Wednesday, August 25, 2010

எதிர்ப்பு தேவைதானா?

அடுத்த கல்வியாண்டு முதலாக மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட வேண்டும் என்கிற முடிவு, மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொண்ட போதிலும், தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட எதிர்ப்பினால், இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்குரல் எழுப்பிய திமுக, அதிமுக உறுப்பினர்கள் ஒருமித்து நின்று ஆச்சரியத்தை அளித்தன. அதைவிட ஆச்சரியம், பொதுத்தேர்வை அனுமதித்தால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவும், தான் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் விளைவுதான் இந்த நடவடிக்கை என்று தமிழக முதல்வர் கருணாநிதியும், யாரால் நடந்தது என்பதில் பெயர் தட்டிச் செல்ல போட்டி போடத் தொடங்கிவிட்டனர்.

இந்தப் பொது நுழைவுத் தேர்வு கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள்:

ஒன்று: ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால், அவர்களால் இதற்கான பயிற்சி பெறும் வசதிகள் கிடையாது.

இரண்டு: 69 சதவீத இடஒதுக்கீடு பாதிக்கப்படும். சமூக நீதி பாதிக்கும்

மூன்று: மற்ற மாநிலங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அப்படியானால் 50 சதவீத மாணவர்கள் இங்கே வந்து படித்துவிட்டுத் தங்கள் மாநிலங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.

இவர்கள் சொல்லும் இந்த 3 வாதங்களும் எந்த அளவுக்குச் சரியானவை?
முதலாவதாக, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 1,398 மாணவர்கள், கலந்தாய்வின் மூலம் சேர்கின்றனர். இவர்களில் எத்தனை பேர் ஏழைகள்? குறைந்தது 10 பேர் இருப்பார்களா? இவர்களில் எத்தனை பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள்? ஒவ்வொரு தனியார் பள்ளியும் தன் நிறுவனத்தில் படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களைப் படத்துடன் விளம்பரமாக வெளியிடுகின்றனவே, அரசு இந்த ஏழை மாணவர்களைப் பாராட்டும்விதமாக, மற்ற ஏழைகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களது படங்களுடன் பெயர்ப் பட்டியலை விளம்பரமாக வெளியிடலாமே! முடியாது. ஏனென்றால், இவர்கள் சொல்வது உண்மையல்ல.

கலந்தாய்வில் "கட்-ஆஃப்' மதிப்பெண் 197-க்குள்ளாகவே அரசு ஒதுக்கீடு அனைத்தும் - தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீடு உள்பட- முடிந்துபோகிறது என்பதே உண்மை. இவ்வாறு, உயர்ந்த கட்ஆப் மதிப்பெண்களுடன் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களில் ஏழைகள் என்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்குக் குறைந்தது 2.5 லட்சம் கட்டணம். இவ்வளவு அதிக கட்டணத்தைச் செலுத்திப்படிக்கவும்கூட, கிராமப்புற மாணவர்களால், ஏழைகளால் அந்த அளவுக்கு கட்ஆப் மதிப்பெண் பெற முடிவதில்லை.

இரண்டாவதாக, 69 விழுக்காடு ஒதுக்கீடு பாதிக்கப்பட்டு சமூகநீதி பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 50 விழுக்காடு இடஒதுக்கீடு மட்டுமே அமலில் உள்ளது. அரசியல் நிர்ணயச் சட்டத்தை மீறி கல்வியில் 69 விழுக்காடு என்பது தமிழகத்தில் மட்டுமே. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் உயர் நீதிமன்றத்தில், பொதுப்பிரிவினர் பாதிக்கப்படும் 19 இடங்களை அதிகரித்துத் தருகிறோம் என்று உறுதிமொழி அளித்துதான் இந்த சிக்கலை சமாளித்து வருகிறது. அதாவது 100 இடங்களுக்கு 119 இடங்களை உருவாக்கி, பொதுப்பிரிவினருக்கு பாதிப்பு இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது இதன் பொருள். இப்போதே இதுதான் நடைமுறை. இப்போது பாதிக்கப்படாத சமூகநீதி, பொது நுழைவுத் தேர்வு நடத்தினால் மட்டும் பாதிக்கப்பட்டுவிடுமா?

50 விழுக்காடு மாணவர்கள் வெளிமாநில மாணவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள். இந்த நுழைவுத் தேர்வை தமிழகம் ஒப்புக்கொள்ளுமானால் ஒவ்வொரு மாநிலத்தின் ஒதுக்கீட்டிலும் தமிழக மாணவர்கள் 5 சதவீதமாகிலும் இடம் பிடித்து மருத்துவம் படிப்பார்கள். இதனால் தமிழகத்திலும் வெளிமாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசுக் கட்டணத்தில் மருத்துவம் படிக்கும் 35,000 மாணவர்களில் தமிழர்களின் எண்ணிக்கை இப்போதுள்ளதைவிட இரு மடங்கு உயருமே தவிர, குறையாது.
இப்போது மருத்துவக் கல்விக்கு ஒவ்வொரு மாநிலமும் நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. தமிழ்நாட்டில் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, புதுவையில் ஜிப்மர் போன்று தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடக்கின்றன. இதில் முறைகேடுகளும், பாரபட்சங்களும் இருக்கவே செய்கின்றன. அப்படியிருக்க, ஏன் ஒரேயொரு தேர்வை இந்தியா முழுவதிலும் நடத்தக்கூடாது?

இதற்குப் பதிலாக, பொது நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு வலியுறுத்த வேண்டிய மூன்று நிபந்தனைகள் உண்டு. அவை:
ஒன்று - பிளஸ்-2 தேர்வு மதிப்பெண், நுழைவுத் தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து "கட்-ஆஃப்' மதிப்பெண் வரையறுக்கப்பட வேண்டும் என்பதோடு, இந்த இரு தேர்வுகளும் ஒரே கல்வியாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட வேண்டும்.
இரண்டு - அரசு மருத்துவக் கல்லூரியின் செலவினத்தில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும். மாநில அரசின் செலவில் கல்லூரிகளை அமைத்துப் பராமரிக்க, அதில் தேசிய அளவிலான தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்க்கும்போது, மத்திய அரசு பாதிக்குப் பாதி பராமரிப்புச் செலவையும் ஏற்பதுதானே சரியாக இருக்கும்.

மூன்று - நுழைவுத் தேர்வு மூலமாக மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வெளிமாநில மாணவர்கள், தாங்கள் படிக்கும் மாநிலத்தின் ஊரகப் பகுதியில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே, அவர்கள் மேற்படிப்பு படிக்க வாய்ப்பளிக்கப்படும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
இந்த மூன்று நிபந்தனைகளை வலியுறுத்தினால் தமிழக அரசியல்வாதிகள் உண்மையாகவே பிரச்னையை புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டாகும்.

மேலே சொன்ன நிபந்தனைகளுடன் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டால், அது மருத்துவக் கல்வியின் தரத்தைப் பாதுகாப்பதாகவும் அமையும்!
நன்றி : தினமணி

No comments: