Saturday, January 9, 2010

கிரெடிட் கார்டில் கண்டபடி செலவழிப்பவரா? : வங்கிகள் கிடுக்கிப்பிடி


உரிய காலத்துக்குள் பணம் கட்டாமல் இருந்தால், அல்லது குறைவான பணம் கட்டியிருந்தால் உங்கள் கிரெடிட் கார்டின் உச்சவரம்பு குறைக்கப்படலாம். வங்கிகளின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கிடுக்கிப்பிடியாகக் கருதப்படுகிறது. ஒருவரின் கடன் திருப்பிச் செலுத்தும் தகுதியின் அடிப்படையில் அவருக்கு வங்கிகள் கடன் அட்டைகள் எனப்படும் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அப்படி வழங்கும் போது, அந்த அட்டையைப் பயன்படுத்தும் உச்சவரம்பும் குறிப்பிடப்படுகிறது. அதாவது, ஒருவர் தனது கடன் அட்டையை ஒரு லட்சம் ரூபாய் வரையில் பயன்படுத்தலாம். 45 நாட்களுக்குள், அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். காலம் அதிகரிக்க அதற்கான வட்டி வீதமும் அதிகரித்துக் கொண்டே செல்லும். இப்படி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தியே வாழ்க்கையைக் கழிப்பவர்கள் பின் அதைத் திருப்பிக் கட்ட சிரமப்படுகின்றனர். இதனால், பெருமளவில் பாதிக்கப்பட்ட வங்கிகள், இந்த நடைமுறையில் சில மாற்றங் களை கொண்டு வந்துள்ளன. அதன்படி, கிரெடிட் கார்டை அதிக அளவில் பயன்படுத்துபவர் களது உச்சவரம்பு குறைக் கப் பட்டுள்ளது. எச்.எஸ்.பி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற வங்கிகள் இதை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இது குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி ஊழியர் ஒருவர் கூறுகையில்,'எங்கள் வங்கி இப்போது 'ப்ரூடன்ட் கிரெடிட் கார்டு லைன் மேலாண்மை' குறித்த சில விஷயங்களைப் பின்பற்றி வருகிறது. அதனால், சில வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் ரொக்கப் பரிமாற்றங்களின் உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இது, நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது' என்று தெரிவித்தார். இந்த அதிரடி மாற்றத்துக்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஒன்று, கடன் அட்டை வாங்கி அளவில்லாமல் செலவழித்து விட்டு திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அதைக் குறைப்பதற்காக. இரண்டு, கடன் அட்டை வாங்கி வைத்து விட்டு, அதைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அல்லது செலுத்த வேண்டிய அளவை விட குறைந்த அளவிலேயே பணம் செலுத்துபவர்கள் இவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக. இந்த நடைமுறையை சில வங்கிகள் கடந்த ஓர் ஆண்டாகவே கடைப்பிடித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடைமுறையால், பாதுகாப்பற்ற கடன் வழங்கலைத் தவிர்க்க முடிவதாக வங்கி அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால், 2009ல் இரண்டு கோடி கிரெடிட் கார்டுகள் குறைந்து விட்டன, என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


No comments: