Sunday, February 15, 2009

வீடுகள் விலை 30 சதவீதம் சரிவு: வாங்குவோர் தயக்கம்

கடந்த நான்கு மாதங்களில், வீடுகளின் விலை 30 சதவீதம் சரிந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜோனஸ் லாங் லாசல்லே மேக்ராஜ் என்ற ஆலோசனை அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இருப்பினும், வீடு வாங்குவதை பெரும்பாலானோர் தொடர்ந்து தள்ளிப் போட்டு வருகின்றனர். ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும்நிலையில், புதிய வீடுகள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள், வீடு வாங்குவோருக்கு ஏற்ப அதிக சுமையில்லாத விலையில் தயாராகி வருகின்றன. ஏற்கனவே, வாங்கப் பட்ட நிலங்கள் அதிக விலை கொடுக்கப்பட் டவை. இருப்பினும், அதிக லாபம் இல்லாமல், அந்த நிலங்களில் வீடுகள் கட்டி விற்பனை செய்ய பல்வேறு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால், வீடுகளின் விலை 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை சரிந்துள்ளது. வீடுகளின் விலை சரிந்துள்ள நிலையில், வங்கிக் கடன் வட்டி விகிதமும் சரிந்துள்ளது. இதனால், புதிய வீடுகள் விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பில் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் பணிகளை துவக்கி உள்ளன. குறிப்பாக, நடுத்தரப் பிரிவினர் வாங்கும் திறன் கொண்ட வகையில், குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு பல்வேறு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. இருப்பினும், பல்வேறு நிறுவனங்கள் ஆட் குறைப்பு போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பதால், வேலை நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வீடுகளின் விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பாலும், வீடு வாங்குவோர் மத்தியில் தொடர்ந்துதயக்க நிலையே காணப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் முதல், வீடு வாங்கும் திறன் அதிகரிக்கும் வகையில் பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக வீடுகளின் விலைகள் குறைக்கப் பட்டுள்ளன. வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள் ளது. குறிப்பாக, குறைந்த விலை வீடுகளின் விற்பனை ஸ்திரமடையும் என்ற எதிர்பார்ப்பு, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மேலும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு நுகர்வோர் மத்தியில் நிலவுகிறது. ஆனால், ஏற்கனவே, அதிக விலை கொடுத்து நிலம் வாங்கியிருப்பதால், இதற்கும் குறைவாக விலை நிர்ணயிக்க, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தயாராக இல்லை. இதனால், பல்வேறு நிறுவனங்கள் புதிதாக நிலம் வாங்கி, அதில் வீடுகள் கட்டி, குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.
நன்றி : தினமலர்


சேமிப்பு கணக்குக்கு இனி 'பான்' தேவையில்லை

வங்கியில் சேமிப்பு கணக்குக்கு 'பான்' கட்டாயம் இல்லை; ஒரு லட்சம் ரூபாய் மேற்பட்ட பிரிமியம் கட்டும் இன்சூரன்ஸ் திட்டங்களில் மட்டும் தான் இது தேவைப்படும். சட்டவிரோத நிதி நடமாட்டங்களை தடுக்க, கருப்புப்பணத்தை ஒழிக்க 'பான்' கார்டு முறை வெகுவாக கைகொடுத்து வந்தது. கடந்தாண்டு பட்ஜெட் உரையில் கூட, நிதி அமைச்சர் சிதம்பரம் பேசும் போது,'எல்லா வித வங்கி நிதி பரிமாற்றங்களிலும் 'பான்' கார்டு எண் குறிப்பிட வேண்டியது சட்டப்படி கடைபிடிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். சரியாக ஓராண்டு கழிந்த நிலையில், இப்போது தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள் ளது. பட்ஜெட் மீதான நடவடிக்கை அறிக் கை சமீபத்தில் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'பான்' கார்டு தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லா விதமான வங்கி நிதி பரிமாற்றங்களிலும் 'பான்' எண் குறிப்பிடப் பட வேண்டும் என்ற கட்டாயம் நீக்கப்படுகிறது. சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் கட்டும் போது 'பான் 'எண் குறிப்பிட வேண்டும் என்று அவசியம் இனி இல்லை. ஆனால், நடப்பு கணக்கு ஆரம்பிக்கும் போது மட்டும் இந்த 'பான்' எண் குறிப்பிட வேண்டும். இன்சூரன்ஸ் பாலிசி விஷயங்களில் மட்டும் , ஒரு லட்சத்துக்கு மேல் பிரிமியம் கட்டும் பட்சத்தில், 'பான்' எண் குறிப்பிடப்பட வேண்டும். இதனால், வங்கியில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பரிமாற்றம் செய்யும் போது 'பான்' எண் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறை நீங்குகிறது. தபால் சேமிப்பு திட்டங்களில் சேர்ந்தாலும், 'பான்' கட்டாயமாக குறிக்கப்பட வேண்டும் என்பது உட்பட 'பான்' கட்டுப்பாடு வரப்போகிறது என்று பேசப்பட்ட நிலையில், பெரும் சலுகையை இப்போது அரசு அமல்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், ஓட்டுக்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எண்ணினாலும், இதனால், பலருக்கும் பலன் கிடைத்துள்ளது என்பதே உண்மை. குறிப்பிட்ட தொகைக்கு மேல் கையாளும் போது, வங்கியில் 10 இலக்க 'பான்' குறிப்பிட வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை.
நன்றி : தினமலர்


Saturday, February 14, 2009

ரூ.1,400ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கம்

இந்தாண்டு துவக்கம் முதலே மதுரையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இம்மாதம் இறுதிக்குள் ஒரு கிராம் தங்கம் ரூ.1,400ஐ தொட்டாலும் ஆச்சரியமில்லை. கடந்த ஜன., 1ல் ஒரு கிராம் தங்கம் ரூ.1,251க்கும், ஜன., 2ல் ரூ.1,253க்கும், ஜன., 3ல் ரூ.1,256க்கும் விற்றது. ஜன.,7ல் ரூ.14 குறைந்து ரூ.1,242க்கும், ஜன., 8ல் ரூ.10 குறைந்து ரூ.1,232க்கும் விற்றது. ஜன., 9ல் ரூ.18 அதிகரித்து ரூ.1,250க்கும், ஜன., 10ல் மூன்று ரூபாய் குறைந்து ரூ.1,247க்கும் விற்ற நிலையில், ஜன., 11, 12ல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஜன., 13ல் ரூ.1,236க்கு விற்கப்பட்டது. ஜன., 14ல் ரூ.1,232, ஜன., 15, 16ல் ரூ.1,227, ஜன., 17, 18ல் ரூ.1,245க்கும், ஜன., 19ல் ரூ.1,243, ஜன., 20ல் ரூ.1,240க்கும் விற்றது. ஜன., 22ல் ரூ.22 அதிகரித்து ரூ.1,262க்கும், ஜன., 23ல் ரூ.1,265க்கும் விற்ற தங்கம், எப்போதும் இல்லாத அளவிற்கு ஜன., 24ல் கிராமுக்கு ரூ.36 அதிகரித்து ரூ.1,301க்கு விற்று பொதுமக்கள் வயிற்றில் 'புளியைக் கரைத்தது'. ஜன., 27 வரை இந்த விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஜன., 28ல் ரூ.1,299க்கும், ஜன., 29ல் ரூ.1,290ஆக குறைந்த தங்கம், ஜன., 30ல் மீண்டும் ரூ.1,300ஐ தொட்டது. அன்று மதியமே ரூ.16 அதிகரித்து ரூ.1,316க்கு விற்றது. மறுநாள் ரூ.1,322க்கும், பிப்., 2ல் ரூ.1,315க்கும் விற்ற தங்கம் பிப்., 3ல் ரூ.1,299 ஆக குறைந்தது. பிப்., 4ல் ரூ.1,297க்கு குறைந்து, பிப்., 5ல் ரூ.1,311 ஆக அதிகரித்து வரலாற்று சாதனை படைத்தது. பிப்., 6ல் இதே விலை நீடித்தது.
விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், பிப்., 7ல் ரூ.19 அதிகரித்து ரூ.1,330க்கு விற்றது. பிப்., 10 வரை இந்த விலையில் மாற்றமில்லை. பிப்., 11ல் ரூ.14 அதிகரித்து ரூ.1344க்கும், பிப்., 12ல் ரூ.1367க்கும் விற்ற தங்கம் நேற்று(பிப்.,13) ரூ.14 அதிகரித்து ரூ.1381க்கு விற்கப்பட்டது. வியாபாரிகள் கூறுகையில், ''ஆன்-லைன் வர்த்தகமே இதற்கு காரணம். தங்கத்தை ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
நன்றி : தினமலர்

Friday, February 13, 2009

குறைந்தது பணவீக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறைப்பு காரணமாகவும், தேயிலை, சமையல் எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களின் விலைக் குறைப்பு காரணமாகவும், பணவீக்கம் 4.39 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 31ம் தேதியுடன் முடிந்த வார இறுதியில் பணவீக்கம் 5.07 சதவீதமாக இருந்தது. இது 0.68 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலைக் குறைப்பு போன் றவை கருதப்படுகிறது. ஓராண்டுக்கு முன் இதே காலத்தில் பணவீக்கம் 4.74 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டில் தற்போது மிகக் குறைந்த அளவாக பணவீக்கம் காணப்படுகிறது.
நன்றி : தினமலர்


கோவை, கொச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் சர்வீஸ்

தமிழக தலைநகருக்கு, தென்பகுதி நகரங்களில் இருந்து தற்போதிருக்கும் விமான சேவையை அதிகப்படுத்தும் விதமாக, கோயம்புத்தூர் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு புதிய தினசரி விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய சேவைகள், அரசு அனுமதி கிடைத்ததும் செயல்படத் துவங்கும். தற்போது, கோயம்புத்தூர் - சென்னை இடையே தினசரி இரண்டு முறையும், கொச்சி - சென்னை இடையே தினசரி சேவையும் இயக்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சேவைகளும் தினசரி இயக்கப்படும். ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு, காலை 8.10 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். கோயம்புத்தூரில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டு, காலை 9.50 மணிக்கு சென்னை வந்தடையும். அதேபோல் ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, 7.30 மணிக்கு கொச்சி சென்றடையும். இரவு 8 மணிக்கு கொச்சியில் இருந்து புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு சென்னை வந்தடையும்.
நன்றி : தினமலர்

Thursday, February 12, 2009

உயிர் பெறுமா பங்குச் சந்தை? பட்ஜெட் முடிவு செய்யும்

வரப்போகும் மினி பட்ஜெட் மற்றும் கம்பெனிகளுக்கு இன்னும் பேக்கேஜ் என்று, சிறப்பான அரசு அறிவிப்புகள் வரும் வாரம் வருமென எதிர்பார்த்து பங்குச் சந்தைகள், திங்களன்று மிகவும் மேலே சென்றன. மும்பை பங்குச் சந்தை 283 புள்ளிகள் மேலே சென்று முடிவடைந்தது.
கடந்த சில மாதங்களில் இவ்வளவு புள்ளிகள் அதிகம் சென்றது ஒரு சில முறை தான். ஆகையால் முதலீட்டாளர்கள், சந்தை மேலே இவ்வளவு சென்றவுடன் இந்தியா கிரிக்கெட்டில் வென்றதை கொண்டாடுவது போல கொண்டாடினர். இது வரை இரண்டு பேக்கேஜுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒன்று வரலாம் என்ற எதிர்பார்ப்புகள் அதிகம் உள் ளன. நேற்று முன்தினமும் மேலே சென்றது. அதுவும், கடந்த ஒரு மாத உச்சத்திற்கு சென்றது. குறிப்பாக வங்கிப் பங்குகள் கூடின. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 370 கோடி ரூபாய் அளவிற்கு வாங்கியது ஒரு நல்ல அறிகுறி.
சந்தை அன்றைய தினம் 64 புள்ளிகள் மேலே சென்றது. திங்கள், நேற்று முன்தினம் இரண்டு தினங்களிலும் முதலீட்டாளர்களின் மதிப்பு 88 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்தது. 10 ஆயிரத்தை தொட்டு விடும் தூரம் தான் என்று நேற்று முன்தினம் சொன்னாலும், நேற்று கேட்கத் தயாராக இல்லை.
சந்தை துவக்கத்தில் 180க்கும் அதிகமான புள்ளிகளை இழந்திருந்தது. சந்தை மிகவும் மேலும், கீழுமாகவே இருந்தது. முடிவாக சந்தையில் வந்த ஒரு செய்தி என்னவென்றால், வரி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளில் சில திருத்தங்கள் வரப்போகின்றன என்ற தகவல்களால் சந்தைக்கு உயிர் வந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 28 புள்ளிகள் குறைந்து 9,618 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 8 புள்ளிகள் குறைந்து 2,925 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
புதிய வெளியீடு: எடுசர்வ் என்ற சென்னையைச் சேர்ந்த எஜுகேஷனல் நிறுவனம் தனது புதிய வெளியீட்டை 5ம் தேதி துவக்கி 9ம் தேதி முடித்தது. 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை வைத்து வெளி
யிடப்பட்ட இந்த வெளியீடு 1.03 தடவைகள் செலுத்தப்பட்டன.
சமீப காலத்தில் புதிய வெளியீடு என்பதே அரிதாக இருக்கும் சமயத்தில் இந்த வெளியீடு துணிச்சலாக வந்தது ஆச்சரியம் தான். எப்படி பட்டியலிடப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்த மாதத்தில் வெளியாகும் உள்நாட்டு மொத்த வளர்ச்சி புள்ளி விவரத்தில் 7 சதவீத வளர்ச்சி இருக்கிறதா, இல்லையா என்றும் நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கவும் உதவும்.
இந்தியாவும், சீனாவும் தான் இந்த ஆண்டு ஒரு சிறப்பான வளர்ச்சி விகிதத்தை எட்டும். மற்ற நாடுகளில் அவ்வளவு வளர்ச்சி விகிதங்கள் சிறப்பாக இருக்காது என்று பலரும் கணித்துள்ளனர்.
வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வருகின்றன. இன்னும் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கின்றன. குறைந்தால், கடன்கள் வாங்குவது கூடும். அது நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவும். மும்பை ஐகோர்ட் இடைக்கால உத்தரவுப்படி ரிலையன்ஸ் கிருஷ்ணா கோதாவரி பேசினிலிருந்து காஸ் தனியாருக்கு விற்கலாம் என்ற உத்தரவு அந்தக் கம்பெனிக்கு வருங்காலத்தில் லாபங்களை மிகவும் கூட்ட உதவும்.
வரும் வாரங்கள் எப்படி இருக்கும்? இன்று வரவிருக்கும் உற்பத்தி புள்ளி விவரம் ஒரு முக்கிய நிகழ்வு. இது பணவீக்க சதவீதத்தை விட அதிகமான முக்கியத்துவம் பெற்றது. தற்போதைய சூழ்நிலையில், நாளை வரவிருக்கும் ரயில்வே பட்ஜெட்டும், 16ம் தேதி தாக்கல் செய்யவிருக்கும் மத்திய மினி பட்ஜெட்டும் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. அதில் என்னென்ன சலுகைகள் வரப் போகிறது என்பதைப் பொறுத்தும் சந்தையின் போக்கு அமையும்.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்



Wednesday, February 11, 2009

20 ஆயிரம் ரோஜா இப்போதே ரெடி: காதலர் தினத்திற்காக காத்திருப்பு

காதலர் தினத்தை ஒட்டி, பல வகையான ரோஜாக்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. கோவை பூ மார்க்கெட்டில் மட்டும், 20 ஆயிரம் ரோஜாக்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், பிப்., 14ம் தேதி, காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்திற்கு, இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், கோவை பூ மார்க்கெட்டிற்கு, பெங்களூரு, ஓசூர், ஊட்டியிலிருந்து விதவிதமான ரோஜாக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. வெள்ளை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, இளம்சிவப்பு நிறங்களில் ரோஜாக்கள் உள்ளன. இது தவிர, ஓப்பன் டச், பார்ம், எக்ஸ்போர்ட் என்று மூன்று ரகங்களில் ரோஜாக்கள் உள்ளன. இவை பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், கடினமான, மெல்லிய, மிக மெல்லிய, இதழ்களை கொண்டிருக்கும். இதழ்களின் மிருது தன்மையை பொறுத்து, விலை நிர்ணயிக்கப்படும். ரோஜா வியாபாரி உமர் கூறியதாவது: ஊட்டியில் உற்பத்தி செய்யப்படும் ரோஜாக்கள், உள்ளூர் தேவைகளுக்கே சரியாக உள்ளது. கோவை மார்க்கெட்டிற்கு எப்போதாவது ஊட்டி மற்றும் குன்னூரிலிருந்து வருகிறது. இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிக்கு, பெங்களூரிலிருந்து தான் ரோஜாக்கள் அனுப்பப் படுகின்றன. 20 எண்ணிக்கை கொண்ட கட்டு, துவக்க விலையாக, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு உமர் கூறினார்.
நன்றி : தினமலர்