Thursday, September 3, 2009

அனைவருக்கும் கிடைக்குமா அடிப்படைக் கல்வி?

அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி கற்கும் உரிமை வழங்கும் மசோதாவை ஜூலை மாதக்கடைசியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு மனதாக நிறைவேற்றின.

ஒருவகையில் இந்தியாவிலுள்ள அனைத்துத் தரப்பினரையும் இந்த மசோதா திருப்திப்படுத்தியிருக்கிறது. எல்லாக் குழந்தைகளும் கல்வி பெற இந்த மசோதா வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

எனினும் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் போதிய விழிப்புடன் இருக்காவிடில் நோக்கம் நிறைவேறாமல் போகக்கூடும்.

கல்வி கற்க உரிமை வழங்கும் மசோதாவின் நோக்கத்தில் தவறு இருப்பதாக யாரும் சுட்டிக்காட்ட முடியாது. சட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், சிலர் அதை விமர்சித்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தச் சமூகத்துக்கு இப்போது என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் இந்தச் சட்டம்செய்ய முனைந்திருக்கிறது.

காலம் கடந்து வந்திருக்கிறது என்பதைத் தவிர வேறு எந்த விமர்சனத்தையும் இந்தச் சட்டத்தின் மீது வீசிவிட முடியாது.

1940-களில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து நியூயார்க்கில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

உலக அளவில் கல்வியை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என அந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஐ.நா. சட்டத்தில் இதை இடம்பெறச் செய்யவும் இந்தியா போராடியது.

இந்தியாவின் இந்தக் கருத்தை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டு அமல்படுத்தின.

ஆனால், அனைவருக்கும் கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று வலியுறுத்திய இந்தியா, தனது மக்களுக்கு அந்த உரிமையை வழங்குவதற்கு இவ்வளவு காலம் தாமதித்திருக்கிறது.

தற்போதைய சூழலில் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் சில பிரச்னைகள் எழக்கூடும். மாநிலங்களில் கல்வியின் நிலை குறித்தும் புதிய திட்டத்தை அமல்படுத்துவதற்குத் தேவையான எதிர்கால வழிமுறைகள் குறித்தும் முதலில் ஆய்வு செய்ய வேண்டும். திட்டத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்குவது குறித்துத் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.

இதுதவிர, தரமான ஆசிரியர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்ற முன்வருவார்களா? சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 25% இடஒதுக்கீடு வழங்குவது சாத்தியம்தானா? என்பன போன்ற நியாயமான சந்தேகங்களுக்கும் விடைகாண வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தாண்டி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையிலான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் கூடுதல் செலவை 50:50 என்கிற விகிதத்தில் மத்திய அரசும் மாநில அரசும் பகிர்ந்துகொள்ளும் என மக்களவையில் கல்வி அமைச்சர் அறிவித்தார்.

இந்த விகிதம் 67:33 என்கிற விகிதத்தில் இருக்கும் நிலையில், புதிய விகிதத்தை அமல்படுத்துவது குறித்து திட்டக் குழு அல்லது நிதி அமைச்சகத்துடன் உரிய ஆலோசனை பெறப்பட்டதா என்பது தெரியவில்லை. கூடுதல் நிதிச்சுமை குறித்து மாநிலங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டதா என்பதையும் அமைச்சர் விளக்கவில்லை.

அப்படியே கூடுதல் நிதிச்சுமையை ஏற்றுக்கொள்கிறோம் என மாநிலங்கள் கூறினாலும், அவைகளால் முடியுமா என்பதும் ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இவை அனைத்துமே தெளிவாக்கப்பட வேண்டிய சந்தேகங்கள்.

இதுவரை கல்வி தொடர்பான பெரிய முடிவுகள் அனைத்தையும் மாநிலங்கள்தான் செய்து வந்தன.

இப்போது முதன்முதலாக மத்திய அரசு அந்த வேலையைச் செய்திருக்கிறது. இது மாநிலங்களின் உரிமை தொடர்பான விஷயம் என்பதால் மாநிலங்களிடையே கருத்தொற்றுமை காண வேண்டியது அவசியம்.

பள்ளி ஆசிரியர்கள் என்பவர்கள் அரசியல் ரீதியாகப் பெரும் சக்தி வாய்ந்தவர்கள். வாக்குச் சாவடிகளை இவர்கள்தான் கையாள்கிறார்கள் என்பதால், இவர்களைப் பகைத்துக் கொள்வதை எந்த அரசியல் கட்சியும் விரும்புவதில்லை.

அப்படியிருந்தும், மாணவர்களைத் திறம்படப் பயிற்றுவிக்கும் பணியைச் சரிவரச் செய்யாமலிருக்கும் ஆசிரியர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர்.

பெரும்பாலானோர் நகர்ப்புறங்களிலேயே வசிக்க விரும்புவதால், கிராமப்புறப் பள்ளிகளில் அவ்வப்போது காலிப் பணியிடங்கள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னைகளையெல்லாம் போக்குவதற்குப் புதிய சட்டம் என்ன செய்திருக்கிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை.

இந்தியக் கிராமங்களில் தொடக்கக் கல்வி கிடைப்பதில் இப்போது பிரச்னையில்லை. தரமான கல்வியைப் பெறுவதில்தான் தடைகள் இருக்கின்றன.

ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு தொடக்கப்பள்ளி இருக்க வேண்டும்; இரு தொடக்கப் பள்ளிகளுக்கு ஓர் உயர்நிலைப் பள்ளி இருக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் கல்வித்துறையில் இருக்கின்றன.

நாடு முழுவதுமே இந்த விதிமுறைகள் பெரும்பாலும் நடைமுறையில் இருக்கின்றன. மிக அருகிலேயே கல்வி கிடைப்பதை இது உறுதி செய்கிறது. ஆனால், கல்வியின் தரத்தைப் பற்றி எந்த விதிமுறையும் இல்லை.

புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மசோதாவை நிறைவேற்றும்போது நாடாளுமன்றத்திலும் இதுபற்றி விவாதிக்கப்படவில்லை. உண்மையில், தரம்தான் தொடக்கக்கல்வியின் அடிப்படைப் பிரச்னை.

பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்குவதற்குப் புதிய சட்டம் வழிவகுக்கிறது. இப்படியொரு ஏற்பாடு அவசியம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இதை முழுமையாக அமல்படுத்த முடியுமா என்பதுதான் பிரச்னையே. கல்வி வியாபாரமாகிவிட்ட இந்தக் காலத்தில் பணம் பண்ணுவதையே குறிக்கோளாகக் கொண்ட "கல்வித் தந்தைகள்' இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு நிச்சயம் முட்டுக்கட்டையாக இருப்பார்கள்.

அப்படியே சிலர் அரைமனதுடன் அமல்படுத்தினாலும், 25% பேரிடம் இழக்கும் நன்கொடையை மீதியுள்ள 75% பேரிடம் வசூலிக்கத்தான் போகிறார்கள். இது வேறுவிதமான பிரச்னைகளை உருவாக்கும்.

இன்னொரு பக்கம், "பொருளாதாரத்தில் பின்தங்கியோர்' யார் என்பதை அரசியல் சட்டம் வரையறுக்கவில்லை. அதனால் புதிய சட்டத்தை எதிர்த்துப் பள்ளிகளின் உரிமையாளர்கள் வழக்குத் தொடர்வதற்கும் வழி இருக்கிறது. இதுதவிர, பள்ளிகளில் புதிய முதலீடுகள் வருவதையும் இந்தச் சட்டம் பாதிக்கிறது.

இந்தச் சட்டத்தை இயற்றிவிட்டதால், தொடக்கக் கல்வி தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் "தீர்ந்து' விட்டது என அரசு நினைப்பதுதான் எல்லாவற்றையும்விட மிகவும் அபாயகரமானது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் "வறுமையை ஒழித்துவிட்டதாக' நினைத்துக் கொண்டிருப்பதைப்போல்தான் இதுவும்.

சட்டங்களை இயற்றுவது, பிரச்னையைத் தீர்ப்பதில் முதல்படி மட்டுமே. அதை முழுமையாக அமல்படுத்துவதே பிரச்னையை முழுமையாகத் தீர்ப்பதற்கு வழிவகுக்கும்.

கல்வி என்பது சமூகத்தின் மிக அடிப்படையான பிரச்னை என்பதால், மத்திய அரசுடன் மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒத்துழைப்பது அவசியம்.

அப்படியில்லாமல், ஒருவரையொருவர் பழிசுமத்திக் கொள்வதாலும், சட்டங்களை இயற்றிக் கிடப்பில் போடுவதாலும் நிலைமை இன்னும் மோசமாகுமே தவிர, தீர்வு கிடைக்காது.

கட்டுரையாளர் : டி . எஸ். ஆர். சுப்பிரமணியன்
நன்றி : தினமணி

1 comment:

என் பக்கம் said...

பதிவுலக நன்பர்களே – இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் – 3

01. கல்வியின் இன்றையநிலை?
02. சமசீர் கல்வியின் தேவை?
03. தாய் மொழிகல்வியின் தேவை?

நன்றி

http://oviya-thamarai.blogspot.com/2009/10/3_11.html