Wednesday, August 26, 2009

ஜின்னாவாலான உபகாரம்...!

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்கை நீக்க தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு அதிகாரம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டாலும், நீக்கிய விதம் மட்டுமல்ல -நீக்கியதே தவறு என்றுதான் தோன்றுகிறது.

தேசப் பிரிவினைக்குக் காரணமான முகம்மது அலி ஜின்னாவை ஒரு வரி கூட பாராட்டி எழுதக்கூடாது என்பது கட்சியின் சித்தாந்தமாகவே இருக்கலாம். ஜஸ்வந்த் சிங் ஜின்னாவைப் பாராட்டியதற்காக விளக்கம் கேட்டிருந்தால் நியாயம். அத்வானி செய்யாததையா ஜஸ்வந்த் செய்துவிட்டார்?

இந்தப் புத்தகம் மட்டுமே அவருடைய நீக்கத்துக்குக் காரணம் என்று தோன்றவில்லை. மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு ராஜ்நாத் சிங், அத்வானி உள்பட அனைவருமே அவரவர் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஜஸ்வந்த் சிங் வலியுறுத்தியதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கட்சியின் தோல்வியை ஆராய சிம்லாவில் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதன் மூலம் உண்மையான ஆத்ம பரிசோதனையை மேற்கொள்ள பாஜக தலைமை தவறிவிட்டது என்றுதான் தோன்றுகிறது.

காங்கிரஸýக்கு மாற்றாக இடதுசாரிகளைத் தவிர எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து உருவான ஜனதா கட்சி அதிக நாள்கள் ஒற்றுமையுடன் செயல்பட முடியாமல், நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டாற்போலக் கொட்டிச் சிதறியபோது, உருவான கட்சிதான் பாரதிய ஜனதா கட்சி. நேர்மையானவர்கள், வித்தியாசமானவர்கள், லஞ்ச ஊழல் கறைபடியாதவர்கள் என்று இந்தக் கட்சியின் தலைமையில் இருந்தவர்கள் மதிக்கப்பட்டனர் என்பதும் நிஜம். படித்தவர்கள், பண்பாளர்கள் நிறைந்த கட்சி என்ற காரணத்துக்காகவே மக்களிடம் தனி மரியாதையைப் பெற்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம், அதிமுக பிறகு திமுக, தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், இந்திய தேசிய லோக தளம் போன்ற கட்சிகளுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியால் அக் கட்சி தெற்கிலும் கிழக்கிலும் வளர முடிந்தது. காங்கிரஸýக்கு மாற்றாக ஒரு நிலையான கூட்டணியை அமைக்க முடியும் என்றும், அந்தக் கூட்டணியால் ஐந்தாண்டுகள் ஆட்சியில் தொடர முடியும் என்றும் பாரதிய ஜனதா கட்சி நிரூபித்தது என்பதுதான் அதன் மிகப்பெரிய சாதனை எனக் கூறலாம்.

ஒரிசாவில் நடந்த வகுப்புக் கலவரத்துக்குப் பிறகு பிஜு ஜனதா தளம் பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலகி, தனித்து தேர்தலைச் சந்தித்து மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டது. அடுத்து அப்படி விலகிச் செல்ல பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய தேசிய லோகதளத்துடனான கூட்டு ஹரியாணாவில் முறிந்துவிட்டது.

மீண்டும் கூட்டு வைக்க தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகள் தயங்குகின்றன. சரத் பவார் கட்சி சரி என்று சொன்னால் பாரதிய ஜனதாவை கைகழுவிவிட சிவசேனை தயாராகவே இருக்கிறது. அகாலி தளமும் இந்தக் கூட்டணியை முறித்துக் கொள்ள விரும்பினாலும் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் இன்றைய நிலைமை.

இந்த நிலையில் கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுவாக்க என்ன செய்ய வேண்டும் என்று தீவிரமாக ஆராய்ந்து தவறுகளைத் திருத்திக் கொள்வதை விட்டுவிட்டு இருப்பவர்களை வெளியேற்றும் போக்கு விந்தையாக இருக்கிறது. உள்கட்சி ஜனநாயகம் இல்லாமல் இருப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு. கருத்துப் பரிமாற்றத்திற்கு இடமளிக்கும் கட்சி என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி அதைவிட மோசமாக அல்லவா இருக்கிறது!

அனைவருக்கும் பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு தனி மாநில அந்தஸ்து ரத்து, நாடு முழுவதற்கும் ஒரே மொழி (வேறென்ன ஹிந்திதான்), அயோத்தியில் ராமருக்குக் கோயில் என்ற கொள்கைகளால் கட்சிக்கும் பயன் இல்லை, மக்களுக்கும் பயன் இல்லை. தேர்தலில் வெற்றி பெறவாவது இவை உதவுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. இந்த நிலையில் ""தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்'' என்று இனியும் தொடர்ந்தால் கட்சியின் வளர்ச்சி தேய்பிறையாகி பிறகு ஜனதா கட்சியைப்போல அடையாளமே இல்லாமல் மறைந்துவிடும் என்பது மட்டும் நிச்சயம்.

தூய்மையான நிர்வாகம், சுதேசி கொள்கைக்கு முன்னுரிமை, சுயச்சார்பே எங்கள் லட்சியம் என்றெல்லாம் முழங்கி மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு நடைபாவாடை விரிப்பதையே தங்களுடைய தேசியக் கடமையாக வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி அரசு செயல்பட்டதை அதன் ஆட்சிக்காலத்தில் பார்த்தது நாடு.

முரண்பாடுகளின் மொத்த உருவாகக் காட்சி அளிக்கும் இன்றைய பாரதிய ஜனதா கட்சி, அன்றைய ஜனதா கட்சியைப்போல இன்னொரு சிதைந்த கதைதானோ? தேசிய அளவில் பலமானதொரு மாற்று அமைப்பு அவசியம். இதை பாஜகவால்தான் தர முடியும். அதைக்கூட பாஜக தலைமை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறது? தவறு ஜஸ்வந்த் சிங் போன்ற தனி நபர்கள் மீது இல்லை, தங்களிடம்தான் என்பதை கட்சித் தலைமை உணர வேண்டும்.

ஜின்னாவால் இந்தியா பிளவுபட்டது என்பதெல்லாம் இருக்கட்டும். இப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியை சிதைத்துக் கொண்டிருக்கிறார் என்பது என்னவோ உண்மை!

நன்றி : தினமணி

No comments: