Monday, June 30, 2008

பங்கு சந்தையில் தொடர்ந்து கடும் வீழ்ச்சி : இன்று 340 புள்ளிகள் வீழ்ந்தன


மும்பை : கடந்த வெள்ளி அன்றே மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 619 புள்ளிகள் குறைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சென்செக்ஸ் 340 புள்ளிகள் குறைந்து விட்டது. இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே சென்செக்ஸ் குறைய ஆரம்பித்து விட்டது. ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்த சென்செக்ஸ் மாலை வர்த்தகம் முடிவில் 340.62 புள்ளிகள் குறைந்து 13,461.60 புள்ளிகளில் முடிந்தது. அதே போல் தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 96.10 புள்ளிகள் குறைந்து 4,040.55 புள்ளிகளில் முடிந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாற்று சாதனையாக பேரல் ஒன்றுக்கு 142.76 டாலராக உயர்ந்து விட்டதாலும், இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலை ( அணுசக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறைவேற்றினால் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கம்யூனிஸ்டுகள் சொல்லிவிட்டதால் முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்பதால் ) காரணமாகவும் பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இன்றும் பங்குகளை விற்றவர்களே அதிகம். பங்குகளை வாங்க ஆள் இல்லாத நிலை ( அதாவது கரடியின் ஆதிக்கம் ).இன்று அதிகம் நஷ்டமடைந்தவர்கள் அம்புஜா சிமென்ட்ஸ், டி எல் எஃப், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பி பி சி எல், ஏ சி சி, மற்றும் பி என் பி.


No comments: