Thursday, December 10, 2009

பெற்றோர்க்கும் பொறுப்பு உண்டு

அதிக எண்​ணிக்​கை​யில் பள்​ளிக் குழந்​தை​களை ஏற்​றிச் செல்​லும் வேன்​க​ளின் பர்​மிட் ரத்து ​ செய்​யப்​ப​டும் என்று தமி​ழ​கப் போக்​கு​வ​ரத்​துத் துறை அறி​வித்​துள்​ளது.​ சில இடங்​க​ளில் நட​வ​டிக்​கை​யி​லும் இறங்​கி​யுள்​ளது.​ ​

இது ஏதோ புதிய நட​வ​டிக்கை அல்​லது புதிய அர​சாணை போல தோற்​றம் தந்​தா​லும்,​​ அழு​கிற குழந்​தைக்​குப் பழைய கிலு​கி​லுப்​பை​யைக் காட்டி சமா​தா​னம் செய்​வ​தைப் போன்று,​​ வேதா​ரண்​யம் விபத்​தில் பள்​ளிக் குழந்​தை​கள் பலி​யான சம்​ப​வத்​தால் கொதித்​துப் போயி​ருக்​கும் சமூக மன​இ​றுக்​கத்​தைத் தளர்த்​தும் உத்​தி​யாக இந்த அறி​விப்​பைச் செய்​துள்​ளார்​கள்.​ அனு​ம​திக்​கப்​பட்ட எண்​ணிக்​கை​யைக் காட்​டி​லும் அதி​க​மான பய​ணி​களை ஏற்​றிச் செல்​லும் எந்​த​வொரு வாக​னத்​தின் பர்​மிட்​டை​யும் ரத்து செய்து,​​ வாகன ஓட்​டு​நர் மீது நட​வ​டிக்கை எடுக்​கச் சட்​டத்​தில் ஏற்​கெ​னவே இட​மி​ருந்​தா​லும் இத்​தனை கால​மாக ஏன் நட​வ​டிக்கை எடுக்​க​வில்லை என்ற கேள்வி எழும் முன்​பா​கவே,​​ இது​போன்ற ஓர் அறி​விப்​பின் மூலம்,​​ இனி​மேல் எல்​லாம் சரி​யா​கி​வி​டும் என்ற எண்​ணத்​தைத் தோற்​று​விப்​ப​து​தான் இந்த அறி​விப்​பின் நோக்​கம்.​

பள்​ளிக் குழந்​தை​களை ஏற்​றிச் செல்​லும் பள்ளி பஸ்​கள்,​​ தனி​யார் வேன்​கள்,​​ ஆட்​டோக்​கள் எல்​லா​மும் இத்​தனை நாளும் அள​வுக்கு அதி​க​மான எண்​ணிக்​கை​யில் குழந்​தை​களை ஏற்​றிச் சென்று கொண்​டி​ருந்​தா​லும்,​​ போக்​கு​வ​ரத்​துத் துறையோ அல்​லது காவல்​து​றையோ எந்த நட​வ​டிக்​கை​யும் எடுக்​கா​த​தற்​குக் கார​ணம் எல்​லா​ரும் அறிந்​த​து​தான்.​

இத்​த​கைய நிகழ்​வு​க​ளில் மிகப்​பெ​ரும் மெüனக் குற்​ற​வா​ளி​கள் பெற்​றோர்​கள்​தான் என்​பதை நாம் மறந்​து​வி​டு​கி​றோம்.​ பூக்​களை கூடை​யில் அள்​ளிப்​போ​டு​வ​தைப் போல ஆட்​டோக்​க​ளி​லும் வேன்​க​ளி​லும் ஏற்​றி​விட்டு வரும் பெற்​றோரை எந்த வகை​யில் குற்​ற​வா​ளி​கள் அல்ல என்று சொல்ல முடி​யும்?​ ஆட்டோ அல்​லது வேன் சாதா​ர​ண​மாக சாய்ந்​தா​லும்​கூட எத்​தனை குழந்​தை​கள் நெரிச​லில் சிக்கி எலும்பு முறி​யும்,​​ உயிரை இழக்​கும் என்​பது தெரிந்​தி​ருந்​தும்​கூட,​​ அந்த வாக​னங்​க​ளில் ஏற்றி அனுப்​பும் பெற்​றோ​ரின் அறி​யா​மையை எப்​ப​டிப் பொறுத்​துக்​கொள்​வது?​

"பள்ளி வெகு​தொ​லை​வில் உள்​ளது,​​ எங்​க​ளால் குழந்​தை​க​ளைக் கொண்​டு​போய் விட்​டு​விட்டு வேலைக்​குச் செல்ல இய​லாது' என்​ப​தும்,​​ "அள​வான எண்​ணிக்​கை​யில் குழந்​தை​களை ஏற்​றிச் செல்​லும் ஆட்டோ அல்​லது வேன்​க​ளில் மாதக் கட்​ட​ணம் அதி​கம்' என்​ப​தும்​தான் அவர்​கள் கூறும் கார​ணம்.​ தனி​யார் பள்​ளி​க​ளுக்கு கொட்​டி​ய​ழும் கல்​விக் கட்​ட​ணத்​தில் ஒப்​பி​டும்​போது,​​ குழந்​தை​க​ளின் பாது​காப்​புக்​கா​கச் ​ செல​வி​டும் கூடு​தல் தொகை மிகச் சிறி​து​தான் என்​ப​தைப் பெற்​றோர்​கள் உணர்​வ​தில்லை.​ ​

இது​போன்ற வாக​னங்​க​ளில் மட்​டு​மல்ல,​​ தங்​கள் குழந்​தை​களை ஸ்கூட்​ட​ரி​லும்,​​ மோட்​டார் சைக்​கி​ளி​லும் ஏற்​றிக்​கொண்டு பள்​ளிக் கதவை மூடும்​முன்​பா​கப் போய்ச் சேரு​வ​தற்​காக சாலை விதி​களை மீறும் பெற்​றோ​ரும் இருக்​கி​றார்​கள்.​ இவர்​கள் விபத்​துக்​குள்​ளா​கி​ற​போது,​​ பள்​ளிக் குழந்தை விபத்​தில் சாவு என்​கிற பச்​சா​தா​பச் செய்​தி​யாக மாறு​கி​றதே தவிர,​​ பள்​ளிக்கு நேர​மா​கி​விட்​ட​தால் சாலை விதி​களை காற்​றில் பறக்​க​விட்ட ஒரு தந்​தை​யின் அறி​யாமை பேசப்​ப​டு​வ​தில்லை.​ அண்​மை​யில்,​​ சாலை விபத்​தில் சிக்​கி​யும் ஸ்டி​ரெச்​ச​ரில் வந்து,​​ சிறப்பு அனு​ம​தி​யு​டன் தேர்வு எழு​திய மாணவி படத்​து​டன் செய்​தி​யாக்​கப்​பட்​டார்.​ ஆனால்,​​ அந்த விபத்​தின் தன்மை குறித்து யாருமே பேச​வில்லை.​

கல்​விக் கூடத்​தின் அரு​கி​லேயே குழந்​தை​கள் வசிக்க வேண்​டும் என்​பது நகர்ப்​பு​றங்​க​ளில் சாத்​தி​ய​மில்லை.​ ஆனால்,​​ இத்​த​கைய சிக்​க​லைத் தீர்க்க வெறு​மனே வாக​னச் சோதனை என்​கிற கண்​து​டைப்​பைக் காட்​டி​லும் வேறு நல்ல நட​வ​டிக்​கை​களை அரசு மேற்​கொள்​ள​லாம்.​

