Sunday, August 9, 2009

நல்லது நடந்திருக்கிறது!

நீதிபதிகளின் சொத்துக் கணக்குகளை அறிவிக்க வகைசெய்யும் மசோதா, மாநிலங்களவையின் கடுமையான எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் அரசால் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து ஒருசில மாற்றங்களுடன் இந்த மசோதா அவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்திருக்கிறார்.

அறிமுகக் கட்டத்திலேயே முடக்கப்பட்டுவிட்டிருக்கும் இந்த மசோதாவில் காணப்பட்ட சில பிரிவுகள் எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி ஆளும் கூட்டணித் தரப்பில்கூட சிலருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதுதான் உண்மை. மத்திய சட்ட அமைச்சருக்கேகூட அந்த மசோதாவில் முழுத் திருப்தி இருக்க வழியில்லை என்பது அவரது முந்தைய சில கருத்துகளிலிருந்து யூகிக்க முடிகிறது.

இப்போதைய நிலையில் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்குகளை தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பதாகவும், அதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் கருத்து. தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி நீதிபதிகளின் சொத்துக் கணக்கை பொதுமக்கள் கோர முடியாது என்பதில் நீதிபதிகள் பிடிவாதம் பிடிக்கிறார்கள். இந்த நிலையில், நீதிபதிகளையும் ஒரு சில அடிப்படை விஷயங்களில் வெளிப்படைத்தன்மை உடையவர்களாக்குவதுதான் இந்த மசோதாவின் உள்நோக்கம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால், நீதிபதிகள் சொத்துக் கணக்கு அறிவிப்பு மசோதா 2009-ன்படி, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கை சம்பந்தப்பட்ட தலைமை நீதிபதியிடம் ஆண்டுதோறும் தாக்கல் செய்தாக வேண்டும் என்கிற சட்ட நிர்பந்தம் ஏற்படுகிறது. அதேநேரத்தில், இந்த மசோதாவின் பிரிவு எண் 6-ன் படி, நீதிபதிகள் தாக்கல் செய்த சொத்து விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது இல்லை என்றும் காணப்படுகிறது. தலைமை நீதிபதியிடம் சொத்து விவரம் தரப்பட்டு, அது வெளியில் யாருக்கும் தெரிவிக்கப்படாமல் இருப்பதற்கு சட்டமும் மசோதாவும் எதற்கு என்பதுதான் கேள்வி.

சமீபகாலமாக, பல நீதிபதிகளின் மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. தங்களது வருமானத்துக்கு மீறிய சொத்துகளுக்குச் சொந்தக்காரர்களாகப் பல நீதிபதிகள் இருக்கின்றனர் என்று பரவலாகவே ஒரு கருத்து நிலவுகிறது.

இந்த நிலையில், ஆண்டுதோறும் நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்கை வெளியிட்டு, அது பொதுமக்கள் பார்வைக்கு உள்படுத்தப்படுமானால், தவறுகள் தடுக்கப்படாவிட்டாலும், குறையுமே என்கிற எதிர்பார்ப்புத்தான், இப்படி ஒரு மசோதாவுக்கான அடிப்படை.

தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தங்களது சொத்துக் கணக்கை வாக்காளர்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், மக்களாட்சியில் அப்படிப்பட்ட வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வாக்காளர்கள் தங்களது வேட்பாளர்களின் தகுதியை சீர்தூக்கி வாக்களிக்க முடியும் என்றும் தீர்ப்புகூறி, தேர்தலில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்தது நீதித்துறைதான். தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு என்ன சட்டமோ அதுதானே நீதித்துறைக்கும் இருக்க வேண்டும்? தனக்கொரு நீதி, அடுத்தவர்களுக்கு இன்னொரு நீதியென்று நீதித்துறையே சொல்வது நீதியாகுமா?

இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 19 (1) (அ)வின் படி ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமை தரப்பட்டிருக்கிறது. இதை உச்ச நீதிமன்றம் பலமுறை உறுதியும் செய்திருக்கிறது. இந்த நிலையில் துணிவாக, நீதித்துறையிலும் சில வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று அரசும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் எதிர்பார்ப்பதில் என்ன தவறு? இதனால் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்று கூறுவது வாதமல்ல, வறட்டுப் பிடிவாதம்.

இப்படி ஒரு சர்ச்சைக்கு வழிகோலியதே நீதித்துறைதான். நமது நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்குகளை மக்கள் பார்வைக்கு உள்படுத்தி, தாங்கள் லஞ்ச ஊழல் மற்றும் சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்க வேண்டாமா? எங்கள் சொத்துக் கணக்கை யாரும் கேள்வி கேட்கவோ, பரிசோதிக்கவோ கூடாது என்று நீதிபதிகள் அடம்பிடிப்பது, "அப்பன் குதிருக்குள் இல்லை' என்கிற கதையாக இருக்குமோ என்கிற தேவையில்லாத சந்தேகத்தை அல்லவா கிளப்பி இருக்கிறது.

வெளிப்படைத் தன்மை என்பது மக்களாட்சியில் நீதித்துறை உள்பட ஆட்சியில் எல்லா பிரிவுகளுக்கும் இருந்தாக வேண்டும். நீதிபதிகளின் சொத்துக் கணக்கு அறிவிப்பு மசோதா 2009-லிருந்து 6-வது பிரிவு அகற்றப்பட்டு, மக்கள் மன்றத்தின் முன் நீதிபதிகளும் தங்களது நேர்மையை நிரூபிக்க சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

சமீபத்தில் சட்டக் கமிஷன் தலைவர் ஏ.ஆர். லெட்சுமணனின் புத்தக வெளியீட்டு விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியிருப்பதைப்போல, "மக்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் நீதித்துறை நடந்து கொள்ள வேண்டும்'!
நன்றி : தினமணி

4 comments:

ரவி said...

நீதிபதிகள் விஷயத்தில் உண்மை தெரிந்தாலும் அதை வெளிப்படையாக சொல்லமுடியாத நிலை தீப்பெட்டியாரே !!!

எப்போவாவது சந்திக்கும்போது இதுபற்றி சொல்கிறேன்...

Tamilan said...

thalaiva. intha newsa eerkanavey innoru sitela paarthuiruken. sonthama creativity pannunga thalaiva. namaku ean intha polappu.

பாரதி said...

செந்தழல் ரவி வருகைக்கு நன்றி

பாரதி said...

Tamilan வருகைக்கு நன்றி