Friday, December 18, 2009

என்ன விலை அமெ​ரிக்க அணு உலை?

அ​ணு​சக்​தித் துறை​யில் ஒத்​து​ழைப்​புக்​கான உடன்​பாட்டை அமெ​ரிக்​கா​வு​டன் செய்​து​கொள்ள,​​ அனைத்​துத் தரப்பு எதிர்ப்​பு​க​ளை​யும் மீறி,​​ பிடி​வா​தம் காட்டி அதைச் சாதித்​துக் காட்​டி​ய​வர் பிர​த​மர் மன்​மோ​கன் சிங்.​

இந்த உடன்​பாடு இந்​தி​யா​வின் மின்​சா​ரத் தேவை​களை முற்​றி​லு​மாக நிறை​வேற்ற உத​வும் அமு​த​சு​ரபி என்று இந்​திய ஆட்​சி​யா​ளர்​க​ளால் வர்​ணிக்​கப்​பட்​டது.​ இதன் இணைப்​பாக சர்​வ​தேச அணு​சக்​திக் குழு​மத்​து​டன் ஓர் உடன்​பாடு,​​ அணு​சக்தி வர்த்​தக நாடு​கள் குழு​வு​டன் மற்​றோர் உடன்​பாடு என்​றும் மத்​திய அர​சால் மேற்​கொள்​ளப்​பட்​டன.​ ஆனால்,​​ இந்த அணு​சக்தி விவ​கா​ரம் தொடர்​பான பேச்​சு​வார்த்​தை​க​ளும்,​​ நட​வ​டிக்​கை​க​ளும் முடி​வில்​லா​மல் தொட​ரு​வ​தன் விளை​வா​கப் புதிய விவா​தங்​கள் எழுந்​துள்​ளன.​

இந்​தி​யா​வு​ட​னான அணு​சக்​தித் துறை ஒத்​து​ழைப்​புக்கு அமெ​ரிக்க நாடா​ளு​மன்​றம் "ஹைட் சட்​டம்' என்ற ஒன்றை ஏற்​கெ​னவே நிறை​வேற்​றி​யி​ருந்​தது.​ இப்​போது அணு​சக்தி தொடர்​பாக இந்​திய நாடா​ளு​மன்​றத்​தி​லும் ஒரு புதிய சட்​டம் நிறை​வேற்​றப்​பட வேண்​டும் என்ற கோரிக்கை அமெ​ரிக்கா தரப்பி​லி​ருந்து முன்​வைக்​கப்​பட்டு,​​ அதை​யும் மன்​மோ​கன் சிங் அரசு சிர​மேற்​கொண்டு செயல்​ப​டுத்த மத்​திய அமைச்​ச​ர​வைக் கூட்​டத்​தில் முடிவு எடுக்​கப்​பட்டு விட்​ட​தா​கச் செய்​தி​கள் வெளி​யாகி உள்​ளன.​

இ​தன் பின்​ன​ணி​தான் என்ன?​ அணு​மின் உற்​பத்​திக் கூடங்​களை நிறுவி,​​ மின்​சார உற்​பத்​தி​யில் ஈடு​ப​டு​கை​யில்,​​ விபத்​துக்​கான சாத்​தி​யக்​கூ​று​கள் இருப்​பது இயல்பே.​ அனல்-​புனல் மின் நிலை​யங்​க​ளில்​கூட விபத்​து​கள் நிகழ வாய்ப்பு உண்டு என்​றா​லும்,​​ அணு​மின் நிலைய விபத்து மிகு​தி​யான அபா​யங்​களை உள்​ள​டக்​கி​ய​தாக இருக்​கும்.​ அமெ​ரிக்​கா​வின் "மூன்று மைல் தீவு' அணு​மின் நிலைய விபத்து 1979-ல் நிகழ்ந்​த​தும்,​​ ரஷி​யா​வின் "செர்​னோ​பில்' அணு​மின் நிலைய விபத்து 1986-ல் நேரிட்​ட​தும்,​​ இத்​த​கைய விபத்​து​க​ளின் அபாய விளை​வு​கள் எந்த அள​வுக்​குக் கடு​மை​யாக இருக்​கும் என்​ப​தற்​கான அனு​ப​வப் பாடங்​க​ளா​கும்.​

இந்த அபா​யத்​தைத் தவிர்க்​கும் வகை​யில் கூடு​தல் எச்​ச​ரிக்​கை​யோ​டும்,​​ பாது​காப்பு ஏற்​பா​டு​க​ளோ​டும் அணு​மின் உற்​பத்​தி​யில் ஈடு​பட வேண்​டி​யது அவ​சி​யம்;​ அது சாத்​தி​ய​மா​ன​தும்​கூட.​ ஆனால் இவை எல்​லா​வற்​றை​யும் கடந்து ஒரு விபத்து நேரிட்டு விடு​மா​னால்,​​ அதன் பாதிப்​பு​களை எதிர்​கொள்​வ​தும்,​​ பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு உரிய இழப்​பீ​டு​களை வழங்​கு​வ​தும் தவிர்க்க முடி​யாத கட​மை​கள்.​

÷எ​திர்​பா​ராத அபா​யங்​க​ளுக்​குப் பாது​காப்பு ஏற்​பா​டாக வந்​த​வை​தான் காப்​பீட்​டுத் திட்​டங்​கள்.​ இதற்​காக சர்​வ​தேச அள​வில் சில கோட்​பா​டு​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன;​ உலக நாடு​கள் பல​வற்​றில் சட்​டங்​க​ளும் இயற்​றப்​பட்​டுள்​ளன.​ சர்​வ​தேச அணு​சக்​திக் கழ​கத்​தின் முயற்​சி​யின் விளை​வாக 1963-ல் அணு​சக்தி பாதிப்பு குறித்த வியன்னா கோட்​பாடு ஒன்று உரு​வாக்​கப்​பட்டு அது 1997 முதல் அம​லாக்​கத்​துக்கு வந்​தது.​

÷வ​ளர்ச்​சி​ய​டைந்த மேற்​கத்​திய நாடு​க​ளின் கூட்​ட​மைப்​பான,​​ பொரு​ளா​தார ஒத்​து​ழைப்பு மற்​றும் வளர்ச்​சிக்​கான ஸ்தா​ப​னத்​தின் முயற்​சி​யில் அணு​மின் சக்​தித் துறை​யில் மூன்​றா​வது நபர் கடப்​பா​டுக்​கான பாரிஸ் கோட்​பாடு 1960-ல் உரு​வாக்​கப்​பட்டு,​​ 1963-ல் புரூ​செல்ஸ் நக​ரில் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் செழு​மைப்​ப​டுத்​தப்​பட்டு,​​ 1968 முதல் அம​லுக்கு வந்​தது.​ இந்த வியன்னா மற்​றும் பாரிஸ் கோட்​பா​டு​கள் இரண்​டை​யும் ஒருங்​கி​ணைத்து ஒரு முழு​மை​யான வரை​ய​றையை ஏற்​ப​டுத்த 1988-ல் செர்​னோ​பில் விபத்​துக்​குப் பிறகு ஒரு முயற்​சி​யும் மேற்​கொள்​ளப்​பட்​டது.​ 1997-ல்,​​ சர்​வ​தேச அணு​சக்​திக் கழக உறுப்பு நாடு​கள் அணு​சக்தி பாதிப்​புக்​கான கூடு​தல் இழப்​பீட்​டுக்​கான கோட்​பாடு ஒன்​றை​யும் நிறை​வேற்​றி​யுள்​ளன.​ இது இன்​ன​மும் அம​லாக்​கத்​துக்கு வர​வில்லை என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​

÷இந்த சர்​வ​தே​சக் கோட்​பா​டு​களை ஏற்​றுக்​கொண்ட நாடு​கள் சில,​​ தத்​தம் நாட்​டுக்​குப் பொருத்​த​மான சட்​டங்​களை இது தொடர்​பாக நிறை​வேற்​றி​யுள்​ளன.​ பிரிட்​டன்,​​ ஜெர்​மனி,​​ பிரான்ஸ்,​​ ரஷியா போன்​றவை பாரிஸ் அல்​லது வியன்னா கோட்​பா​டு​களை ஏற்​றுச் சட்​ட​மி​யற்​றிய நாடு​க​ளில் சில.​ சர்​வ​தே​சக் கோட்​பாடு எத​னை​யும் அங்​கீ​க​ரிக்​கா​ம​லும்,​​ சொந்த நாட்​டில் சட்​ட​மி​யற்​றா​ம​லும் அணு​சக்​தித் துறை​யில் ஈடு​பட்டு வரும் நாடாக சீனா உள்​ளது.​

