இப்போதெல்லாம் முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்புக் கெடுபிடி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மக்களுடைய வரிப்பணத்தில் அவர்களுக்கு அதிரடிப்படை, கருப்புப் பூனைப்படை என இதன் செலவுகளும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுள்ளது. இது ஓர் ஏழை நாட்டுக்குக் கட்டுபடியாகுமா? இந்தக் கேள்வி எங்கும் எழுந்துள்ளது. எனினும் யாரும் இதைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
மக்களுக்குச் சேவை செய்ய வந்த இந்தப் பெரிய மனிதர்கள் “பாதுகாப்பு’ என்ற பெயரால் அந்நியப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். முக்கியமாக அலுவலக நேரங்களில் பணிகளுக்குச் செல்லும் மக்களைத் தடுத்து நிறுத்தி இந்த வி.ஐ.பி.க்கு வழிவகுத்துக் கொடுக்கும் காவலர்களின் கெடுபிடிகள் கொஞ்சநஞ்சமல்ல.
இப்போது பிரதமரை மையமாக வைத்து ஓர் அதிர்ச்சியான நிகழ்ச்சி. சண்டீகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி நிறுவன மருத்துவமனையில் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றார்.
அப்போது அங்கு கொண்டு வரப்பட்ட சிறுநீரக நோயாளியான எஸ்.பி. வர்மா சுமார் 2 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டதாகவும், அதனால் அவர் இறந்ததாகவும் அவரது உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட வர்மாவைப் பாதுகாப்புப் படையினர் மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை என்பது மனிதநேயமற்ற கொடுமையல்லவா?
இறந்து போன வர்மா குடும்பத்தினருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்ததுடன் ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனாதையாக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது.
இக்காலத்தில் மற்ற பொருள்களின் விலையெல்லாம் ஏறிக்கொண்டே இருக்கின்றன; மனித உயிர்களின் விலைகள் மட்டும் மலிவாகிவிட்டன. மனித உயிர்களுக்கு விலையே இல்லை என்று கூறப்பட்டதெல்லாம் அந்தக் காலம்.
மகாத்மா காந்தி, நேரு, காமராஜ், அண்ணா மற்றும் ஜீவானந்தம் போன்றவர்களுக்கு இந்த “பந்தாவெல்லாம் தெரியாமல் போய்விட்டது. எளிமையாக வாழ்ந்துவிட்டு இறந்து போனார்கள். மக்களோடு மக்களாக வாழ்ந்த அக்காலத் தலைவர்கள் பாவம், பரிதாபத்துக்கு உரியவர்கள்.
முற்றிலும் வியாபாரமாகிவிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும், திரைப்பட நட்சத்திரங்களுக்கும் மூன்றடுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்படுவதாகக் காவல்துறை பெருமையோடு அறிவிக்கிறது. லட்சியமே இல்லாமல் லட்சக்கணக்கிலிருந்து தாவி கோடிக்கணக்கில் பணம் வாங்கும் இவர்களுக்கும் இந்திய ஏழை மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் பாதுகாப்புத் தரப்படுகிறது.
“மக்கள் பிரதிநிதிகளின் உயிருக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது கடமையில்லையா?’ என்று கேட்கிறார்கள். அப்படியானால் மக்களுக்குப் பாதுகாப்புத் தேவையில்லையா? அரசியலுக்கு வந்து சம்பாதிக்கவே துடிப்பவர்களுக்கு மக்கள் பணத்தில் பாதுகாப்புத் தரவேண்டிய அவசியம் என்ன? அவர்களது சொந்தப் பணத்தில் அல்லது கட்சிப் பணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவதுதானே முறையாகும்?
1947 ஆகஸ்ட் 15. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக விடுதலை பெற்றன. நாடெங்கும் சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நவகாளியில் இந்து, முஸ்லிம் வகுப்புக் கலவரங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. மக்கள் குற்றுயிரும், குலையுயிருமாகத் திசைதெரியாமல் கூட்டம் கூட்டமாக ஓடிக் கொண்டிருந்தனர். இரு பக்கங்களிலும் மதவெறி கண்ணையும் கருத்தையும் மறைத்துக் கொண்டிருந்தது. இரண்டு மதங்களைச் சேர்ந்த மனிதர் உடல்களிலும் சிவப்பு ரத்தமே சிந்தப்பட்டன.
இந்த நேரத்தில் காந்தியடிகள் மட்டுமே இதைப் பற்றிக் கவலை கொண்டு கலவர பூமியான நவகாளியை நோக்கித் தன்னந்தனியாகத் தன் பயணத்தைத் தொடங்கினார், “அங்கு செல்வது ஆபத்து’ என்று எச்சரிக்கை செய்யப்பட்டபோதும் அவர் கேட்கவில்லை. மனித உயிர்களைக் காப்பதற்காக அந்தத் தள்ளாத வயதிலும் புறப்பட்டார். அவரது வருகை அங்கே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த வகுப்புத் தீயை அணைக்க உதவியது.
அங்கே அவருக்கு எந்த அதிரடிப்படையும் பாதுகாப்புத் தரவில்லை. மக்களே அவருக்குக் கவசமாக இருந்தனர். பகைவர்களையும் நேசிக்கும் பண்பும், தன்னுயிரைக் காட்டிலும் மன்னுயிரை மதிக்கும் அன்பும் அவருக்குப் பாதுகாப்பானது.
1861 ஏப்ரல் 12. அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. இரு தரப்பிலும் ஆள்சேதமும், பொருள்சேதமும் மிக மிக அதிகம். இதுவரை நடந்துள்ள உள்நாட்டுப் போர்களில் இதற்கு இணையான ஒரு கொடிய போர் வரலாற்று ஏடுகளில் இல்லை. ஐக்கிய அரசு சார்பில் 3 லட்சத்து 60 ஆயிரம் வீரர்களும், கூட்டு அரசு சார்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீரர்களும் போரில் மடிந்தனர் என்றால் அதன் பயங்கரத்தை என்னென்பது?
போர் தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. உள்நாட்டுப் போராக இருந்ததால் அழிவும், அவதியும் அதிகமாகிவிட்டது. இரு பகுதி மக்களுக்கும், “போர் எப்படியாவது முடிந்தால் போதும்’ என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. வெற்றி, தோல்வியைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.
போரின் விளைவாக கொலை, கொள்ளை, களவு, கட்டுப்பாடின்மை மிகுந்து விட்டன. உணவுக்கிடங்குகளை எரித்தல், பாலங்களைத் தகர்த்தல் எனக் கலவரங்களும் ஏற்பட்டுவிட்டன. இதனால் மக்கள் உணவுக்கும், போக்குவரத்துக்கும் பெரிதும் அவதிப்பட்டனர். தந்தையை, கணவனை, குழந்தைகளை இழந்து பெண்கள் சோகத்தில் தவித்தனர்.
அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் “பாதுகாப்புக் கருதி வெள்ளை மாளிகையிலேயே முடங்கிக் கிடக்கவில்லை.
தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் போர்க்களத்துக்கே போனார்; காயமுற்று மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த போர் வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
எதிர்தரப்புப் படைவீரர்களையும் அன்போடு நலம் விசாரித்தார்; கை குலுக்கினார். அவரது இடைவிடாத முயற்சியால் உள்நாட்டுப் போர் ஒரு முடிவுக்கு வந்தது.
இவ்வாறு மக்களுக்காகவும், தேசத்துக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்கு மக்களே பாதுகாப்புக் கவசமாக இருந்திருக்கின்றனர். இந்த நிலை மாறிப் போனது ஏன்? இதை எண்ணிப் பார்க்க வேண்டிய வேளை இது.
இந்தப் பாதுகாப்பு மரியாதைக்குரியதாகக் கருதப்படுவதால் இதனை மேலும் மேலும் முக்கியப் பிரமுகர்கள் கேட்டு வருகின்றனர்; இதனால் அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதற்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று பலமுறை அறிவித்தனர். ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இக்காலத்தில் அரசியலைவிடச் சிறந்த வணிகம் இல்லை என்றாகிவிட்டது. இந்த வியாபாரப் போட்டியில் பகைவர்கள் தோன்றுவதும், மோதல்கள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாது. இவர்களுக்குப் பாதுகாப்பு தேவைதான். யாருக்கு யார் இந்தப் பாதுகாப்பைத் தருவது?
ஒரு நாட்டின் பிரதமர் உயிர் மேலானதுதான்; அது பாதுகாக்கப்பட வேண்டியதுதான். ஆனால், தன் உயிருக்கே போராடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுநீரக நோயாளியால் பிரதமரின் பாதுகாப்புக்கு எப்படிக் குந்தகம் ஏற்படும்? இதுகூடவா இந்தப் பாதுகாப்புப் படையினருக்குத் தெரியாமல் போய்விட்டது?
அதிகார வர்க்கத்தினரைத் திருப்தி செய்வது ஒன்றே தங்கள் கடமை என்று காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் நினைக்கும்படி அரசுத்துறை தரம் தாழ்ந்து போய்விட்டது.
சட்ட விதிகள் எல்லாம் பாமர மக்களுக்கு மட்டும்தானா? படித்தவர்கள் எல்லாம் இதற்குச் சவால் விடுவதுபோலவே நடந்து கொள்கின்றனர்.
விதிப்படி வேலை செய்தவர்களை அதிகாரவர்க்கம் பாராட்டியதும், பரிசளித்ததும் அந்தக் காலம். இப்போது அப்படி நடக்கிறவர்கள் கேலிக்குரியவர்கள்; ஆள்வோரின் தண்டனைக்குரியவர்கள்; தேசத் துரோகிகள்!
“”எங்கே மனதில் பயமின்றி தலைநிமிர்ந்து நிற்கிறார்களோ, எங்கே அறிவுடைமை அனைவருக்கும் பொதுவில் உள்ளதோ, எங்கே துண்டு துண்டாகச் சிதறாத உலகம் உள்ளதோ-என் தந்தையே, அங்கே எனது தேசம் விழித்தெழட்டும்’’ என்று பாடினார் கவி தாகூர்.
மக்களாட்சியில் முக்கியப் பிரமுகர்களே குடிமக்கள்தாம். அந்த மக்களை அந்நியப்படுத்துகிற அதிரடிப்படைகள் எப்படி உண்மையான பாதுகாப்பு என்று கூற முடியும்? தேசம் விழித்தெழும்போது எல்லாம் தெரியும்.
கட்டுரையாளர் :உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி
Saturday, November 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment