Thursday, September 17, 2009

ஊழலுக்கு எச்சரிக்கை!

ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவரின் சொத்துகளை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ள கருத்தும், ஊழல் செய்யும் அரசு ஊழியர்களின் சொத்து பறிமுதல் மசோதா தாமதமின்றி நிறைவேற்றப்படும் என்று மத்திய நீதித் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ள கருத்தும் நாட்டில் ஏதோ நல்லது நடப்பதற்கான நம்பிக்கையை விதைத்துள்ளன.

அதுமட்டுமல்ல, ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும் இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் பிரிவுகள் 309, 310, 311 திருத்தப்பட வேண்டும் என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

அமைச்சர் பேசிய அதேவேளையில், உச்ச நீதிமன்றத்தில் மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை கோரும் வழக்கொன்றில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்தவரைத் தண்டிப்பதில் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி அவசியமில்லை என்ற கருத்தையும் நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், சுதர்ஸன் ரெட்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்துகள் யாவும் மக்களைத் திருப்திப்படுத்தும் கருத்துகளாக இல்லாமல், நடைமுறையில் உண்மையிலேயே அமல்படுத்தப்படும் விஷயங்களாக மாற வேண்டும். மாறினால்தான் இந்தப் பேச்சுகளும் கருத்துகளும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

லஞ்சம் வாங்கியதாக அரசு ஊழியர்கள் கைது செய்யப்படும் செய்திகள் வருகின்றனவே தவிர, அவர்கள் தண்டிக்கப்பட்டதாகச் செய்திகள் வருவது மிகமிகக் குறைவு. இவர்கள் ஜாமீனில் வெளியே வந்து, கோடிகோடியாய்ச் சேர்த்து வைத்த லஞ்சப் பணத்தில் "வாய்தா' வழி சுகவாழ்வு வாழ்கிறார்கள்.

ஒவ்வோர் ஆட்சியிலும் கடந்த ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அமைச்சர்கள் மீது வழக்குப் போடுகிறார்கள். மீண்டும் ஆட்சி மாறியதும் அவர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடியாகின்றன. அல்லது கட்சி மாறிய சிலநாளில் அவர் மீதான லஞ்ச வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். திடீரென நல்லவராகிவிடுகிறார். ஆனால் அவர்களது சொத்துகள் அனைத்தும் மக்கள் பணம் என்பது பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?

இந்தியாவில் அனைவரும் அரசு ஊழியர்கள் அல்ல. அதிகபட்சமாக 2 சதவீதம் பேர் மட்டுமே அரசு ஊழியர்கள். அதேபோன்று அனைவரும் அரசியல்வாதிகளும் அல்ல. அவர்களிலும் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் மிகச் சிலர்தான். ஆனால் இவர்கள் செய்யும் ஊழலும், வாங்கிச் சேர்க்கும் சொத்துகளையும் பார்த்து மக்கள் மனமொடிகிறார்கள். அரசியல்வாதியாவது ஐந்தாண்டுக்கு ஒரு முறையோ அதற்கு முன்னதாகவோ மக்கள் மன்றத்தை எதிர்கொண்டு, அவர்களது அனுமதியுடன் மட்டும்தான் மீண்டும் லஞ்சம் வாங்க முடிகிறது. ஆனால், அதிகாரிகள் அப்படியா? ஒருமுறை நியமனம் பெற்றுவிட்டால், ஓய்வு பெறுவது வரை, அல்லது பிடிபடாதவரை தங்கு தடையின்றி லஞ்சத்தில் புரள முடிகிறது.

காவல்துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை, பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்தவர்களும் கூட்டம் நடக்கும் நாளுக்கு மட்டுமே படி பெறும் சாதாரண நகராட்சி கவுன்சிலர்களும்கூட அவரவர் பகுதியில் பளிங்குக் கற்களால் இழைத்துக் கட்டியுள்ள மாளிகைகள் மக்கள் பார்வைக்கு மறைந்துவிடுமா என்ன? நகரின் முக்கிய பகுதிகளில் மனை, வீடுகள், கடைகளை மனைவி மற்றும் உறவினர் பெயரில் இவர்கள் வாங்கி, புதுப்புதுக் கார்களில் வலம் வரும் இவர்களைப் பார்க்கும் இந்தியக் குடிமகன், எல்லா அறநெறிகள் மீதும் நம்பிக்கை இழக்கிறான். விரக்தியின் உச்சத்தில், பாஞ்சாலி சபதத்தில் வரும் மகாகவி பாரதியின் கூற்றினைப்போல, ""வெறும் சொல்லுக்கே அறநூல்கள் உரைக்கும் துணிபெலாம்'' என்கிற மனநிலைக்கு ஆளாவது தவிர்க்க முடியாததாகிறது. இதனால்தான், லஞ்சத்தை வெறுப்பவர்கள்கூட, "வேறு வழியில்லையே' என்று நொந்துகொண்டு லஞ்சத்தைக் கொடுக்க உடன்படும் சூழ்நிலை உருவாகிறது.

ஒவ்வோர் அரசு ஊழியரும் சொத்துகள் வாங்கும்போது அது பற்றிய விவரத்தைத் தங்கள் துறை மூலமாக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால், எத்தனை அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை அரசுக்கு முறைப்படி தெரிவிக்கிறார்கள்? அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை ஆண்டுதோறும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குவதும், பினாமி பெயரில் சொத்து பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதும்தான் பெரும் ஊழல்களுக்கு கடிவாளம் போடும்.

இதெல்லாம் இருக்கட்டும். தலைமை நீதிபதி சொல்லும் கருத்து ஆழமானது, அவசியமானது என்றாலும்கூட, நீதிபதிகள் சொத்துகளை அறிவிக்க நீதித்துறையே பின்வாங்குகிறபோது அவர்தம் சொல்லுக்கு மதிப்பு இருக்குமா? ஐம்பதுகளில் உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜாரிலால் நந்தா காலத்திலிருந்து அவ்வப்போது எழுகின்ற "ஊழலை ஒழிப்பேன்' கோஷம் உதட்டளவு கோஷமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இப்போது வீரப்ப மொய்லியின் முறை... நல்லது நடந்தால் சரி...!
நன்றி : தினமணி

No comments: