Tuesday, October 20, 2009

தார்மிக நியாயம்!

இன்னார் மட்டும்தான் பொதுவாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற வரைமுறைகள் மக்களாட்சித் தத்துவத்தில் கிடையாதுதான். படித்தவர்களும், சட்ட வல்லுநர்களும், பொருளாதார நிபுணர்களும், தங்களை முற்றிலுமாக மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர்களும் மட்டுமே சுதந்திர இந்தியாவின் ஆரம்பகாலங்களில் அரசியலில் களம் புகுந்தனர். காலப்போக்கில் ஏனைய தரப்பினர் பலரும், கலைத்துறையினர் உள்பட, அரசியலில் பங்கு பெறத் தொடங்கினார்கள்.

ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளாக, குறிப்பாகச் சொல்லப்போனால் 1967-க்குப் பிறகு, அரசியலை மட்டுமே தங்களது தொழிலாகக் கொண்டவர்கள் மிக அதிக அளவில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகியது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் காலம் முடிந்து சுயநலவாதிகளின் காலம் தொடங்கியது என்றுகூடக் கூறலாம். இந்த நிலைமை இந்தியா முழுமையிலும் பரவலாகக் காணப்பட்டது என்பதுதான் உண்மை.

அரசியல் என்பதே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், அதன்மூலம் தனிப்பட்ட முறையில் செல்வத்தையும், செல்வாக்கையும் பெருக்கிக் கொள்வதற்கும்தான் என்றாகிவிட்ட நிலைமை கடந்த 20 ஆண்டுகளாக மேலும் தரம் தாழ்ந்து அதிக அளவில் கிரிமினல் பின்னணி உடையவர்களும்கூட தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவை மற்றும் மக்களவை உறுப்பினர்களாக வலம் வரும் அளவுக்குப் போய்விட்டிருக்கிறது. இது ஒருபுறம் கவலை அளிக்கிறது என்றால் அதைவிடக் கவலையளிக்கும் இன்னொரு நிலைமையும் உருவாகி உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில், பல தொழில் அதிபர்கள் மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்களில் சிலர் தங்களது செல்வத்தாலும், செல்வாக்காலும் சில அரசியல் கட்சிகள் மூலம் மாநிலங்களவை உறுப்பினர்களாகி விடுகிறார்கள். இன்னும் சிலர், அரசியல் கட்சித் தலைமையுடன் உள்ள நெருக்கத்தால் மக்களவைக்கே போட்டியிட்டு வெற்றியும் அடைகிறார்கள்.

கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், ஓவியர்கள் போன்றவர்களைக் குடியரசுத் தலைவரே மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய நமது அரசியல் சட்டம் வழிவகுக்கிறது. மேலும், இதுபோன்று அரசியலைத் தங்களது பிழைப்பாக வைத்துக் கொள்ளாதவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தனிப்பட்ட ஆதாயம் கருதாமல், நல்ல பெயர் வாங்க மக்கள் பணியில் ஈடுபடுவார்கள் என்றுகூட நம்ப இடமிருக்கிறது.

பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் தங்களது சுயநலத்தைக் கருதாமல் பொதுநல நோக்குடன் செயல்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். அந்த எண்ணத்தில்தான் மக்களும் திரையுலகில் கோடிகோடியாகச் சம்பாதித்துவிட்ட கலைஞர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபடாமல் பொது நன்மையைக் கருதிச் செயல்படுவார்கள் என்று நம்பி அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள். இந்த நம்பிக்கை மோசம் போவதும் உண்டு.

அது ஒருபுறம் இருக்கட்டும். சமீபகாலமாகப் பல தொழிலதிபர்கள் மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களே, அவர்களது செயல்பாடுகள்தான் கவலை அளிப்பதாக இருக்கிறது. சமீபத்தில், நாடாளுமன்ற நிலைக் குழு ஒன்றில் உறுப்பினராக உள்ள ஒரு தொழிலபதிபர், தனது நிறுவனத்தின் சார்பில் நிறைவேற்றப்படும் கட்டமைப்புப் பணிகள் பற்றிய ஆய்வு ஒன்றில் அரசுத் தரப்பில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

நாடாளுமன்றக் குழுக்கள் அரசுத் துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பவை. அதன் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அமைச்சர்களைவிட அதிகாரம் படைத்தவர்களாக இருப்பவர்கள். சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர் அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளை அழைத்து விவரங்கள் கேட்கவும், கோப்புகளைப் பரிசீலனை செய்யவும் அதிகாரம் படைத்தவர். அரசுப் பணிகளை ஒப்பந்தப்புள்ளி மூலம் பெற்று நிறைவேற்றும் தனியார் கட்டமைப்பு நிறுவனங்களை நடத்துபவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து, சம்பந்தப்பட்ட நிலைக் குழுவின் உறுப்பினர்களாகவும் இருந்தால் அது என்ன நியாயம்?

தாங்கள் சம்பந்தப்பட்ட, உறவினர்கள் சம்பந்தப்பட்ட அல்லது கீழமை நீதிமன்றங்களில் தாங்கள் வாதாடிய வழக்குகள் வந்தால், அதன் விசாரணையில் நீதிபதிகள் பங்கேற்பதில்லை. தார்மிக ரீதியாக அது தவறு என்று கருதுகிறார்கள். ஆனால், அரசியல்வாதிகளாக மாறிய தொழிலதிபர்களோ, பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துக் கேட்க வேண்டியவர்களைக் கேட்டுத் தங்கள் வியாபாரத்துக்குப் பயனளிக்கும் நிலைக் குழுவில் இடம்பெற்று விடுகிறார்கள். இது எப்படி சரி?

தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளாக மாறுவதிலோ, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதிலோ தவறில்லை. இவர்களது அனுபவமும், திறமையும் தேசத்தின் நன்மைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பயன்படுமானால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால், தங்களது பதவியைப் பயன்படுத்தித் தங்களது நிறுவனங்களில் வளர்ச்சியை உறுதிப்படுத்த முயல்கிறார்களே, அதை எப்படி அனுமதிப்பது?

ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி.ஏ. பை, டி.டி. கிருஷ்ணமாச்சாரி போன்ற தொழிலதிபர்கள் அமைச்சர்களாகி இந்தியப் பொருளாதாரத்திற்கு வலு சேர்த்ததுபோக, இப்போது பதவிகள் சுயவளர்ச்சிக்குப் பயன்படுகிறதோ என்கிற ஐயம் தலைதூக்குகிறது. தொழிலதிபர்கள் நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதுதான் தார்மிக ரீதியாக நியாயம்!
நன்றி : தினமணி

No comments: