Tuesday, March 10, 2009

பொருளாதார மந்தநிலை: ஏழை நாடுகள் அதோகதி

வளரும் நாடுகளின் பொருளாதாரம் மிகவும் மோசமாகும் என்று உலக வங்கி கணித்திருக்கிறது. தற்போது உலகம் முழுவதையும் பாதித்திருக்கும் பொருளாதார மந்தநிலை வளரும் நாடுகளில் நீண்டகாலப் பிரச்னையை ஏற்படுத்தும் என்றும் உலகவங்கி அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மிகவும் ஏழை நாடுகள் நிலைமை மீட்க முடியாத மோச நிலைக்கு செல்லக்கூடும் என்று கணிக்கப் பட்டிருக்கிறது. வரும் ஞாயிறன்று 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் அந்நாட் டின் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் சந்தித்து ஆலோசனை செய்யப் போகின்றனர்.
இதை ஒட்டி உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல் வருமாறு:
* இந்தியாவில் கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் வேலையிழந்தோர் எண்ணிக்கை ஐந்து லட்சம் பேர். ஆபரணத் தயாரிப்பு, ஆட்டோ துறை, மற்றும் ஜவுளித் துறை ஆகியவற்றில் வேலையிழந்திருக்கின்றனர். கம்போடியாவில் ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்ட 30 ஆயிரம் பேர் வேலை இழந்திருக்கின்றனர்.
* நடப்பாண்டில் வளரும் நாடுகள் சந்திக்கும் நிதிப்பற்றாக்குறை அளவு 3.5 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும். அதை அவர்கள் திரட்ட முடியாது. பாதிக்கப்படும் நாடுகளில் கால்வாசி நாடுகள் மட்டுமே ஓரளவு நிலைமையைச் சமாளித்து வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும்.
* வளரும் நாடுகள் பட்டியலில் 116 நாடுகள் உள்ளன. அதில், 94 நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் 43 நாடுகள் மிகவும் பிச்சைக்கார நாடுகளாக உள்ளன. இந்த நாடுகள் தங்கள் ஏழ்மையை அதிகரிக்காமல் தடுக்க தேவைப்படும் நிதியைக் கூட திரட்ட முடியாது.
* ஏழைமக்களை சொத்து என்று கருத வேண்டும், சுமை என்று கருதக்கூடாது. அதற்கேற்ப சிறு குழந்தைகளைப் பாதுகாப்பது, இளைஞர்களுக்கு கல்வி ,வேலைவாய்ப்பு ஆகியவை தேவை. அதற்கான நடைமுறைகளைக் கண்டறிய வேண்டும். இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த உலக வங்கி துணைத் தலைவர் ஜஸ்டின் இபு லின் கூறுகையில், 'வளர்ந்த நாடுகள் தங்களிடம் உள்ள கூடுதல் நிதியை ஏழை நாடுகளுக்கு வழங்குவதின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு காண முடியும் ' என்றிருக்கிறார்.
நன்றி : தினமலர்


No comments: