Saturday, March 28, 2009

கியர் வண்டிகளை இனிமேல் தயாரிப்பதில்லை : ஹோண்டா இந்தியா முடிவு

இனிமேல் கியர் உள்ள இரு சக்கர வாகனங்களை இந்தியாவில் தயாரிப்பது இல்லை என்று ஹோண்டா இந்தியா முடிவு செய்திருக்கிறது. கியர் இல்லாத இரு சக்கர வாகனங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டுவதால் அது, அதன் 150 சிசி மாடல் ' எடர்னோ ' வை சந்தையில் இருந்து வெளியேற்ற முடிவு செய்திருக்கிறது. ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்தின் 100 சதவீத இந்திய நிறுவனமான ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா, நேற்று ' ஆக்டிவா ' என்ற புதிய கியர் இல்லாத ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதன் விலை ரூ.39,800 ( எக்ஸ் ஷோரூம் - டில்லி ). நாங்கள் இனிமேல் ' எடர்னோ ' வை தயாரிக்கப்போவதில்லை. ஏனென்றால் இனிமேல் கியர் உள்ள இரு சக்கர வாகனங்களை தயாரிக்கப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம் என்றார் ஹோண்டா இந்தியாவின் தலைவர் மற்றும் சி.இ.ஓ.,ஷிஞ்சி அயோமா. இனிமேல் நாங்கள் கியர் இல்லாத ஸ்கூட்டர்கள் தயாரிப்பில்தான் கவனம் செலுத்த இருக்கிறோம். எனவே இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் ஆக்டிவா மூலம் இரு சக்கர வாகன விற்பனையில் 18 சதவீத வளர்ச்சியை 2009 - 10 ல் எதிர்பார்க்கிறோம் என்றார். எங்களது எடர்னோ, வருடத்திற்கு 40 ஆயிரம் மட்டுமே விற்பனையானது. இது மிக மிக குறைந்த விற்பனை. எனவே தான் அதை சந்தையில் இருந்து வெளியேற்றுகிறோம் என்றார் அயோமா. எடர்னோவை விட, இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் ஆக்டிவா 15 சதவீதம் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்றார் அவர்.
நன்றி : தினமலர்


No comments: