Monday, August 30, 2010

பாகிஸ்தான் - சீனா பாய்.. பாய்...!

இந்தியாவைச் சீண்டுவதும் பிறகு கைகுலுக்கிச் சமாதானம் பேசுவதும் சீனாவுக்கு வாடிக்கையாகிவிட்டது. அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொண்டாக வேண்டும் என்கிற நல்லெண்ணத்தால், நாமும் நமது அண்டை நாடுகள் நமக்கு இழைக்கும் துரோகங்களையும், அவமானங்களையும் தொடர்ந்து மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறோம். இதற்குப் பெயர்தான் ராஜதந்திரம் என்றோ, இதுதான் சாதுர்யமான வெளிவிவகாரக் கொள்கை என்றோ நமது ஆட்சியாளர்கள் கருதுவார்களேயானால், அதன் விளைவுகள் விளைவிக்க இருக்கும் பாதகங்கள் அளப்பரியது என்று நாம் எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்தியாவிலிருந்து உயர்நிலை ராணுவ அதிகாரிகளின் குழு ஒன்று பெய்ஜிங்குக்குச் செல்வதாக இருந்தது. அந்தக் குழுவில் இந்திய ராணுவத்தின் வடஎல்லையின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். ஜஸ்வாலும் இடம்பெற்றிருந்தார். ஆனால், எந்தவிதக் காரணமும் குறிப்பிடாமல் அவருக்கு மட்டும் நுழைவு அனுமதி (விசா) வழங்க பெய்ஜிங் மறுத்து விட்டிருக்கிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கிழக்கு எல்லையில் பிரச்னைகள் இருப்பது உலகறிந்த உண்மை. அருணாசலப் பிரதேசத்தில் தொடங்கி நமது வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த பல பகுதிகளை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. இப்போது இந்தியாவின் தலைமை ராணுவத் தளபதியாக இருப்பவர் முன்பு கிழக்கு கமாண்டின் தலைமைத் தளபதியாக இருந்தபோது, சீனாவுக்குச் சென்று வந்திருக்கிறார். எல்லைப் பிரச்னைக்காக நுழைவு அனுமதி வழங்காமல் இருப்பதாக இருந்தால் அவருக்கு அனுமதி மறுத்திருக்க வேண்டும்.

லெப்டினன்ட் ஜெனரல் ஜஸ்வாலுக்கு அனுமதி மறுத்திருப்பதற்குக் காரணம் என்ன என்று விசாரித்தபோது, இதற்குக் காரணம் பாகிஸ்தான் என்பது தெரிகிறது. சமீபகாலமாகவே, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு நாளும் பொழுதும் பலமடைந்து வருகிறது. பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதிகளை சீனாவின் பாதுகாப்பில் விடுவதற்கான ஆலோசனை பாகிஸ்தானின் ராணுவத்தால், அந்த நாட்டு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக சில நாள்களுக்கு முன்னால் அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்திருந்ததை நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்.

மேல்நாட்டு வல்லரசுகளும் சரி, சீனாவும் சரி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டுவிடாமல் காஷ்மீர் பிரச்னை தீர்ந்துவிடாமல் பாதுகாப்பதற்கு ஒரு காரணம் உண்டு.

காஷ்மீரைத் தனி நாடாக்கி அங்கே தங்களது ராணுவத் தளத்தை நிறுவிவிட்டால் எண்ணெய் வளம் கொழிக்கும் மேற்காசியாவையும், பாரசீக வளைகுடாவையும், ரஷியாவையும், இந்தியாவையும், சீனாவையும் ஒருசேரக் கண்காணிக்கும் வகையில் செயல்பட முடியும் என்பதால்தான், எல்லா நாடுகளுக்குமே காஷ்மீர் மீது ஒரு கண்.

ஒருபுறம் தலிபான்களும் மற்றொருபுறம் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் மோதிக்கொள்ளும் நிலையில், தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ள பாகிஸ்தான், தனக்குக் கிடைக்காவிட்டாலும் காஷ்மீர் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருக்க வேண்டும் என்பதில் நிச்சயமாகக் குறியாக இருக்கும். அதனால்தானோ என்னவோ, இப்போது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் சீனப் படைகளின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நெடுஞ்சாலை ஒன்றை அமைக்கும் திட்டமும் சீனாவால் முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் மேலைநாட்டுப் பத்திரிகைகளில் கசிந்தவண்ணம் இருக்கின்றன. பாகிஸ்தானின் ராணுவத்துக்கு சீனா உதவுகிறது என்பதும், பாகிஸ்தானின் அணு ஆயுதச் சோதனைகளுக்கு சீனாதான் பக்கபலமாக இருந்து உதவியது என்பதும் புதிய செய்தி ஒன்றுமல்ல.

லெப்டினன்ட் ஜெனரல் ஜஸ்வாலின் நுழைவு அனுமதி மறுக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் அதற்கு ஒரே ஒரு விடைதான் கிடைக்கிறது. இந்தியாவின் வடமேற்கு எல்லையில் பாகிஸ்தானும் சீனாவும் கைகோத்து செயல்படுவதைப் பற்றிய கேள்விகளை எழுப்பி அவர் சீன ராணுவ அதிகாரிகளைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடக் கூடும் என்பதால்தான் சீனா இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்.

பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை என்று இந்தியாவைச் சுற்றியுள்ள எல்லா அண்டை நாடுகளையும் தனது நட்பு வளையத்துக்குள் சீனா கொண்டு வந்திருக்கிறது என்கிற உண்மையைப் பலமுறை நாம் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். சமீபகாலமாக, இந்துமகா சமுத்திரத்தில், குறிப்பாக டீகோ கார்சியா உள்பட பல சிறிய நாடுகளில் சீனக் கடற்படையின் நடமாட்டம் அதிகரித்து வருவதையும் நாம் எச்சரிக்கையுடன் கவனித்தாக வேண்டும்.

ஒருபுறம் சீனா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம், அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளைக்கூடத் துச்சமாக மதிக்கும் ஆணவம் சீனாவிடம் சமீபகாலமாகக் காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் "வீட்டோ' சக்தியுடனான வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்ட சீனா, மேலாதிக்கம் செலுத்தும் எண்ணத்துடன் செயல்படக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் நிறையவே காணப்படுகின்றன.

சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் நேசக்கரம் நீட்டுவதெல்லாம் சரி. நமது பாதுகாப்பையும், ஒருவேளை ஆக்கிரமிப்புக்கு சீனாவோ, பாகிஸ்தானோ முனைந்தால் அதை எதிர்கொள்ள வியூகங்களையும் நாம் வகுத்துக் கொண்டிருக்கிறோமா?

நயவஞ்சகத்தை நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பவர்களை மீண்டும் ஒருமுறை நம்பி மோசம் போய்விடுவோமோ என்று பயமாக இருக்கிறது. இன்றைய ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா மீது இருக்கும் நம்பிக்கைகூடத் தங்கள் மீது இல்லையோ என்கிற நமது நியாயமான சந்தேகம்தான் அதற்குக் காரணம்!
நன்றி : தினமணி

No comments: