியாழனன்று அமெரிக்க பங்குச் சந்தைகளும் கீழே சென்றிருந்தது. குறிப்பாக, டோ ஜோன் 360 புள்ளிகள் கீழே சென்றிருந்தது. இவையெல்லாம் சேர்த்து, சந்தை ஒரு கட்டத்தில் 650 புள்ளிகளுக்கும் மேலே, கீழே சென்றிருந்தது. பணவீக்கம் வேறு ஒரு புதிய அளவான 11.42 சதவீதத்தை எட்டியிருந்தது.
கூடி வரும் கச்சா எண்ணெய் விலைகள், வங்கி மற்றும் ஆட்டோ துறைகளைப் பாதிக் கும் என்ற கோல்ட்மென் சாக்ஸ் நிறுவன அறிவிப்பு, அமெரிக்காவில் வங்கி மற்றும் ஆட்டோ பங்குகளை பாதித்தது. கூடி வரும் கச்சா எண்ணெய் விலைகள், இந்தியாவிலும் இந்தத் துறைகளை வெகுவாக பாதிக்கலாம்.
வெள்ளியன்று வங்கி துறை, ஆட்டோ துறை, பவர் துறை, கட்டுமானத்துறை ஆகியவை 4 முதல் 5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ஐரோப்பிய சந்தைகளும் கீழேயே தொடங்கியதால், இந்திய சந்தைகள் வெள்ளியன்று மேலே வரவே இயலவில்லை. முடிவாக மும்பை பங்குச் சந்தை 619 புள்ளிகள் குறைந்து 13,802 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 179 புள்ளிகள் குறைந்து 4,136 புள்ளிகளுடன் முடிவடைந்தது.வரும் நாட்கள் எப்படி இருக்கும்?பணவீக்கம், அரசியல் சூழ்நிலை, கச்சா எண்ணெய் ஆகியவை சந்தையை இன்னும் பல நாட்கள் ஆட்டுவிக்கும். வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்பது எதிர்பார்க்கவே முடியாதபடி இருக்கிறது. பங்குச் சந்தைக்கு சோதனை நாட்கள் இவை. கம்பெனிகள் நன்கு பரிணமித்துக் கொண்டிருக்கும் வேளையில், பங்குச் சந்தையின் இது போன்ற சரிவுகள், பல முதலீட்டாளர்களின் மனதையும் சரித்திருக்கும். வாழ்க்கையில் பல சோதனைகள் வரும், அது போல இதுவும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சோதனை காலம்.

நன்றி : தினமலர்

சேதுராமன் சாத்தப்பன்



Friday, June 27, 2008

பணவீக்கம் மேலும் உயர்ந்தது


புதுடில்லி : மொத்த விலை பட்டியலை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்கம், ஜூன் 14ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 11.42 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இதற்கு முந்தைய வாரத்தில் 11.05 சதவீதமாக இருந்தது. கடந்த 13 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவாக பணவீக்கம் இந்தளவு உயர்ந்துள்ளது. முக்கிய உணவுப்பொருட்கள், டீ, பால், தாணிய வகைகளின் விலை உயர்ந்துள்ளதால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. எரிபொருள் விலை மற்றும் உற்பத்தி பொருட்களில் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
நன்றி: தினமலர்


Thursday, June 26, 2008

வட்டியை உயர்த்தியது ஸ்டேட் பேங்க்


மும்பை : வங்கிகளுக்கான ரெபோ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பி.எல். ஆர்., ( பிரைம் லெண்டிங் ரேட் ) ஐ 0.5 சதவீதம் உயர்த்தி 12.75 சதவீதமாக்கி இருக்கிறது. இந்த புதிய வட்டி விகிதம் நாளையில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெபோ ரேட் மற்றும் பண கையிருப்பு விகிதம் ஆகியவற்றை 0.5 சதவீதத்தை உயர்த்தி இருப்பதை அடுத்து ஸ்டேட் பேங்க்கின் அசட் லயபிலிட்டி கமிட்டி ( ஏ எல் சி ஓ ) இன்று கூடி விவாதித்த பின் இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஸ்டேட் பாங்க்கின் தலைமை நிதி அதிகாரி அசோக் முகந்த் இதனை தெரிவித்தார். கடனுக்கான வட்டியை உயர்த்தியதே தவிர டெபாசிட்டுக்கான வட்டியை உயர்த்தவில்லை. சமீபத்தில் தான் டெபாசிட்டுக்கான வட்டி உயர்த்தப்பட்டிருந்தது. எனவே இப்போது உயர்த்தவில்லை என்று முகந்த் தெரிவித்தார்


நீண்ட கால முதலீடுகளில் நம்பிக்கை வைக்கலாம்

சந்தை இறங்கிக் கொண்டே இருக்கிறது. இரண்டு வருடத்திற்கு முன் முதலீடு செய்தவர்கள் கூட, தாங்கள் இதுவரை பெற்றிருந்த லாபங்களை இழக்கும் நிலைக்கு சென்று விட்டனர். இது ஒரு அசாதாரண சூழ்நிலை என்று தான் கூற வேண்டும்.
பண வீக்கத்தை தவிர தற்போது நிலவி வரும் நிரந்தரமற்ற அரசியல் சூழ்நிலை, சந்தை சரிய ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. மாயாவதி, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தெரிவித்தது, எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது. மேலும், இடதுசாரிகள், அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவை அரசுக்கு தலைவலியாக இருப்பது, அரசியல் நிலைமையை மோசமாக்கியுள்ளது. 'பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தேவையான முயற்சிகளை எடுக்கும். என்னென்ன பிரச்னைகள் தற்போது இருக்கிறது. அதை போக்குவதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறது' என்று, ரிசர்வ் வங்கியின் கவர்னர் கூறிய அறிக்கை, பங்குச் சந்தையில் சந்தையின் சுரத்தை குறைத்தது. மோர்கன் ஸ்டான்லி என்ற நிறுவனம், வரும் டிசம்பர் மாதத்தில் மும்பை பங்குச் சந்தை 13,200 புள்ளிகள் அளவிற்கு வரும் என்று அறிக்கை வெளியிட்டது. இதற்கு காரணமாக கூறுவது ஒன்று. உலகளவிலான பிரச்னைகள், பண வீக்கம் ஆகியவை தான். முடிவாக திங்களன்று மும்பை பங்குச் சந்தை 277 புள்ளிகளை இழந்தது. பெரிய இழப்பு தான். செவ்வாயும், திங்களுக்கு சற்றும் இளைத்ததல்ல என்ற வகையில் சந்தை இருந்தது. எல்லா பங்குகளும் சரிந்தன. குறிப்பாக, வங்கிப் பங்குகள் அதிகம் நஷ்டத்தை சந்தித் தன. முடிவாக மும்பை பங்குச் சந்தை 186 புள்ளிகளை இழந்தது. நேற்று முன்தினம் சந்தை முடிவுக்கு பிறகு, எதிர்பார்த்தபடியே பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட்டை 60 புள்ளிகள் கூட்டியது. அதாவது 8 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாகப்பட்டது. 2002க்கு பிறகு இவ்வளவு அதிகமான ரேட் இருப்பது தற்போது தான். அதுவும் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக கூட்டப்பட்டிருக்கிறது.
இது தவிர, வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய சி.ஆர்.ஆர்., (ரொக்க கையிருப்பு விகிதம்) சதவீதத்தையும் 0.50 புள்ளிகள் கூட்டியுள்ளது. அதாவது, ஜூலை 5ம் தேதி முதல் 0.25 புள்ளிகள் அதிகமாகவும், ஜூலை 19ம் தேதி முதல் 0.25 புள்ளிகளும் கூட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று சந்தை துவங்கியவுடன் கீழேயே இருந்தது. ஆனால், மதியத்துக்கு மேல் சந்தை மேலே சென்றது ஏன்? இரண்டு காரணங்கள், ஒன்று, ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் கூடுதலும், சி.ஆர்.ஆர்., கூடுதலையும் எதிர் பார்த்து, எதிர்பார்த்து நிறைய புள்ளிகளை சந்தை சமீபத்தில் இழந்திருந்தது. இரண்டாவது ஜூன் மாதம் டிரைவேட்டிவ் கான்ட்ராக்டுகள் இன்று முடிவடைவதால், ஷார்ட் கவரிங் சந்தையில் இருந்ததால் சந்தை மேலே சென்றது. ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல் ஆகியவை மேலே சென்றது சந்தையை தூக்கிச் சென்றது.நேற்று முடிவாக மும்பை பங்குச் சந்தை 113 புள்ளிகள் அதிகமாகி 14,220 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தை 61 புள்ளிகள் கூடி 4,242 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இது சென்ற வாரத்தை விட குறைவாகும். கடந்த எட்டு மாதத்தில் சந்தை மிகவும் குறைவான நிலையை எட்டியுள்ளது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? பங்குச் சந்தையில் இது போன்ற நிகழ்வுகள் சாதாரணமாக நிகழ்வது தான். ஜனவரிக்கு முன், இரண்டு வருடங்கள் இந்தியப் பங்குச் சந்தைகள் பெரும்பாலும் வசந்த காலத் தையே பார்த்ததால், நமக்கு இழப்புகளை தாங்க இயலவில்லை. சம்பாதித்த எல்லா பணத்தையும் முதலீடு செய்ய பங்குச் சந்தை ஏற்ற இடமல்ல. சம்பாதித்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தான் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற அறிவுரை தற்போது கிடைத்திருக்கும். அதாவது, 100ல் உங்கள் வயதை கழித்துக் கொண்டு மீதி எவ்வளவு வருகிறதோ அவ்வளவு சதவீதம் உங்கள் சேமிப்பில் நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். அந்த முதலீடு நீண்ட கால முதலீடாக இருக்க வேண்டும்.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


ரூ. 560 கோடியில் பங்களா வாங்கினார் லட்சுமி மிட்டல்

இந்திய தொழில் அதிபர் லட்சுமி மிட்டல், லண்டனில் ரூ. 560 கோடியில் ஆடம்பர பங்களாவை வாங்கியுள்ளார். ஸ்டீல் உற்பத்தியில் சர்வதேச அளவில், இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் புகழ் பெற்று விளங்குகிறார். இந்த ஆண்டு வெளியான உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு. பிரிட்டனில், லட்சுமி மிட்டலுக்கு ஏற்கனவே இரண்டு ஆடம்பர பங்களாக்கள் உள்ளன. இந்நிலையில், லண்டனில் செல்வாக்கு மிகுந்தவர்கள் வசிக்கும் கென்சிங்டன் அரண்மனை தோட்ட பகுதியில் ஒரு புதிய பங்களாவை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு, ரூ. 560 கோடி.

நன்றி : தினமலர்