Tuesday, January 12, 2010

களை கட்டிய டில்லி ஆட்டோ எக்ஸ்போ: 20 லட்சம் பேர் பார்வையிட்டனர்

டில்லியில் ஜனவரி 6ம் தேதி தொடங்கிய 10வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கண்காட்சியை சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 25 நாடுகளை சேர்ந்த கார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் புதிய ரக கார்கள் பார்வைக்கு வைத்து, பார்வையாளர்களின் கண்களை விரிய வைத்தனர். சுமார் 2,100 அரங்களை கொண்ட இந்த கண்காட்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும் வகையில், பேட்டரியில் இங்கும் கார்கள், காற்றை அதிக மாசுபடுத்தாத எரிவாயு தொழில்நுட்ப வாகனங்களை பல நிறுவனங்கள் அறிமுகம் செய்தன. மொத்தம் 25 புதிய வாகனங்கள், கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

புதிய கார்கள், பைக்குகள் அட்டகாச அறிமுகம் :களை கட்டிய டில்லி ஆட்டோ எக்ஸ்போ உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, டில்லி ஆட்டோ எக்ஸ்போவில் 30 நாடுகளை சேர்ந்த 2,100 நிறுவனங்கள் பங்கேற்று புதிய கார்கள் மற்றும் பைக்குகளை அறிமுகப்படுத்தினர்.

டில்லி ஆட்டோ எக்ஸ்போ கடந்த 5ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு நடந்தது. இந்த கண்காட்சிக்கு இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் ஏற்பாடு செய்து இருந்தன. உலகளவில், கார் மற்றும் பைக்குகள் விற்பனை சந்தையில் இந்தியா முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளின் விற்றுமுதல் தற்போது ரூ.90 ஆயிரம் கோடி என்ற அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும், இந்தியாவில் புதிய கார்கள் மற்றும் பைக்குகள் விற்பனையில் சில மாதங்களுக்கு மட்டுமே தொய்வு நிலை காணப்பட்டது. 2009ம் ஆண்டு தொடக்கம் முதல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தான், டில்லியில் ஆட்டோ எக்ஸ்போ நடந்துள்ளது. இதில் 30 நாடுகளை சேர்ந்த 2,100 நிறுவனங்கள் புதிய கார்களையும், பைக்குகளையும் அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளனர். இந்த கண்காட்சியில், வர்த்தக வாகனங்களும், பைக்குகளும், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய கார்கள் பற்றிய விவரம் வருமாறு:

வோக்ஸ்வாகன் போலோ: ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வாகன் நிறுவனம், கண்காட்சியில் போலோ காரை அறிமுகப்படுத்தியது. சிறிய கார்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள போலோ கார், இந்தியாவில் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது. 1200 சிசி பெட்ரோல், 1200 சிசி டீஸல் என இரண்டு இன்ஜின்கள் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20, மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், நிஸான் நிறுவனத்தின் மைக்ரா ஆகிய கார்களுக்கு, போலோ கார் கடும் போட்டியை அளிக்கும்.

ஜெனரல் மோட்டார்ஸ் பீட்: அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பீட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இது விற்பனையிலும் உள்ளது. தற்போது 1200 சிசி திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட பீட் கார் விற்பனையில் உள்ளது. 1000 சிசி திறன் கொண்ட டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்ட பீட் கார், இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர உள்ளது. பீட் காரின் விலை ரூ.3.34 லட்சம் முதல் ரூ.3.99 லட்சம் வரை( எக்ஸ்ஷோரூம் டில்லி) உள்ளது. பீட் கார், ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ10, மாருதி சுசூகியின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ, நிஸான் நிறுவனத்தின் மைக்ரா கார்களுக்கு கடும் போட்டியை தரும்.

ஹோண்டாவின் புதிய கார்: ஹோண்டா நிறுவனம், '2சிவி' என்ற கோட்நேம் கொண்ட புதிய காரை கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இது, 1200 சிசி திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் கொண்டது. இதன் விலை ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும். இந்த கார் ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20, வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் போலோ, டொயோட்டோ நிறுவனத்தின் இடியோஸ், மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், நிஸான் நிறுவனத்தின் மைக்ரா கார்களுக்கு சவாலாக இருக்கும்.

டொயோட்டோ இடியோஸ்: ஜப்பானின் டொயோட்டோ நிறுவனம், இடியோஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார், இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பரில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும். ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ20, வோக்ஸ்வாகனின் போலோ, மாருதியின் ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ், இந்தியாவில் ஜூலையில் அறிமுகமாக உள்ள நிஸானின் மைக்ரா கார்களுக்கு கடும் போட்டியை தரும்.
அசத்தலான சொகுசு கார்கள் அறிமுகம்
டில்லி கண்காட்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் போட்டு போட்டுக் கொண்டு சொகுசு கார்களையும் அறிமுகப்படுத்தின. அதன் விவரம் வருமாறு:

மாருதி புதிய கார்: மாருதி சுசூகி நிறுவனம் 'ஆர்ஐஐஐ' என்ற கோட்நேமுடன், ஆறு இருக்கைகள் கொண்ட புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மல்டி பர்ப்பஸ் வைக்கிள் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

ஸ்கோடா யெடி: ஜெர்மனியின் ஸ்கோடா நிறுவனத்தின் யெடி கார் தான் கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. ஸ்போர்ட்ஸ் யுடிலிட்ட வைக்கிள் வரிசையில் இந்த கார் இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டின் மத்திய பகுதியில் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இரண்டு லிட்டர் டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டது. இதன் விலையை ஸ்கோடா நிறுவனம் அறிவிக்கவில்லை. எனினும், ரூ.14 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆரியா, பி.எம்.டபிள்யூ., நிறுவனத்தின் எக்ஸ்1, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கேமரோ போன்ற கார்களும் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன.
நன்றி : தினமலர்

2 comments:

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

பாரதி said...

RADAAN வருகைக்கு நன்றி