÷ர​ஷியா,​​ சீனா போன்ற நாடு​கள் அணு​மின் துறை​யில் உற்​பத்தி மற்​றும் வர்த்​த​கத்தை அர​சுத் துறை​யில் மட்​டுமே மேற்​கொள்​கின்​றன.​ அமெ​ரிக்கா உள்​ளிட்ட இதர நாடு​க​ளில் பிர​தா​ன​மாக அணு​மின்​துறை உற்​பத்தி -​ வர்த்​த​கத்​தில் தனி​யார் துறையே ஈடு​பட்டு வரு​கி​றது.​ அணு​மின் விபத்து கார​ண​மான பாதிப்​பு​க​ளுக்​கும் முழு​மை​யான நிவா​ர​ணம் அல்​லது இழப்​பீடு வழங்க வேண்​டிய பொறுப்பு அர​சாங்​கத்​தையே சாரும் என்​பது பொது​வான ஒன்று.​ எனி​னும்,​​ காப்​பீட்​டுத் திட்​டங்​க​ளின் கீழ்,​​ இந்த அணு​மின் பாதிப்பு தொடர்​பான கடப்​பா​டு​க​ளுக்கு வழி​வகை செய்ய வேண்​டும் என்​பதே,​​ இது குறித்​துச் சட்​ட​மி​யற்​றிய நாடு​க​ளின் நோக்​க​மாக அமைந்​தது.​

÷அ​ணு​மின் உற்​பத்​தித் துறை​யில் ஈடு​ப​டு​கிற நிறு​வ​னங்​கள் இரு​வ​கைப்​ப​டும்.​ அணு உலை​கள்,​​ இதர சாத​னங்​கள்,​​ எரி​பொ​ருள்,​​ எரி​பொ​ருள் பயன்​பாடு தொடர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​கள் போன்​ற​வற்​றில் ஈடு​ப​டும் நிறு​வ​னங்​கள் ஒரு​வகை;​ இவற்​றைப் பயன்​ப​டுத்தி அணு​மின் நிலை​யத்தை நிறுவி இயக்​கு​கிற,​​ அதைப் பரா​ம​ரிக்​கிற,​​ உற்​பத்​தி​யா​கும் மின்​சா​ரத்தை விற்று விநி​யோ​கிக்​கிற பணி​க​ளில் ஈடு​ப​டும் நிறு​வ​னங்​கள் இரண்​டா​வது வகை.​ அணு​மின் விபத்து பாதிப்பு குறித்த குடி​மைக் கடப்​பா​டு​கள் முதல் வகை நிறு​வ​னங்​கள் மீது சுமத்​தப்​ப​டக்​கூ​டாது என்​ப​து​தான்,​​ இது​தொ​டர்​பாக 1957-ம் ஆண்​டி​லேயே சட்​ட​மி​யற்​றிய அமெ​ரிக்க நாடு எடுத்த முடிவு.​ அ​ணு​மின் உலை மற்​றும் இதர சாத​னங்​களை உற்​பத்தி செய்​யும் நிறு​வ​னங்​கள்,​​ உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து நிகழ்ந்​தா​லும்,​​ அதன் பாதிப்​புக்கு எந்த வகை​யி​லும் கடன்​பட்​டவை ஆகாது என்று அவற்​றுக்கு முழு விலக்கு அளித்​து​விட்​டது அமெ​ரிக்க அர​சாங்​கம்.​ மாறாக,​​ விபத்து கார​ண​மான பாதிப்​பு​க​ளுக்கு,​​ அணு​மின் நிலை​யத்​தைச் செயல்​ப​டுத்​து​கிற நிறு​வ​னமே பொறுப்​பேற்க வேண்​டும் என்​றும்,​​ அதற்​காக அந்த நிறு​வ​னம் காப்​பீட்​டுத் திட்​டத்தை மேற்​கொள்ள வேண்​டும் என்​றும் சட்​ட​மி​யற்​றப்​பட்​டது.​

÷அ​ணு​சக்தி ஒழுங்​கு​முறை ஆணை​யம் ஒன்​றும் ஏற்​ப​டுத்​தப்​பட்டு,​​ அது சட்​டத்​தின் கீழான காப்​பீட்டை அமெ​ரிக்க அணு​மின் கூடங்​கள் பெற்​றுள்​ள​னவா என்று கண்​கா​ணிக்​கி​றது.​ இந்த அணு​மின் கூடங்​கள் தொடர்​பான காப்​பீட்டு உத்​த​ர​வா​தத்தை "அமெ​ரிக்க அணு​சக்​திக் காப்​பீட்​டா​ளர்​கள்' என்ற ஒரு கூட்​ட​மைப்பு நல்கி வரு​கி​றது.​ இந்​தக் காப்​பீட்​டைப் பெறச் செலுத்த வேண்​டிய வரு​டாந்​திர "பிரீ​மி​யம்' தொகை,​​ ஒரே ஓர் அணு​உ​லை​யைக் கொண்ட மின்​கூ​டத்​துக்கு 4 லட்​சம் டாலர் என்று சரா​ச​ரி​யாக நிர்​ண​யிக்​கப்​பட்டு செயல்​ப​டுத்​தப்​ப​டு​கி​றது.​ மொத்​தத்​தில் அமெ​ரிக்​கா​வில் அணு​சக்தி சாதன உற்​பத்தி -​ வர்த்​த​கத்​தில் ஈடு​ப​டும் தனி​யார் துறை நிறு​வ​னங்​க​ளுக்கு,​​ விபத்து நிவா​ரண இழப்​பீட்டி​லி​ருந்து விலக்கு அளித்து மானிய உதவி நல்​கும் வித​மா​கவே அந்​நாட்​டுச் சட்​டம் அமைந்​துள்​ளது.​

÷இப்​போது அமெ​ரிக்​கா​வில் தனி​யார் துறை அணு​மின் உற்​பத்தி நிறு​வ​னங்​க​ளாக உள்ள ஜென​ரல் எலெக்ட்​ரிக்,​​ அரேவா,​​ வெஸ்​டிங் ஹவுஸ்,​​ ரோசா​டோம் போன்ற பன்​னாட்டு நிறு​வ​னங்​கள்,​​ இந்​தி​யா​வில் புதிய அணு​மின் கூடங்​க​ளுக்​கான அணு உலை​கள் உள்​ளிட்ட சாத​னங்​களை விற்​பனை செய்ய மும்​மு​ர​மாக முயற்​சி​கள் மேற்​கொண்டு வரு​கின்​றன.​ இவை அமெ​ரிக்​கா​வில் உள்​ள​து​போ​லத் தங்​க​ளுக்​குப் பாது​காப்​பான சட்ட ஏற்​பா​டு​கள் இந்​தி​யா​வி​லும் செய்து தரப்​பட வேண்​டும் என்று கோரு​கின்​றன.​ இந்​தக் கோரிக்​கையை அமெ​ரிக்க அர​சாங்​க​மும் வலி​யு​றுத்​து​கி​றது.​ அண்​மை​யில் அமெ​ரிக்க நாட்​டுக்​குப் பய​ணம் மேற்​கொண்ட பிர​த​மர் மன்​மோ​கன் சிங்​கி​டம்,​​ அதி​பர் ஒபா​மாவே இதற்​கான சட்​டத்தை விரை​வில் இந்​திய நாடா​ளு​மன்​றத்​தில் நிறை​வேற்ற நெருக்​கு​தல் கொடுத்​துள்​ளார் என்​பது வெளிப்​ப​டை​யா​கவே தெரிய வந்​தது.​

÷இந்​தப் பின்​ன​ணி​யில் தான் மத்​திய அரசு அணு​சக்தி குடி​மைக் கடப்​பாடு மசோதா ஒன்றை நாடா​ளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய முடி​வெ​டுத்​துள்​ளது.​ இந்த மசோ​தா​வில்,​​ இந்​தி​யா​வில் அமை​ய​வுள்ள அணு​மின் கூடங்​க​ளில் விபத்து ஏதே​னும் நேரிட்​டால்,​​ அது தொடர்​பான நிவா​ர​ணம்,​​ இழப்​பீடு அனைத்​தை​யும் ஏற்​றுக்​கொள்ள வேண்​டிய கடப்​பாடு,​​ மத்​திய அர​சின் அணு​மின் துறை​யின் கீழ் இயங்​கும்,​​ இந்​திய அணு​மின் வாரி​யத்​துக்கு மட்​டுமே என்று விதிக்​கப்​ப​டும்.​ அணு​உ​லை​க​ளையோ,​​ இதர சாத​னங்​க​ளையோ,​​ அணு​எ​ரி​பொ​ரு​ளையோ,​​ அது​தொ​டர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​க​ளையோ,​​ விற்​பனை செய்​யும் அமெ​ரிக்க நிறு​வ​னங்​க​ளுக்கு எந்​த​வி​தக் கடப்​பா​டும் இருக்​காது என்​ப​து​தான் இதன் சாராம்​சம்.​ அணு உலை​க​ளின் உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து ஏற்​பட்​டா​லும்,​​ அவற்றை விற்​பனை செய்த வெளி​நாட்டு நிறு​வ​னத்​துக்கு எந்​தப் பொறுப்​பும் கிடை​யாது.​

÷அது மட்​டு​மல்ல,​​ அணு​மின் விபத்து நேரிட்​டால்,​​ அந்த விபத்து தொடர்​பான இழப்​பீட்​டுத் தொகைக்கு 45 கோடி டாலர் ​(ரூ.​ 2,300 கோடி)​ உச்​ச​வ​ரம்​பாக விதிக்​கப்​ப​டும் என்று இந்த மசோ​தா​வைப் பற்​றிய விவ​ரங்​கள் தெளி​வு​ப​டுத்​து​கின்​றன.​ அணு​மின் கூட விபத்து,​​ லட்​சக்​க​ணக்​கான மக்​க​ளைக்​கூட பாதிப்​புக்கு இலக்​காக்​கும் பரி​மா​ணம் கொண்​ட​தாக அமை​யக்​கூ​டும்.​ அப்​ப​டிப்​பட்ட நிலை​யில் இந்த 45 கோடி டாலர் என்​பது வெறும் கண்​து​டைப்​பாக மட்​டுமே நின்​று​வி​டும் ஆபத்து எழும்.​ இந்த உச்​ச​வ​ரம்பு நிர்​ண​யிக்​கப்​பட்​டால் மட்​டுமே அதற்கு உள்​ளிட்​டுக் காப்​பீட்​டுத் திட்​டத்​தைப் பெற முடி​யும் என்​பது இந்​தச் சட்​டத்​தைக் கொண்டு வரு​வ​தற்​கான கார​ண​மா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ போபால் விஷ​வா​யுக் கசிவு விபத்து நடந்து முடிந்து 25 ஆண்​டு​க​ளா​கி​யும்,​​ அதில் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உரிய நிவா​ர​ணம் பெற இய​லாது அல்​லா​டு​கிற நேர்வை நினை​வில் வைத்​துப் பார்த்​தால்,​​ மத்​திய அர​சின் புதிய சட்​டம் எவ்​வ​ளவு பாத​க​மான நிலை​மைக்கு இட்​டுச் செல்​லக் கூடும் என்​பதை ஊகிப்​பது கடி​னம் அல்​லவே!​

÷"லாபங்​கள் அனைத்​தும் தனி​யா​ருக்கு;​ பாதிப்​பு​க​ளும்,​​ இழப்​பும் அர​சாங்​கத்​துக்கு' என்​ப​து​தானே நவீன தாரா​ள​ம​யத்​தின் தாரக மந்​தி​ரம்.​ அதன்​படி அமெ​ரிக்க நாட்​டின் அணு​மின் உற்​பத்தி -​ ​ வர்த்​த​கத் தனி​யார் நிறு​வ​னங்​க​ளுக்கு ரூ.​ 60,000 கோடி வரை விற்று,​​ லாபம் ஈட்​டு​வ​தற்கு வழி​தி​றந்​து​விட முற்​ப​டு​கிற,​​ இந்​திய ஆட்​சி​யா​ளர்​கள்,​​ அவற்​றின் மீது எந்​தக் கட்​டத்​தி​லும் மயி​லி​றகு அள​வு​கூட சுமை விழுந்து விடக் கூடாது என்று சட்​டம் போட்​டுப் பாது​காப்பு நல்க முற்​ப​டு​கின்​ற​னர்.​

÷"என்ன விலை அமெ​ரிக்க அணு உலையே?​ எம் மக்​க​ளின் உயி​ரைக் கூடத் தரு​வேன்' என்று இந்​திய மக்​க​ளின் வாழ்​வு​ரி​மைக்கே எதி​ரான சட்​டத்தை மன்​மோ​கன் சிங் அரசு நிறை​வேற்ற அனு​ம​திக்​கப் போகி​றதா நம் ஜன​நா​யக நாட்​டின் நாடா​ளு​மன்​றம்?
கட்டுரையாளர் : உ.ரா.​ வர​த​ரா​சன்
நன்றி : தினமணி

No comments: