Monday, January 11, 2010

தமிழ் வெறும் துக்​க​டாவா...?

கடந்த ஒரு மாத​மாக நடந்​து​வ​ரும் சென்னை இசை விழா முடி​வ​டை​யும் நிலையை எட்​டி​விட்​டது.​ முக்​கி​ய​மான பழம்​பெ​ரும் சபாக்​க​ளின் நிகழ்​வு​கள் முடிந்​து​விட்​டன.​ சென்னை சங்​க​மத்​து​டன் இந்த ஆண்​டுக்​கான இசை​விழா நிறை​வு​பெ​றும்.​

உ​ல​கின் பல்​வேறு நாடு​க​ளி​லும் இது​போன்ற இசை,​​ நாட்​டி​யம் தொடர்​பான கலை விழாக்​கள் நடை​பெ​று​கின்​றன.​ ஆகஸ்ட் மாதம் எடின்​பரோ சர்​வ​தே​சக் கலை​விழா மிக​வும் விம​ரி​சை​யா​கக் கொண்​டா​டப்​ப​டும் விழா.​ 1947-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த இசை,​​ நாட்​டிய விழா​வில் பங்​கு​பெ​ற​வும்,​​ கலந்​து​கொள்​ள​வும் உல​கெங்​கி​லும் இருந்து கலை​ஞர்​க​ளும் ரசி​கர்​க​ளும் குவி​கி​றார்​கள்.​ ஆனால்,​​ இந்த இசை விழா நடப்​பது ஆறே ஆறு அரங்​கங்​க​ளில் மட்​டுமே.​

லண்​டன் நாட்​டிய விழா,​​ நியூ​யார்க் நாட்​டிய விழா,​​ ஐரோப்​பிய நாட்​டிய விழா என்று எத்​தனை எத்​த​னையோ இசை,​​ நாட்​டிய விழாக்​கள்.​ ஆனால்,​​ அவை அனைத்​துமே வியா​பா​ரக் கண்​ணோட்​டத்​து​டன்,​​ பல தொழில் நிறு​வ​னங்​க​ளும்,​​ அந்​தந்த நகர அமைப்​பு​க​ளும் சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர்ந்து தங்​க​ளது பொரு​ளா​தா​ரத்தை மேம்​ப​டுத்த இது​போன்ற கலை நிகழ்ச்​சி​களை விளம்​ப​ரப்​ப​டுத்​திக் குளிர்​காய முற்​ப​டு​கின்​ற​னவே தவிர,​​ கலைக்​காக நடத்​தப்​ப​டும் விழாக்​களா என்​றால் கிடை​யாது.​

ஆ​னால் நமது சென்​னை​யில் ஆண்​டு​தோ​றும் நடை​பெ​றும் இசை​விழா அப்​ப​டிப்​பட்​ட​தல்ல.​ இது வியா​பா​ரத்​துக்​காக நடத்​தப்​ப​டு​வது அல்ல.​ சுற்​று​லாப் பய​ணி​க​ளைக் கவர வேண்​டும் என்​ப​தற்​காக ஏற்​பாடு செய்​யப்​ப​டு​வ​தும் அல்ல.​ கலைக்​கா​கக் கலா​ர​சி​கர்​க​ளால் நடத்​தப்​ப​டும் நமது சென்னை இசை விழா​வின் பிர​மாண்​டம் உல​கில் வேறு எந்​தப் பகு​தி​யில் நடை​பெ​றும் விழாக்​க​ளுக்​கும் இல்லை என்​ப​தால்​தான்,​​ சென்னை மாந​க​ரம் இந்​தி​யா​வின் கலா​சார தலை​ந​க​ரம் என்று போற்​றப்​ப​டு​கி​றது.​

73 சபாக்​கள் ஏறத்​தாழ 2,850 இசை,​​ நாட்​டிய நிகழ்ச்​சி​களை நடத்தி நாலா​யி​ரத்​துக்​கும் மேற்​பட்ட கலை​ஞர்​க​ளின் திற​மையை ரசி​கர்​க​ளுக்கு விருந்து படைக்​கும் இந்த அதி​ச​யத்​தைப் பார்த்து வட​நாட்​ட​வ​ரும்,​​ வெளி​நாட்​ட​வ​ரும் வாய் பிளந்து ஆச்​ச​ரி​யப்​ப​டு​கி​றார்​கள்.​ ஆண்​டு​தோ​றும் சில நூறு புதிய இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் அறி​மு​க​மா​கி​றார்​கள்.​ சொல்​லப்​போ​னால் இந்த இளைய தலை​மு​றைக் கலை​ஞர்​க​ளில் பலர் பணத்​துக்​காக இசை​யைத் தேர்ந்​தெ​டுக்​கா​மல்,​​ இசையை இசைக்​காக நேசிப்​ப​வர்​க​ளா​க​வும் இருக்​கி​றார்​கள்.​

கர்​நா​டக இசை என்​பதை நாம் தென்​னிந்​திய இசை அல்​லது திரா​விட இசை என்று சொல்​வ​து​தான் சரி.​ எப்​ப​டித் தமி​ழர்,​​ கேர​ளத்​த​வர்,​​ கன்​ன​டர்,​​ ஆந்​தி​ரர் ஆகிய அனை​வ​ரை​யும் வட​வர்​கள் "மத​ரா​சி​கள்' என்று குறிப்​பி​டு​கி​றார்​களோ அதைப்​போல,​​ நமது தஞ்​சைத் தர​ணி​யில் தோன்றி தென்​ன​க​மெங்​கும் பர​விய தென்​னக இசை​யைக் கர்​நா​டக இசை என்று குறிப்​பி​டு​கி​றார்​கள்,​​ ஆற்​காடு நவா​பு​கள் அப்​போது கர்​நா​டிக் நவாப் என்​றும் அழைக்​கப்​பட்​ட​னர்.​ இவர்​கள் கிருஷ்ணா நதிக்​கும் கொள்​ளி​டத்​துக்​கும் இடை​யி​லான பகு​தியை 1690 முதல் 1801 வரை ஆண்டு வந்​த​னர்.​ மைசூர் உள்​பட உள்ள பகு​தியை ஆண்ட கர்​நா​டிக் நவா​பு​க​ளின் நாட்டு இசை​யைக் கர்​நா​டக இசை என்று இந்​துஸ்​தா​னிய இசை மர​பி​னர் அழைக்க முற்​பட்​ட​னர்.​ இது​தான் வர​லாற்று உண்மை.​

சப்த ஸ்வ​ரங்​க​ளின் அடிப்​ப​டை​யில் அமைந்த இசை எப்​ப​டித் தமி​ழி​சை​யா​கும் என்று கேட்​ப​வர்​கள் மறந்​து​வி​டும் ஒன்று,​​ இந்த சப்த ஸ்வ​ரங்​கள் நமது பண்​க​ளின் பரி​ணா​மம்​தான் என்​பதை.​ இசை​யும்,​​ முழ​வும்,​​ தாள​மும்,​​ கூத்​தும்,​​ அபி​ந​ய​மும் ஆய இவை ஐந்​தும் பஞ்ச மரபு என்​பார்​கள்.​ "பஞ்ச மரபு' என்​கிற சங்க கால நூலில் இசை மர​பின் வங்​கிய மரபு என்​கிற உட்​பி​ரி​வில் பாடல் 28-ல் "சரி கம பத நீ' எனும் ​ சுத்த எழுத்​தால், ""வரி​ப​ரந்த கண்​ம​ட​வாய் வைக்​கத் தெரி​வ​ரிய ஏழி​சை​யும் தோன்​றும்.​ இத​னுள்ளே பண் பிறக்​கும்.​ சூழ் முத​லாம் சுத்​தத் துளை'' என்று வங்​கி​யம் ​(புல்​லாங்​கு​ழல்)​ வர்​ணிக்​கப்​பட்​டி​ருக்​கி​றது.​

ந​மக்கே உரித்​தான இந்த இசையை நாம் தக்​க​வைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால் ​ முத​லில் அந்த இசை பாம​ர​னுக்​கும் புரி​யும் இசை​யாக இருக்க வேண்​டும்.​ அதற்கு அதி​க​மா​கத் தமிழ் சாகித்​யங்​கள் ​(பாடல்​கள்)​ கையா​ளப்​பட வேண்​டும்.​ பெய​ருக்​குத் துக்​க​டா​வாக ஒரு திருப்​பு​கழோ,​​ திருப்​பா​வையோ பாடு​வது என்​பது இசையை மட்​டு​மல்ல,​​ தமி​ழை​யும் கேவ​லப்​ப​டுத்​து​வ​தாக இருக்​கி​றது.​

இ​ளைய தலை​மு​றைக் கலை​ஞர்​கள் பலர் தமிழ் சாகித்​யங்​களை மட்​டு​மல்ல,​​ தெலுங்கு சாகித்​யங்​க​ளை​யும் ஆங்​கி​லத்​தில் எழுதி வைத்​துப் பாடும் அவ​ல​நிலை ஏற்​பட்​டி​ருப்​பது எத்​தனை பேருக்​குத் தெரி​யும்?​ தமி​ழில் பாடி​னால் மட்​டும் போதாது.​ தமிழ் படித்​துத் தமி​ழைச் சரி​யாக உச்​ச​ரித்​தும் பாட வேண்​டும்.​

க​லை​ஞர்​களை ஒப்​பந்​தம் செய்​யும்​போது,​​ நீங்​கள் தமி​ழில் பாடு​வ​தாக இருந்​தால்​தான் வாய்ப்பு என்று ஏன் இந்த சபாக்​கள் நிபந்​தனை விதிப்​ப​தில்லை என்​கிற நியா​ய​மான கேள்​வியை எழுப்பி இருக்​கி​றது "விடு​தலை' நாளி​தழ்.​ நாமும் அந்​தக் கருத்​தையே பிர​திப​லிக்​கி​றோம்.​

இசை பாம​ரர்​க​ளைப் போய்ச் சேர வேண்​டும்.​ இந்த நோக்​கம் சென்னை சங்​க​மத்​தால் ஓர​ள​வுக்கு செயல்​வ​டி​வம் கொள்​கி​றது என்​ப​தை​யும் இங்கே பதிவு செய்​தாக வேண்​டும்.​ பூங்​காக்​க​ளில் பாடும் பல கலை​ஞர்​கள் பாம​ரர்​கள் ரசிக்க வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தமி​ழில் பாடு​கி​றார்​கள்.​ இவர்​கள் சபாக்​க​ளில் பாடும்​போது தமி​ழில் பாடு​வ​தில்​லையே ஏன்?​ அங்கே கூடும் ரசி​கர்​கள் தமிழ் பாடக்​கூ​டாது என்று சொல்​வார்​களா என்ன?​ இல்லை அவர்​கள்,​வெளி​நாட்​ட​வர்​க​ளும் வெளி​மா​நி​லத்​தா​ருமா,​​ ​ தமி​ழர்​கள்​தானே?​

ப​ணக்​கார நிலச்​சு​வான்​தார்​கள் மற்​றும் ஜமீன்​தார்​க​ளின் ஏக​போக உரி​மை​யாக இருந்த இசை இன்று அனை​வ​ருக்​கும் பொது​வாகி இருக்​கி​றது.​ இனி அதைப் பாம​ர​னும் ரசிக்​கும் நிலை ஏற்​பட வேண்​டும்.​ அதற்​குப் பள்​ளி​க​ளில் ஐந்​தாம் வகுப்பு வரை இசை கட்​டா​ய​மா​கக் கற்​றுத்​த​ரப்​பட வேண்​டும்.​ நமது சபாக்​க​ளும்,​​ இசை​வா​ணர்​க​ளும் தமி​ழி​சைக்கு முன்​னு​ரிமை தர​வேண்​டும்.​ தமி​ழ​கத்​தில் தமி​ழில் பாடுங்​கள் என்று வேண்​டு​கோள் விடுக்​கும் கேவ​லம் இனி​யும் தொட​ரக்​கூ​டாது!
நன்றி : தினமணி

No comments: