Saturday, January 2, 2010

நான்கு நகரங்களில் 3ஜி செல்போன் சேவை அறிமுகம்

கோவை, ஊட்டி, நாகை, குன்னூர் உள்ளிட்ட 4 நகரங்களில் பொங்கல் பண்டிகைக்குள் மூன்றாம் தலைமுறை(3ஜி) செல்போன் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செல்போனில் முகம் பார்த்து பேசும் வசதி கொண்ட 3ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை 2009ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். கடந்த நவம்பர் 20ல் வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு வந்தது. சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் இச்சேவையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தின் கீழ் வரும் இதர மாவட்டங்களிலும் இச்சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த சேவை முதல் கட்டமாக கோவை, ஊட்டி, குன்னூர், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் பொங்கலுக்குள் அறிமுகம் செய்யப்படும் எனவும், அறிமுக விழா கோவையில் நடத்தப்படும் எனவும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நகரங்களை தவிர வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 3ஜி செல்போன் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஓசூர், கன்னியாகுமரி போன்ற தொழில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த 15 நகரங்களிலும் 3ஜி சேவை அறிமுகம் ஆகிறது. அதற்கான கட்டமைப்பு பணிகளை சீனாவின் ஹுவாய் நிறுவனம் செய்து வருகிறது.
நன்றி : தினமலர்


No comments: