Sunday, October 11, 2009

ஏன் முடியாது?

சென்னை மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள் தடை செய்யப்பட்டு 40 தினங்களாகிவிட்டன. மாநகராட்சியின் இந்த முயற்சி ஓரளவுக்கு வெற்றி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த விஷயத்தில் நீலகிரி மாவட்டம்தான் தமிழகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது. சுப்ரியா சாஹு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது பிளாஸ்டிக்கின் கோரப் பிடியிலிருந்து சுற்றுலாத் தலமான ஊட்டியை முற்றிலுமாக விடுவித்து, தமிழகத்துக்கே அவர் வழிகாட்டினார் என்பதைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.

சென்னையில் மட்டும் நாள்தோறும் 30 முதல் 40 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன. உலக அளவில் எடுத்துக்கொண்டால் நூறாயிரம் கோடி டன் எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, ஒவ்வொரு நிமிடமும் பத்து லட்சம் டன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் பைகள் அடுத்த சில நிமிடங்களிலோ, மணித்துளிகளிலோ குப்பைத் தொட்டியில் வீசி எறியப்படும் என்பது தெளிவு.

சென்னையை எடுத்துக்கொண்டால், மாநகரத்தின் மொத்த கழிவுப் பொருள்களில் 8 சதவீதம் முதல் 15 சதவீதம் குப்பை பிளாஸ்டிக் பைகள். சட்டப்படி, 20 மைக்ரான்களுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகளைத் தயாரிப்பதேகூட குற்றம். ஆனால், இந்தச் சட்டத்தை யாரும் பின்பற்றுவதாகவும் தெரியவில்லை. நடைமுறைப்படுத்துவதாகவும் தெரியவில்லை.

ஒரு பலசரக்குக் கடையிலோ, காய்கறிக் கடையிலோ, வெற்றிலை பாக்குக் கடையிலோ இதுபோன்ற 20 மைக்ரானுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகள் தரப்பட்டால், பொதுமக்கள் யாரிடம் போய் புகார் செய்வது என்று யாருக்காவது தெரியுமா? அந்தப் புகாரை காவல்துறை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளாது. அரசாவது இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறதா, மக்களுக்குத் தெளிவான வழிமுறைகளை முன்வைக்கிறதா என்றால் கிடையாது.

பெட்ரோலியக் கச்சா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் பல உப பொருள்களில் ஒன்றுதான் பிளாஸ்டிக் என்பதுகூட நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம். இந்த பிளாஸ்டிக் கண்டுபிடித்தபோது, மனிதன் இயற்கையை வென்றுவிட்டான் என்றும், பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டதால் இயற்கை நமக்கு அளிக்கும் தாதுப் பொருள்களான இரும்பு, செம்பு, தகரம், அலுமினியம் போன்றவை மேலும் பல காலத்துக்குக் கிடைக்கும் என்றும் மனித இனமே பெருமைப்பட்டது. சணலுக்கும் காகிதப் பைகளுக்கும் வேலை இல்லாமல் போவதால், காடுகள் அழிக்கப்படுவது தடுக்கப்படும் என்று மகிழ்ந்தவர்களும் ஏராளம்.

இந்த மகிழ்ச்சி எல்லாம் அரை நூற்றாண்டு காலத்தில் மறைந்து, பிளாஸ்டிக் மனித இனத்துக்கு மட்டுமன்றி, உலகில் வாழும் உயிரினங்களுக்கும் ஏன் உலகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டிருக்கிறது. இறைவனின் படைப்பில் உலகிலுள்ள அத்தனை பொருள்களுமே மண்ணில் மக்கிவிடும் தன்மையன. அதனால் கழிவுகள் மலைபோலக் குவிந்துவிடாமல் உலகம் காப்பாற்றப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருள்கள் மக்கும் தன்மை இல்லாதவையாய் இருப்பதுடன், நிலத்தடி நீர் முறையாகச் சேகரிக்கப்பட முடியாமல் தடுக்கவும் செய்கின்றன. சராசரியாக ஒரு பிளாஸ்டிக் பை மக்குவதற்குக் குறைந்தது 1000 ஆண்டுகள்கூட ஆகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பயமுறுத்துகிறார்கள். இந்த பிளாஸ்டிக் எரிக்கப்பட்டால் அதிலிருந்து வெளிவரும் வாயு புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கிறது எனகிறார்கள்.

பிளாஸ்டிக்கால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கடல்வாழ் உயிரினங்கள்தான். நீர்நிலைகள், கழிவுநீர் ஓடைகள், ஆற்றுப்படுகைகள், கடற்கரைகள் என்று எங்கு பார்த்தாலும் நீக்கமற நிறைந்து நிற்கும் பிளாஸ்டிக்கினால், உலகம் முழுவதுமே பாலைவனமாக மாறிவிடும் அபாயமும் இருப்பதாக விஞ்ஞானிகளே எச்சரிக்கை விடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். வளர்ச்சி பெற்ற நாடுகளில் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்பதுடன் பலரும் தனிப்பட்ட முறையில் பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்கவும் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, தில்லி, சண்டிகர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உதகமண்டலத்தைத் தொடர்ந்து கோயம்புத்தூரிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு முழுமூச்சாக பிளாஸ்டிக் தவிர்ப்பு மக்கள் இயக்கமாக்கப்படுகிறது. சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றமேகூட 60 மைக்ரானுக்கும் கீழேயுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைந்திருக்கிறது.

பிளாஸ்டிக்கை முழுமையாகத் தவிர்த்து விடுவதோ தடை செய்வதோ சாத்தியமானதல்ல. மனித இனத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று தெரிந்தே இன்னும் பல பொருள்கள் பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பிளாஸ்டிக், கழிவுநீர் ஓடைகளை அடைக்காமல், கண்ட இடங்களில் வீசி எறியப்பட்டு நிலத்தடி நீருக்குத் தடையாக இருக்காமல், கடலில் கலந்துவிடாமல் பாதுகாக்க முடியும். மக்கள் மனது வைத்தால், பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்பதுடன், பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிமைப்படுத்தி நகராட்சி அமைப்புகளுக்கு உதவ முடியும்.

இந்த விழிப்புணர்வை அரசுதான் செய்ய வேண்டும் என்பது இல்லை. நமக்கும் சமுதாயக் கடமை இருக்கிறது என்று நாம் ஒவ்வொருவரும் முயன்றால்... ஏன் முடியாது?
நன்றி : தினமணி

2 comments:

நாளும் நலமே விளையட்டும் said...

வளர்ச்சி பெற்ற நாடுகளில் எங்கு பிளாஸ்டிக் பயன்படவில்லை?

நம் மக்கள் எங்கெல்லாம் பயன்படுத்துகின்றனரோ அங்கெல்லாம் இவர்களும் பயன்படுத்துகின்றனர்.

நம்மைப் போலவே இவர்களும் குப்பைகளை தெருவில் தான் போடுகின்றனர்.

ஆனால் இவர்கள் சரியாக குப்பைகளை கையாளுகின்றனர் என வேண்டுமானால் சொல்லலாம்.

தயவு செய்து வளர்ச்சி பெற்ற நாடு மக்கள் பிளாஸ்டிக் பயன்பாடு குறைவு என்று தவறான தகவலை பதிவு செய்ய வேண்டாம்.

மக்கள் தொகை கணக்கிட்டால் நம்மவர் எவ்வளவோ பரவாயில்லை.

பாரதி said...

நாளும் நலமே விளையட்டும் வருகைக்கு நன்றி