Saturday, January 3, 2009

ரிசர்வ் வங்கியின் இரண்டாவது கட்ட சலுகை

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் இரண்டாவது சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி, இந்திய பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான, இரண்டாவது சலுகை திட்டத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது. ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு வீதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. இந்த மாற்றம், இம் மாதம் 17ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
தற்போதைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேரியல் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி வீதம் (ரெப்போ ரேட்) 6.5 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது விரிவுப்படுத்தப்படும். வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 5.0 சதவீதத்தில் இருந்து 4.0 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. ரொக்க கையிருப்பு வீதம் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம், வங்கிகளில் பணப் புழக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, இதன் மூலம், வங்கிகளுக்கு மேலும் ரூ.20 ஆயிரம் கோடி கிடைக்கும். இந்திய கட்டுமான நிதிக் கழகம் தங்கள் நிதி ஆதாரத்தை மேலும் அதிகரித்து கொள்ள, வரிச்சலுகை அளிக்கும் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள் ளது. ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகை இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகள், இந்திய கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கூடுதலாக ரூ. 30 ஆயிரம் நிதி திரட்டவும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கூடுதலாக ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
நன்றி:தினமலர்


No comments: