சென்றவாரம் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க ஆற்றல் துறை அமைச்சர் ஸ்டீபன் சூ, புதுதில்லியில் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி (ஐஐடி) மாணவர்களிடையே பேசும்போது, ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்: "கோபன்ஹேகன் மாநாட்டில் கரியமில வாயு குறைப்பு குறித்து அமெரிக்கா எந்த உறுதிமொழியையும் வழங்காது'
அதாவது, கியோடோ மாநாட்டுத் தீர்மானத்தின்படி, வளர்ந்த நாடுகள் தங்களது கரியமில வாயு வெளியேற்றத்தைப் பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா ஏற்கப்போவதில்லை என்பதுதான் இதன் பொருள். இதற்கு அவர் ஒரு காரணத்தையும் கூறியிருக்கிறார். அமெரிக்கா தனக்கான தூய ஆற்றல் மற்றும் பாதுகாப்புக் குறித்த சட்டத்தை இயற்றியிருப்பதாகவும், அந்தச் சட்டம் அமெரிக்க அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதாகவும், அது நிறைவேறாத நிலையில் கரியமில வாயு குறைப்பு பற்றிய முடிவுகளை அமெரிக்கா எடுக்க இயலாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெப்ப மாறுதலுக்கான செயல்வரம்பு மாநாட்டில் (UNFCCC) அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிடம் இந்தியா எழுப்பிய கேள்விகள் குறித்துச் சொல்லும்போது, "இந்தியாவின் நிர்பந்தங்களை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டிருக்கிறோம். கரியமில வாயு வெளிப்பாட்டை இந்தியா போன்ற வளரும் நாடுகள் அதிகமாகக் குறைக்கத் தேவையில்லை' என்று இந்தியாவுக்கு மனம்குளிரும் பதிலையும் அவர் அளிக்கத் தவறவில்லை.
அதன் பின்னர், அவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷையும் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அடுத்தநாள் சனிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குகொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, சீனாவை மிகவும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
சிங்கப்பூரில் ஒபாமாவும், இந்தியாவில் ஸ்டீபன் சூ-வும் இப்படியாகப் பேசக் காரணம், கோபன்ஹேகன் மாநாட்டின்போது அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவுகளுக்கு இந்தியாவும் சீனாவும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான்.
1997-ல் மேற்கொண்ட கியோடோ மாநாட்டு முடிவுகளை ஒன்றுமில்லாமல் செய்துவிட அமெரிக்காவின் முயற்சிக்கு யாரும் எதிர்ப்புச் சொல்லக்கூடாது என்பதற்காக இத்தகைய பசப்பு வார்த்தைகளை அமெரிக்கா பேசி வருகிறது. இதற்காக இந்தியாவுக்கு அமைச்சர்களை அனுப்பிவைத்தும், சீன நாட்டினைப் புகழ்ந்தும் தோழமை பாராட்டுகிறார்கள்.
உலகில் 2 டிகிரி வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டுமானால், உலக நாடுகள் அனைத்தும் பசுமைஇல்ல வாயுக்களின் அளவை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இதில் எந்தெந்த நாடுகள் இன்றைய மிக மோசமான புவிவெப்பத்துக்குக் காரணமோ அந்த நாடுகள் 1990-ம் ஆண்டு அளவின்படி குறிப்பிட்ட சதவீத கரியமில வாயு உள்ளிட்ட பசுமைஇல்ல வாயுக்களை வெளியேற்றுவதைக் குறைக்க வேண்டும். இதுதான் கியோடோ தீர்மானம்.
ஆனால் அமெரிக்க எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், 2005-ம் ஆண்டு நிலவரப்படி, (1990-ம் ஆண்டு நிலவரப்படி அல்ல), தாங்கள் வெளியேற்றும் பசுமைஇல்ல வாயுக்களில் 20 சதவீதத்தை 2020-ம் ஆண்டுக்குள் படிப்படியாகக் குறைத்துக் கொள்வோம் என்பதுதான். இதைவிட, நாங்கள் கொஞ்சம்கூட குறைக்க மாட்டோம் என்று வெளிப்படையாகச் சொல்லிவிடலாம்.
இதைப்போன்ற அநியாயம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஏனென்றால், இன்றைய வளிமண்டல மாசுகளின் 30 சதவீதம் அமெரிக்காவினால் உண்டானது. தற்போதும் ஆண்டுதோறும் உலகின் மொத்தக் கரியமில வாயு வெளியேற்றத்தில் 18 சதவீதம் அமெரிக்காவினுடையது. இதற்கு இணையான அளவில் கனடாவும் ஆஸ்திரேலியாவும் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் பங்கு 2 சதவீதம் மட்டுமே!
இதனால்தான் வளரும் நாடுகள் எதிர்க்கின்றன. எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முக்கியமானவை. இந்த இரு நாடுகளும் ஒன்றாக நின்றால், கோபன்ஹேகனில் தற்போதுள்ள 141 நாடுகளும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும். ஓர் அணிக்கு சீனா அல்லது இந்தியா தலைமையேற்கும் கட்டாயம் உருவாகும். இது "பெரியண்ணன்' அமெரிக்காவுக்கு அவமரியாதை ஆகிவிடும். தற்போது அமெரிக்கா மேற்கொண்டுவரும் முயற்சி வெளிப்படையானது. முதலாவதாக இரு நாடுகளையும் தனக்குச் சாதகமாக இருக்கச் செய்வது; அல்லது சும்மா இருந்தாலும் சரிதான். இரண்டாவதாக, சீனாவை மட்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, இந்தியாவைத் தனிமைப்படுத்துவது!
இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி இதுதான். இந்தியா தனித்து நின்று எதிர்க்கும் என்றால், அமெரிக்கா மற்றும் உலக வங்கியின் நிதியுதவிகள் கிடைக்காது என்பதுடன் வேறு நெருக்கடிகளும் ஏற்படும். உதாரணமாக, பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத் தகவல் பரிமாற்றம் இருக்காது.
இருப்பினும், உலக நன்மைக்காக எந்த நெருக்கடியையும் சமாளிக்க இந்திய மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசியல்வாதிகள்தானே முடிவு எடுப்பவர்களாக இருக்கிறார்கள்!
நன்றி: தினமணி
Wednesday, November 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment