Thursday, October 15, 2009

ஒபாமா என்ன அமெரிக்காவின் அசோகரா?

அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. இதை விழாவாகக் கொண்டாட வேண்டிய அமெரிக்க நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியும் தர்மசங்கடமும் ஏற்பட்டுள்ளது. இதேபோல தங்கள் நாட்டு அதிபருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளதைப் பாராட்டி எழுத வேண்டிய அமெரிக்கப் பத்திரிகைகள், இந்த விஷயத்தை எப்படிக் கையாள்வது என்பது புரியாமல் திகைப்பில் உள்ளன.

பதவிக்கு வந்து சில மாதங்களே ஆன, அவருடைய நிர்வாகத்திறன் எப்படி என்பது புரியாத நிலையில் எந்த அளவுகோலில் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்தனர் என்று வியக்கின்றனர் பத்திரிகையாளர்கள்.

உலகில் அமைதிக்காக முன்முயற்சி மேற்கொண்டு அதன் பலனை அடைந்தவர்களுக்குத்தான் நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பதவியேற்று 9 மாதங்களே ஆன, அதிபரின் நோக்கங்கள் நிறைவேறாத நிலையில் அவரைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்தது எப்படி என்கிறது "வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை.

""அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஒபாமா தகுதியானவரா, இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவருக்கு இந்தப் பரிசை அளித்து தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டது நோபல் கமிட்டி. அதுமட்டுமல்ல; நோபல் பரிசுக்கான நம்பகத்தன்மைக்கும் சிறுமை ஏற்படுத்திவிட்டது'' என்று "தி லாஸ்ஏஞ்சலீஸ் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.

""ஒபாமா, அதிபராக ஆட்சிப் பொறுப்பேற்றதும் பல்வேறு உறுதிமொழிகளை அளித்துள்ளார். ஆனால், இதுவரை அவர் எதையும் சாதிக்கவில்லை. அவரது உறுதிமொழிக்குப் பரிசு கிடைத்துள்ளதுபோல் தெரிகிறது'' என்று "தி டைம்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

போலந்து நாட்டு முன்னாள் அதிபர் லெக் வலேசாவுக்கு நோபல் பரிசு கிடைத்ததைச் சுட்டிக்காட்டியுள்ள டைம் பத்திரிகை, ஒபாமாவுக்கு அவசரம் அவசரமாக நோபல் பரிசு கொடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது. அமைதிக்காக அவர் இதுவரை எதையும் உருப்படியாகச் செய்ததாகத் தெரியவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

""ஒபாமாவே முன்வந்து இந்தப் பரிசு எனக்கு வேண்டாம் என்று அடக்கத்துடன் கூறிவிடுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதை அவர் ஏற்றுக்கொண்டுவிட்டார்போல் தெரிகிறது'' என்று அமெரிக்கர்கள் சிலர் கூறியுள்ளனர். நோபல் பரிசை வழங்கும் நாடு, அதற்கான கமிட்டி எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தது? அதை ஏற்றுக்கொள்ள அமெரிக்க அதிபரும் எப்படி முடிவு செய்தார் என்று பலரும் வியப்புடன் கேள்வி எழுப்புகின்றனர்.

இதர துறைகளில் நோபல் பரிசுக்கானவர்களைத் தேர்ந்தெடுக்க தனி குழு உள்ளது. ஆனால், அமைதிக்கான விருது பெறுவதற்கான நபரை, நார்வே நாட்டு நாடாளுமன்றத்தைச் சேர்ந்த ஐவர் குழுதான் முடிவு செய்கிறது. தங்களது அரசியல் உத்தியின் ஒருபகுதியாக அவர்கள் அமெரிக்காவுக்குத்தான் இந்தப் பரிசு என்று ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்களோ என்னவோ என்பது அமெரிக்கர்கள் சிலரின் கருத்தாகும். அமைதிக்கான நோபல் பரிசுக் கமிட்டியில் உள்ள ஐந்து பேரில் மூவர் இடதுசாரிகள், இருவர் வலதுசாரிகள். இடதுசாரிகள் அமெரிக்காவின் பக்கம் சாய்ந்துவிட்டார்களோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது.

இந்தப் பரிசுக்கு ஒபாமாவை ஏகமனதாகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினாலும், இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும், ஒபாமாவுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என்பதும் சிலரின் கருத்தாகும்.

அணு ஆயுதத் தயாரிப்பில் மும்முரம் காட்டிவரும் ஈரானையும், வடகொரியாவையும் தடுக்க ஒபாமா என்ன செய்துவிட்டார்? அமெரிக்காவின் பாதுகாப்பு கருதியோ அல்லது சர்வதேச நலன் கருதியோ இனி ஒபாமாவால் தெஹ்ரான் அல்லது பியோங்யாங்கில் உள்ள அணுசக்திக் கூடங்கள் மீது குண்டுவீச முடியுமா? அமெரிக்காவின் ஆதிக்கத்தை இனி ஆப்கானிஸ்தான், இராக்கில் தொடரமுடியுமா? தலிபான் தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் படையெடுக்க முடியுமா? ஒருவேளை அவர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நோபல் பரிசு மீதான நம்பகத்தன்மை போய்விடும். அப்படிச் செய்யாவிடில் ஒபாமாவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.

இப்போது நம்முன் எழுந்துள்ள கேள்வி என்னவெனில், நோபல் அமைதிப் பரிசுக்காக ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பதுதான். அவர் அதிபராகப் பதவியேற்று ஒன்பது மாதங்கள்தான் ஆகின்றன. அமெரிக்கவிலும் வேறு சில நாடுகளிலும் மக்களைக் கவரும் விதத்தில் பேசியதைத் தவிர அவர் உருப்படியாகச் செய்தது என்ன?

2009-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி ஒபாமா, அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். அமைதிக்கான நோபல் பரிசு பெற பரிந்துரைகள் வந்துசேருவதற்கான கடைசித் தேதி பிப்ரவரி 1-ம் தேதியாகும். அதாவது பதவியேற்ற பத்து நாளில் ஒபாமாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது அவரது தேர்தல் பிரசாரத்தை அடிப்படையாக வைத்தே அவர் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும். நோபல் பரிசுக்காக அவரது பெயரைப் பரிந்துரைத்து யார்? நோபல் கமிட்டியின் விதிமுறைகள்படி பரிசு பெற பரிந்துரைத்தது யார் என்பது 50 ஆண்டுகள் ரகசியமாக வைத்திருக்கப்படும். அதாவது ஒபாமாவைப் பரிந்துரைத்தது யார் என்பதை 2059-ம் ஆண்டில்தான் நாம் தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால், ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தது குறித்து நார்வே நாட்டைச் சேர்ந்த நோபல் கமிட்டியினர் என்ன சொல்கிறார்கள்? சர்வதேச அளவில் ராஜீய உறவுகளைப் பலப்படுத்துவதற்கு ஒபாமா மேற்கொண்ட முயற்சி, அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றிகண்டதற்காக அவர் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதாகச் சொல்கின்றனர்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், ஆல்பிரட் நோபல் எதற்காக இந்தப் பரிசை ஏற்படுத்தினார். 1895-ம் ஆண்டு அவரால் உருவாக்கப்பட்ட உயில் கூறுவது என்ன? ""நாடுகளிடையே சகோதரத்துவம், நல்லிணக்கத்தைப் பேணி, அமைதி உடன்பாடுகளை ஏற்படுத்தி, படைபலத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு யார் வெற்றிகரமாகச் செயல்படுகிறார்களோ அவர்களுக்குத்தான் பரிசு தரப்படவேண்டும்'' என்பது ஆல்பிரட் நோபலின் விருப்பம். ஆனால், ஒபாமா இதில் எதைச் சாதித்தார்? அவரைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறுபவர்கள்கூட அவரது முயற்சிக்காகத்தான் பரிசு, அவர் எதையும் செய்யவில்லை என்கின்றனர்.

அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட ஒபாமா, தேர்தல் பிரசாரத்தின்போது இராக்கிலிருந்து படைகளை வாபஸ் பெறுவேன் என்று கூறினார். ஆனால், அதிபரானபின் அதைக்கூட அவரால் முழுமையாகச் செய்ய முடியவில்லை. அதற்கு மாறாக ஆப்கானிஸ்தானுக்கு அதிக அளவில் அமெரிக்கத் துருப்புகளை அனுப்புவதிலேயே அவர் கவனம் செலுத்தி வருகிறார். மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும் அவரால் முடியவில்லை. அமெரிக்கா, முஸ்லிம் நாடுகளுக்கு நண்பன் என்று கெய்ரோவில் பேசியதைத் தவிர அவரால் எதையும் உருப்படியாகச் செய்ய முடியவில்லை.

ஆல்பிரட் நோபலின் நோக்கத்துக்குச் சிறிதும் பொருந்தாத ஒருவரான ஒபாமாவை அமைதிப் பரிசுக்கு எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்? பரிசுக்கான நிபந்தனைகளுக்கு உள்படாத ஒருவரை நார்வே குழு தேர்ந்தெடுத்ததில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. அமைதியைவிட இங்கு அரசியல்தான் ஒபாமாவின் தேர்வுக்குக் காரணம் என்பதுபோல் தோன்றுகிறது.

வரலாற்றை நாம் ஆராய்ந்தால், போரைக் கைவிட்டு, அமைதியை வலியுறுத்தியவர் ஒருகாலத்தில் இந்தியாவில் ஆட்சிபுரிந்த மன்னர் அசோகர்தான் என்பது தெரியவரும். அவருக்கு முன்னரோ அல்லது அவருக்குப் பின்னரோ யாரும் அப்படி இருந்ததாகச் சரித்திரம் கிடையாது. கலிங்கப் போருக்குப் பிறகு அசோகர் இனி போரிடுவதில்லை என்று முடிவு எடுத்தார். அப்போது நடைபெற்ற சண்டைகளுடன் ஒப்பிட்டால் நவீன உலகில் நடைபெறும் சண்டை பன்மடங்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது தெரியவரும்.

அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கும் விதிமுறைகள் அடங்கிய உயிலை ஆல்பிரட் நோபல் தயாரித்தபோது, மன்னர் அசோகரைத்தான் அவர் மனதில் கொண்டிருக்க வேண்டும். போரிடுவதையே நோக்கமாகக் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்களுக்கு அமைதிக்கான பரிசு எப்படிக் கிடைக்க முடியும்?

இன்னும் சொல்லப்போனால் அமைதியை ஏற்படுத்தவே சண்டை நடக்கிறது. அமெரிக்கா பத்தாயிரத்துக்கும் மேலான அணு ஏவுகணைகளை முக்கிய இடங்களில் நிலைநிறுத்தியுள்ளது. மேலும் 20 ஆயிரத்துக்கும் மேலான ஏவுகணைகளை அழிக்காமல் இருக்கிறது. உலகிலேயே ராணுவ வல்லமை படைத்த நாடு அமெரிக்காதான். அப்படிப்பட்ட ஒரு நாட்டில் அசோகர் ஒருவர் எப்படி உருவாக முடியும்? அப்படி ஒருவர் உருவானால் அமெரிக்கா, அமெரிக்காவாக இருக்காது. அப்படி இல்லையெனில் ஒபாமா அசோகராக இருக்க முடியாது.

எனவே அமெரிக்கா, அமெரிக்காவாக இல்லாமல் இருந்தாலொழிய ஒபாமா அசோகராக முடியாது. அதாவது அமெரிக்காவின் அசோகராக ஒபாமாவால் ஒருபோதும் இருக்க முடியாது. அதுதான் உண்மை.

கட்டுரையாளர் : எஸ் . குருமூர்த்தி
நன்றி : தினமணி

2 comments:

KASBABY said...

ashokar never dismantled his army.even after the decision of non-war policy,he continuously used to maintain the army.that is,one who is strong can bring the peace.
one of the reason why mourya empire decline is that successor of ashokar did not understood the importance of army.in the name of non war policy they neglected/ignored the army.hece tha mouryan empire came to end.
similarly obama can bring peace by changing the approach,not necessarily dismantling arsenals.

பாரதி said...

Kasbaby thanks for you to visit my Blog and valuable comment about this article.