தனி​யார் பள்​ளி​க​ளில் பஸ் வசதி இருந்​தும்​கூட,​​ வேன்​க​ளி​லும் ஆட்​டோக்​க​ளி​லும் குழந்​தை​களை அனுப்​பக் கார​ணம் பள்ளி பஸ்​க​ளின் கட்​ட​ணம் மிக​அ​தி​க​மாக இருப்​ப​து​தான்.​ மாதம் ரூ.300,​ ரூ.400 மிச்​சம்​பி​டித்​து​வி​ட​லாம் என்ற நடுத்​த​ரக் குடும்ப மன​நி​லை​தான் இத்​த​கைய பாது​காப்​பாற்ற சூழ​லுக்கு உடன்​பட வைக்​கி​றது.​

தனி​யார் பள்​ளி​க​ளில் படிக்​கும் மாண​வர்​கள் எண்​ணிக்கை,​​ வெகு தொலைவி​லி​ருந்து வரும் மாண​வர்​கள் எண்​ணிக்கை ஆகி​ய​வற்றை கல்​வித் துறை கணக்​கெ​டுத்து,​​ ஒவ்​வொரு தனி​யார் பள்​ளி​க​ளும் கட்​டா​ய​மாக வைத்​தி​ருக்க வேண்​டிய பஸ்​க​ளின் எண்​ணிக்​கை​யைத் தீர்​மா​னிப்​ப​தும்,​​ அர​சுப் போக்​கு​வ​ரத்​துக் கழக பஸ்​க​ளுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட அதே கட்​ட​ணத்தை இக் குழந்​தை​க​ளி​டம் வசூ​லிக்க வேண்​டும் என்று கட்​டா​ய​மாக்​கு​வ​தும்​தான் இப்​பி​ரச்​னைக்கு குறைந்​த​பட்​சத் தீர்​வாக அமை​யும்.​

அரசு போக்​கு​வ​ரத்​துக் கழ​கங்​களே இந்​தப் பள்ளி வாக​னச் சேவை​யில் ஈடு​ப​ட​லாம் என்று பரிந்​து​ரைக்​கத் தோன்​றி​னா​லும்,​​ இல​வச பஸ் பாஸ் பெற்ற பள்ளி மாண​வர்​களை,​​ அர​சுப் போக்​கு​வ​ரத்​துக் கழக பஸ் நடத்​து​நர்​க​ளும் ஓட்​டு​நர்​க​ளும் அலைக்​க​ழிப்​ப​தைப் பார்த்​தால் ​ அத்​த​கைய பரிந்​து​ரை​க​ளைச் சொல்ல மனம் வரு​வ​தில்லை.​ இந்​தப் பள்​ளிக் குழந்​தை​களை இந்த நடத்​து​நர்​க​ளும் ஓட்​டு​நர்​க​ளும் ஓசி​யில் ஏற்​றிச் செல்​லப் போவ​தில்லை.​ இவர்​க​ளுக்​கான முழு கட்​ட​ணத்​தை​யும் மானி​ய​மாக பல கோடி ரூபாயை அரசு செலுத்​து​கி​றது.​ ஆனா​லும்,​​ இந்​தக் குழந்​தை​க​ளைக் கண்​ட​வு​டன் பஸ்ûஸ நிறுத்​தா​மல் கடந்​து​செல்​வ​தும்,​​ தள்​ளிப்​போய் நிறுத்​து​வ​தும்,​​ குழந்​தை​கள் தங்​கள் பாடப்​புத்​தக மூட்​டை​யு​டன் ஓடிப்​போய் ஏறு​வ​தும் எல்லா நக​ரங்​க​ளி​லும் வெட்​க​மில்​லா​மல் நடந்​து​கொண்டே இருக்​கி​றது.​ ஒரு பெற்​றோர்​கூட தட்​டிக் கேட்​ப​தில்லை.​ இந்த ஓட்​டு​நர் நடத்​து​நர்​க​ளும்,​​ தங்​க​ளுக்​கும் ஒரு குழந்தை இருக்​கி​றது என்​பதை நினைப்​ப​தில்லை.
நன்றி : தினமணி

No comments: