Monday, August 16, 2010

பொறுமைக்கும் எல்லையுண்டு...

வயல் வரப்புகளுக்காக வெட்டி மடிந்த சகோதரர்கள் பற்றிய கதைகள் இந்த மண்ணுக்குப் புதியதல்ல. ஆனால் அத்தகைய கொலைகள் வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பின் மேலீட்டால் நடந்தவையாகத்தான் இருந்து வந்தது. ஆனால், தற்போது தமிழ்நாட்டில், சகோதரர்களைத் தூண்டிவிட்டு, கூலிப் படைகள் கொலை செய்யும் அளவுக்கு வரம்புகள் எல்லை மீறிச் சென்றுள்ளன.

இரு தினங்களுக்கு முன்பு, சேலம் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடைசி வாரிசான சிவகுரு என்கிற சிறுநீரக நோயாளி, தானே இந்தக் கொலைகளைச் செய்துள்ளதாகச் சென்னையில் சரணடைந்தபோதிலும், இந்தக் கொலையைச் செய்தவர்கள் நிலம் பறிக்கும் கும்பல்தான் என்பதைக் காவல்துறை உள்பட அனைவரும் உறுதியாக நம்புகின்றனர். இதன் பின்புலத்தில் சில அரசியல்வாதிகள் இருப்பதாகவும் வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. போலியாக பவர் ஆப் அட்டார்னி தயாரித்து வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று ஏற்கெனவே காவல்நிலையத்தில் புகார் செய்தும்கூட, நடவடிக்கை இல்லை என்பதால்தான் இந்தக் கொலைகள் நடந்துள்ளன.

இந்தக் கொலைகள் நடந்த பண்ணை வீட்டுக்கு வந்த மோப்ப நாய், அங்கே தூவப்பட்டிருந்த மிளகாய்ப் பொடி காரணமாக, வீட்டுக்கு உள்ளேயும் நுழையாமல் திரும்பியது. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான தந்தை முன்னாள் காவல் ஆய்வாளர். ஒரு சகோதரருக்குக் கராத்தே தெரியும். ஆகவே இது கூலிப்படையின் செயல் என்றே எல்லோரும் சொல்கிறார்கள்.

சென்ற ஆண்டு, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதும், கொலையாளியைப் பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பின்னர் அவர் இறந்து போனார் என்பதும் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தக் கொலையும், கொலையான நபருக்குச் சொந்தமான சில ஏக்கர் நிலத்தை விற்க மறுத்ததால் நிகழ்த்தப்பட்ட கொலை என்றும், இதில் இரு முக்கிய அரசியல்வாதிகளின் சகோதரர் மற்றும் மகன் சம்பந்தப்பட்ட நிலபேரம் காரணம் என்றும் பேசப்பட்டது. கொலையாளி காவல் நிலையத்தில் எப்படி இறந்தார் என்பதை விசாரிக்க குழு அமைத்தார்கள். என்ன ஆயிற்று? மக்கள் மறந்தே போனார்கள்.

இன்று தமிழகத்தில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்ற பெயரில் மிகப்பெரும் மோசடிகள் அரசியல்வாதிகளின் ஆசியுடன், கடைக்கண் பார்வையுடன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. முக்கியமான ஓர் இடத்தில் காலி மனை அல்லது பழைய வீடு இருக்குமானால், இந்தக் கூட்டம் உள்ளே நுழைந்து, விற்றுவிடுங்கள் என்று ஆலோசனை சொல்கிறது. மறுத்தால் கொலை மிரட்டல் விடுக்கிறது. விற்கச் சம்மதித்தால், விலையை அவர்கள் தீர்மானிப்பார்கள். பவர் ஆப் அட்டார்னி பத்திரம் செய்து அவர்களிடம் கொடுத்துவிட வேண்டும். இரண்டு மடங்கு விலைக்கு விற்றுவிட்டு, பேசிய தொகையில் பாதியை உரிமையாளர்களிடம் கொடுத்துவிட்டு, மிச்சத் தொகையை இந்தக் கூட்டம் அப்படியே பங்குபோட்டுக் கொள்கிறது. இதுதான் இன்று தமிழகத்தில் நடைபெறும் நிலம் பறிக்கும் கும்பலின் கொள்ளையடிக்கும் தந்திரம்.

இவர்களை மீறி ஒரு பத்திரம் எழுதப்பட்டால்கூட இந்தக் கூட்டத்துக்கு முதல் தகவல் போய்ச் சேரும் வகையில் அரசியல் செல்வாக்கு இவர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலம் பறிப்புக் கூட்டத்தில் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் முக்கிய நபராக இருந்தாலும், ஒவ்வொரு பகுதியைப் பொறுத்து, ஆங்காங்கே பலமாக இருக்கும் மாற்றுக் கட்சிப் பிரமுகரையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டுவிடுகிறார்கள். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் சட்டை செய்வதில்லை.

இந்த நிலம் பறிக்கும் கூட்டத்திடம் ஒரு சர்வே இருக்கிறது. ஊருக்குள் எந்தெந்த வீட்டில் நுழைந்தால் கேட்க நாதியில்லை, யாருக்கு எந்தப் பின்புலம் இருக்கிறது, எந்த வீட்டில் இருக்கும் பெற்றோர் தனியாக இருக்கிறார்கள், யார் இந்தச் சொத்தை வாங்கிப் போட்டுவிட்டு வெளிநாட்டில் இருக்கிறார்கள் என எல்லா புள்ளிவிவரமும் இருக்கிறது. அதன் பிறகே இவர்கள் தங்களுடைய நிலம் பறிப்பு நடவடிக்கையைத் தொடங்குகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத் தலை-களும் தங்களை அப்பகுதியின் குறுநில மன்னர்களாக நினைத்துக் கொண்டு கோலோச்சுவதுதான் இந்த நிலைமைக்கு எல்லாம் காரணம் என்பதை நாம் சொல்லித் தெரிவிக்க வேண்டியதில்லை. இன்ன மாவட்டம் இன்னாருக்குச் சொந்தம் என்று பட்டா போட்டுக் கொடுக்காத குறை.

காவல்துறையும் அரசியல் கட்சித் தலைமைகளும் இதில் கண்மூடிக் கொண்டு இருக்கலாம். ஆனால் மக்கள், யார் அனுபவத்தில் இருந்த சொத்து யாருக்கு எப்படிக் கைமாறியது என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வாக்குச் சாவடியின் வரிசையில் நிற்கும்போது அங்கே இருக்கும் ஒவ்வோர் அரசியல்வாதியையும் பார்த்து எந்த அளவுக்கு வயிற்றெரிச்சல் அடைகிறார்கள் என்பதைப் பொறுத்து வாக்குகளும் இடம் மாறும். கட்சித் தலைமைகள் இதைப் புரிந்துகொண்டு, வால்-கள் ஆடாமல் இருக்க வகை செய்தால் மட்டும்தான் தமிழகத்தில் பல குடும்பங்கள் அச்சமின்றி இருக்கும். மக்களாட்சியில் அச்சத்தை மாற்றவல்ல மாமருந்தாக ஆட்சி மாற்றம் அமைந்த சரித்திரங்கள் பல உண்டு என்பதை இவர்கள் நினைவில் நிறுத்தினால் நலம்!
நன்றி : தினமணி

No comments: