Wednesday, September 9, 2009

நாம் வாளாவிருக்கலாமா?

மனித சமுதாயத்தைப் பிடித்திருக்கும் மிகப்பெரிய சாபக்கேடு' என்று வர்ணிக்கப்படும் புகையிலை, உலகளாவிய நிலையில் தனது பேரழிவுகளைத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டு வருவதைச் சமீபத்திய உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெளிவாக்குகிறது. "புகையிலை வரைபடம்' (டுபாக்கோ அட்லஸ்) என்கிற பெயரில் தனது 3-வது பதிப்பை உலக நுரையீரல் அமைப்பும், அமெரிக்க புற்றுநோய்க் கழகமும் வெளியிட்டுள்ளன.

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் "புகையிலை வரைபடம்' புகையிலையின் வரலாறு. புகையிலைப் பழக்கம் எந்தெந்த நாடுகளில் எந்த அளவுக்கு இருக்கிறது, இளைஞர் மத்தியில் இதன் தாக்கம், இதனால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் உயிரிழப்பு என்று புகையிலை சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இணையதளத்திலும் இலவசமாக அனைவருக்கும் எளிதில் புரியும்படியாகவும் பயனடையும் விதத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் செவ்விந்தியர்கள் மத்தியில் மட்டும் காணப்பட்டது இந்தப் பழக்கம். வட அமெரிக்காவில் பரவலாக பயிரிடப்பட்டிருந்த புகையிலை, ஐரோப்பியரின் வருகையைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்துக்கும் பரவியது என்பதுதான் இந்த உயிர்க்கொல்லிப் பயிரின் சரித்திரம். 2010-ல் மட்டும் புகையிலையால் ஏற்படும் பாதிப்பு உலக மக்கள்தொகையில் குறைந்தது 60 லட்சம் பேரை உயிரிழக்கச் செய்யும் என்றும், அதில் மூன்றில் ஒரு பகுதியினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பர் என்றும் "புகையிலை வரைபடம்' எச்சரிக்கிறது.

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் 25 விழுக்காடு நபர்கள் தங்களது அதிகமாகச் சம்பாதிக்கும் மத்திய வயதில் உயிரிழப்பு அல்லது கடுமையான நோய்க்கு ஆளாகிறார்கள் என்பதை அந்தப் புள்ளிவிவரம் தெளிவுபடுத்துகிறது. இதனால் அவர்களது குடும்பமும், அவர்களது பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

உடல்நலக்குறைவு என்பதும் உயிரிழப்பு என்பதும் ஒருபுறம் இருக்க, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் உடல் உழைப்புத் திறனும் கணிசமாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. புகைபிடிப்பதால் நுரையீரல் பலவீனப்பட்டு, அந்தப் பழக்கம் உள்ளவர்கள் மற்றவர்களைப் போல விரைந்து நடக்கவோ, மாடிப்படி ஏறவோ முடிவதில்லை என்கிறது அந்த ஆய்வு. மேலும், அவர்களது வேலை நேரத்தில் புகைபிடிப்பதற்காக வெளியில் செல்வதால், எடுத்துக் கொண்ட பணியில் முழுக்கவனமும் செலுத்த முடிவதில்லை என்றும் குறிப்பிடுகிறது.

புகைபிடிக்கும் பழக்கத்தின் மற்றும் ஒரு சாபக்கேடாக குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம் ஆண்மைக்குறைவு. புகைபிடிக்கும் பெண்கள் பிரசவத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதுடன் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் வளர்ச்சிக் குறைவு, அங்கஹீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்கிறது அந்த ஆய்வு.

பெண்களைப் பொருத்தவரை, புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாகவும், அதில் பாதிக்கும் அதிகமானோர் புகைபிடிப்பதாகவும் கூறுகிறது "புகையிலை வரைபடம்'. மற்றவர்களில் பெரும்பாலோர் வெற்றிலைப் பழக்கத்துக்கும், "குட்கா' எனப்படும் புகையிலையை அப்படியே மெல்லும் பழக்கத்துக்கும் அடிமையாகி இருப்பவர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், படிக்காத கிராமப்புற பெண்கள் மத்தியில் புகையிலைப் பழக்கம் கணிசமாகக் குறைந்து வருவதாகவும், படித்த, நகர்ப்புற 30 வயதுக்குக் குறைவான பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கிறது அந்த அறிக்கை.

""தாங்கள் ஆண்களைப் போல எல்லாம் செய்ய வேண்டும் என்கிற நாகரிக மோகம், படித்த பெண்கள் மத்தியில் அதிவேகமாக இந்தியாவில் வளர்ந்து வருவதன் தாக்கம்தான் இது. புகைபிடிப்பதாலும் ஆண்களைப் போல உடையணிவதாலும் ஆண்களுக்கு சமமாகிவிடுவோம் என்கிற கருத்து ஏற்பட்டிருப்பது, அவர்களது உடல்நிலையைப் பாதிக்கும் என்பதுகூடத் தெரியவில்லை. பெண்கள் நலவாரியங்கள் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை'' என்று ஆதங்கப்படுகிறார்கள் புற்றுநோய் எதிர்ப்புக் கழகத்தினர்.

புகைபிடிப்பவர்கள் தங்களது உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்வதுடன் சுற்றிலும் இருக்கும் புகைபிடிக்காதவர்களின் உடல்நலத்தையும் பாதிக்கிறார்கள். தங்களது குடும்பத்தினரின் உடல்நலம் பாதிக்கப்படும், குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்படும் என்பது தெரியாமல் வீட்டில் புகைபிடிப்பவர்கள்தான் ஏராளம். புகைபிடிப்பதும், புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதும் நாகரிகத்தின் அடையாளம் என்கிற தவறான கண்ணோட்டம் மாற்றப்பட்டால் மட்டுமே இந்த உயிர்க்கொல்லிப் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

புகையிலைப் பழக்கம் என்பது ஒரு சமூக இழிவாகவும், புகையிலை எதிர்ப்பு என்பது ஒரு சமூக இயக்கமாகவும் உருவாக வேண்டும். குறிப்பாக, பெண்கள் மத்தியில் அதிகரித்து வரும் இந்தப் பழக்கம் நாளைய தலைமுறையையே நாசமாக்கிவிடுமே, நாம் வாளாவிருக்கலாமா?

நன்றி : தினமணி

No comments: