Saturday, August 23, 2008

'பணவீக்கம் 13 சதவீதத்தை தாண்டாது'

'பணவீக்கம் எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டுவிட்டது. 13 சதவீதத்திற்குள்ளாக கட்டுப்படுத்தப்படும். இனிவரும் வாரங்களில் பணவீக்கம் குறையத் துவங்கும்' என, மத்திய வர்த்தக அமைச்சகச் செயலர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.நாட்டின் பணவீக்கம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த 9ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 12.63 சதவீதத்தை எட்டியுள்ளது. 13 சதவீதம் இன்னும் தொட்டும் விடும் தூரம் தான் என்று சொல்லும் அளவிற்குப் போய்க்கொண்டு இருக்கிறது. மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் குறித்து மும்பையில் நேற்று நடந்த சர்வதேசக் கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய வர்த்தக அமைச்சகச் செயலர் ஜி.கே.பிள்ளை கூறியதாவது:
அத்தியாவசியப் பொருட்கள் விலை குறித்த காபினட் கமிட்டி, தற்போதுள்ள விலைவாசி நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. விலையைக் கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோதுமை மற்றும் அரிசி கையிருப்பு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. சில உணவுப் பொருட்களின் விலை குறைந்து வருகிறது. தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய் கையிருப்பும் போதுமான அளவில் உள்ளது. எனவே, பணவீக்கம் இனி வரும் வாரங்களில் குறையத் துவங்கும். எந்த சூழ்நிலையிலும் 13 சதவீதத்திற்கு மேல் செல்லாது.விலைக்கான காபினட் கமிட்டி, அடுத்த வாரம் மீண்டும் கூடி விவாதிக்க உள்ளது.இவ்வாறு ஜி.கே.பிள்ளை கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: