Thursday, October 8, 2009

குரங்கு கையில் கொள்ளி?

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பட்டாசு விபத்துகள் கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ந்து நடந்தவண்ணமாக இருக்கின்றன.

ஜூலை மாதம் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற 3 பட்டாசு ஆலை விபத்துகளில் மொத்தம் 22 பேர் இறந்தனர். ஆகஸ்ட் மாதம் சாத்தூரில் நடந்த விபத்தில் 2 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். செப்டம்பர் 26-ம் தேதி திருவண்ணாமலையில் நடந்த விபத்தில் 11 பேர் இறந்தனர். தற்போது, சோழவந்தான் ரயில்நிலையத்தில் 2 பேர் இறந்திருக்கிறார்கள்.

வழக்கமாக தீபாவளி நேரத்தில் பட்டாசுகளைக் கொளுத்தும் சிறுவர்கள்தான் தீக்காயமடைவார்கள். ஆனால் இந்த ஆண்டு சிவகாசி, சாத்தூர் போன்ற இடங்களில் உற்பத்தி ஆலைகளிலும், சோழவந்தான் சம்பவத்தில் விற்பனைக்குக் கொண்டு செல்லும்போதும், திருவண்ணாமலையில் வீட்டுக் கிடங்கில் வைத்திருந்தபோதும் இந்தக் கோர விபத்துகள் நடந்துள்ளன.
இதற்கு இரண்டு காரணங்களை மட்டுமே சொல்லலாம். முதலாவது, காவல்துறை, தொழிலாளர் துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டாவதாக, பட்டாசு விற்பனையில் கொள்ளை லாபம் கிடைப்பதால் எந்தவிதப் பயிற்சியும், முன்யோசனையும் இல்லாத - யார் வேண்டுமானாலும் அதைத் தயாரிக்க, விற்க முன்வருவது இன்னொரு முக்கியக் காரணம்.
முறையாக உரிமம் பெற்று, பட்டாசு ஆலை அமைப்பதற்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து, தொழிற்கூடம் நடத்தும் இடங்களில் பட்டாசு மருந்துகளின் தீமையை நன்கு அறிந்திருப்பதாலும், பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கையாள்வதாலும் விபத்துகள் என்பது மிகமிகக் குறைவு. ஆனால் லாபம் கிடைக்கிறது என்பதற்காக இத்தொழிலில் இறங்கி, கையூட்டு மூலம் எல்லா நிபந்தனைகளையும் சரிக்கட்டி விடும்போதுதான் இத்தகைய விபத்துகள் விபரீதங்களை விளைவிக்கின்றன.

இதேபோன்றுதான் பட்டாசு விற்பனையும். சில பட்டாசு விற்பனையாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு உரிமம் பெற்றவர்கள். இவர்கள் பல காலமாகப் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குப் பட்டாசுகளைக் கையாளும் எச்சரிக்கை உணர்வு எப்போதும் மனதில் இருக்கும். ஆனால் தீபாவளி நேரத்தில் பத்து நாள்களுக்கு மட்டும் கடை விரிக்கும் நபர்களுக்குப் பட்டாசுக்குள் மறைந்திருக்கும் ஆபத்துகள் மனதில் படாது. பெரும் கையூட்டு கொடுத்து தாற்காலிக உரிமம் பெறும் அவர்களுக்கு, இந்தப் பட்டாசு விற்பனைக் கடைகளை அமைப்பதில் கையாள வேண்டிய நிபந்தனைகள் குறித்து அக்கறையே இருக்காது.

ஒரு பட்டாசு விற்பனைக் கடை உரிமம் வாங்க வேண்டும் என்றால், தீயணைப்புத் துறை, நகராட்சி அல்லது உள்ளாட்சி அமைப்பு, அது அமையும் எல்லையில் உள்ள காவல்நிலையம், அப்பகுதியின் வட்டாட்சியர் இவர்கள் அனைவரிடமும் தடையில்லாச் சான்றிதழ் பெற்றுத்தான் தொடங்க முடியும். இதில் நிரந்தரமாக ஐந்தாண்டுகளுக்குப் பட்டாசுக் கடை உரிமம் வைத்திருப்போர் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ. 10,000 வரையும், பத்து பதினைந்து நாள்களுக்கு மட்டுமே பட்டாசு கடை வைப்பதற்காகத் தாற்காலிக உரிமம் பெற, குறைந்தது ரூ. 50,000 "இன்னபிற' செலவுகள் ஆவதாகவும் சொல்லப்படுகிறது.

பட்டாசு விற்பனையில் 300 சதவீதத்துக்குக் குறையாத லாபம் கிடைப்பதால், இந்த "இன்னபிற' செலவுகளைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை. இத்தகைய மனப்போக்கு, உரிமம் வழங்கும் நடைமுறைகளில் வரம்புகடந்து போய்விட்ட நிலைமை ஆகியவற்றைத்தான் இந்த ஆண்டின் விபத்துகள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த விஷயத்தில் நம் அண்டை மாநிலங்களைப் பின்பற்ற வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. கர்நாடகத்தில் ஹூப்ளி மற்றும் தார்வார் ஆகிய இடங்களில் இத்தகைய தாற்காலிக பட்டாசு விற்பனைக் கடைகள் அனைத்தும் ஏதேனும் ஒரு விளையாட்டுத் திடலில் மட்டுமே ஒட்டுமொத்தமாக அமையும்படி செய்கிறார்கள். தீயணைப்புத் துறை வாகனங்கள் அனைத்தும் அங்கே நிறுத்தப்படுகின்றன. முன்னதாகப் பட்டாசு விற்பனையாளர்கள் அனைவருக்கும் செய்யவேண்டியது, செய்யக்கூடாதது பற்றித் தெளிவாகச் சொல்லி விடுகிறார்கள். இதேபோன்றுதான் ஆந்திர மாநிலம் குண்டூரிலும் ஒரு மைதானத்தில்தான் இந்தப் பட்டாசு விற்பனைக் கடைகள் அனைத்தும் அமைக்கப்படுகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில், நேற்றுவரை புத்தகக் கடையாகவும் மளிகைக் கடையாகவும் இருந்தவை எல்லாம் திடீரென பட்டாசுக் கடைகளாக மாறிவிடுகின்றன. எல்லா நிபந்தனைகளையும் "இன்னபிற' செலவுகளால் மீறிவிடுகிறார்கள்.

தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் உள்ளன. தீபாவளி நேரத்து தாற்காலிக உரிமத்தை இவர்களுக்கு மட்டுமே வழங்குவது என்ற முடிவை தமிழகம் எடுத்தால் என்ன? பட்டாசு விற்பனையில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாதபடி கடுமையாக இருந்தால் மட்டுமே பட்டாசு விபத்துகள் தொடராமல் நமத்துப் போகும். இல்லையென்றால் அது அரசே குரங்கின் கையில் கொள்ளியைக் கொடுத்த கதையாகத்தான் தொடரும்!

நன்றி : தினமணி

No comments: