Friday, October 9, 2009

உயிர் கொடுக்க ஒரு வழி

தற்போது தமிழகம் முழுவதும் 108 எனப்படும் அவசரகால சிகிச்சை வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வாகனத்தின் சேவை பாராட்டுக்குரியதாக இருக்கிறது. இருப்பினும், விபத்தில் சிக்கியவரை, உயிர்காக்கும் "பொன்னான நேரத்துக்குள்' மருத்துவமனைக்குக் கொண்டுவந்தாலும், நரம்பியல் மருத்துவர் அல்லது சிறப்பு மருத்துவர் இல்லாத காரணத்தாலேயே பல இறப்புகள் நேர்கின்றன என்பது கசப்பான உண்மை.

தமிழ்நாட்டில், 2008-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12,784. இறந்தவர்களில் பெரும்பாலோரின் மரணத்துக்குக் காரணம் தலைக்காயம். தலையில் பலத்த அதிர்ச்சியால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மண்டைக்குள் அழுத்தம் ஏற்படுவதால் மூளையின் மற்ற திசுக்களும் செயலிழந்து மரணம் நிகழ்கிறது.

நரம்பியல் மருத்துவர் டாக்டர் பி. ராமமூர்த்தி, விபத்து சிகிச்சை பற்றி பயிற்சி மருத்துவர்களுக்குப் பாடம் நடத்தும்போது, எப்போதும் குறிப்பிடும் விஷயம் என்று அவரிடம் பயின்றவர்கள் நினைவுகூரும் அறிவுரை ஒன்று உண்டு: ""ஒரு பற்பசை குப்பியை அதன் நடுப்பகுதி, முனைப்பகுதி அல்லது வால்பகுதி என எங்கே அழுத்தினாலும் அதன் வாய்ப்புறத்தில் மட்டுமே பற்பசை வெளியேறும். அதேபோன்று மூளையில் எங்கே அழுத்தம் ஏற்பட்டாலும் அதனால் அதுசார்ந்த உடலின் பாகங்கள் செயலிழக்கும். ஆகவே, விபத்து காலத்தில் மூளையின் ரத்தக்கசிவால் ஏற்படும் மண்டைக்குள் அழுத்தத்தைக் குறைப்பதுதான் ஒரு மருத்துவரின் முதல் கடமை''.

இதற்காக, அன்றைய நாளில், பயிற்சி மருத்துவர்கள்கூட, விபத்தினால் செயலிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படும் நோயாளிக்கு, முதல்கட்டமாக பர்ஹோல் (ஆன்ழ்ழ் ட்ர்ப்ங்) எனப்படும் மிகச் சிறிய துவாரத்தை, மண்டையின் நான்கு புறமும் தேவைக்கு ஏற்ப போட்டு, ரத்தக்கசிவு எந்தப் பக்கம் என்பதைக் கண்டறியவும், மண்டைக்குள் ஏற்படுத்தும் அழுத்தத்தைக் குறைக்கவும் பயிற்சி பெற்றனர்.

இப்போது மருத்துவமனைக்குத் தலைக்காயங்களுடன் செயலிழந்து மயக்கநிலையில் வரும் நோயாளிகளுக்கு இத்தகைய பர்ஹோல் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. சிடி ஸ்கேன் எடுத்து ரத்தக்கசிவை உறுதிப்படுத்தினாலும்கூட, சிறப்பு மருத்துவர் இல்லாமல் செய்வதற்கு ஏதுமில்லை என்ற நிலைதான் அதிகமான மரணங்களுக்கு முக்கிய காரணம்.

எல்லா மருத்துவமனைகளிலும் எல்லா நேரங்களிலும் நரம்பியல் சிறப்பு மருத்துவர் இருப்பது சாத்தியமில்லை. சென்னை-பெங்களூர் நாற்கரச் சாலையில் கடந்த 7 மாதங்களில் 650 பேர் இறந்துள்ளனர். இந்த நெடுஞ்சாலையில் நரம்பியல் சிறப்பு மருத்துவர்கள் உள்ள மருத்துவமனைகள் அதிகபட்சம் 10 இருக்கக்கூடும். நரம்பியல் சிறப்பு மருத்துவர் அந்த மருத்துவமனைகளில் பணிபுரிந்தாலும்கூட, அந்த நேரத்தில் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்பதும் அரிது. பல நேரங்களில் மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களும், பொது மருத்துவர்களும் மட்டுமே இருக்கும் நிலை உள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பணியில் இருக்கும் பொது மருத்துவர், இன்றியமையாத இப்படிப்பட்ட அடிப்படைச் சிகிச்சைகளை அளித்தால் என்ன?
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்- ""இதைச் செய்ய சிறப்பு மருத்துவர்தான் வர வேண்டும். இதை நாங்கள் செய்கிறபோது மரணம் ஏற்பட்டால், சிறப்பு மருத்துவப் பட்டம் பெறாத நீங்கள் ஏன் இதில் ஈடுபட்டீர்கள் என்ற கேள்விக்கு ஆளாக நேரிடும். வழக்குகளில் சிக்கிக் கொள்வோம். மேலும், இப்போதெல்லாம் பொதுமருத்துவர் பார்த்த பிறகுதான் சிறப்பு மருத்துவர் பார்ப்பது என்கிற வழக்கமே பொதுமக்களிடம் இல்லாமல் ஆகிவிட்டது'' என்பதுதான் பொது மருத்துவர்களின் பதிலாக இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டிலும் பிற மேலை நாடுகளிலும் எந்தவொரு நோயாளியும் தனது குடும்ப மருத்துவர் எனப்படும் பொதுமருத்துவர் பரிந்துரைக் கடிதம் இல்லாமல், சிறப்பு மருத்துவரை அணுகவே முடியாது. இந்தியாவில் மட்டுமே, எடுத்தஎடுப்பில் ஒரு நோயாளியே சிறப்பு மருத்துவரை அணுகுவதும், அவரும் விருப்புடன் சிகிச்சை அளிப்பதும் நடந்துகொண்டிருக்கிறது. இதில் விதிவிலக்காக, மிகச் சில சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் இத்தகைய அடிப்படையான சிகிச்சைகளைக் கூட அளிக்க முடியாமல் சட்டம் அல்லது சமூகச் சிந்தனை தடையாக இருக்கும் என்றால், நஷ்டம் சமூகத்துக்குத்தான்!

இதில் எத்தகைய நடைமுறைகள் இக்காலத்திற்குப் பொருந்தும் என்பதையும், தலைக்காயம் அடைந்தவர்களுக்கு அடிப்படை சிகிச்சையை ஒரு எம்பிபிஎஸ் படித்த டாக்டரே அளிக்கவும், பின்னர் நிதானமாக அவரைச் சிறப்பு மருத்துவர் சிகிச்சையைத் தொடரவும் வழிவகை செய்வது பற்றி மருத்துவ உலகமும், அரசும் யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
நன்றி : தினமணி

No comments: